காற்றைப் போல உணர்கிறேன் – மகளே உன்னை
கடும் வெயிலைப் போலும் நினைக்கிறேன்
ஊற்றினில் உன் முகம் காண்கிறேன் – மகளே உன்னை
உறுவெளி தன்னிலும் பார்கிறேன்
நாற்றினைப் போல என்மடிமீது – மகளே நீ
நடந்ததை எண்ணி மகிழ்கிறேன்
ஏற்றமெல்லாம் வாழ்விலே – மகளே உன்னால்
என்பதை நினைத்து சிலிர்க்கிறேன்
ஆற்றலில் ஆதவன் ஒளியினைப்போல் – மகளே உன்
அருகாமை எனக்கு என்கிறேன்
மாற்றுக் குறையா பொன்னிலும் – மகளே உன்
மனம்தான் உயர்ந்தது என்கிறேன்
நேற்று இன்று நாளை என – மகளே உன்னை
நினைத்து உலகம் வியந்திடுமே
சேற்றுத் தரையிலும் உன் பாதம் பட – மகளே அங்கு
செந்தாமரைப் பூக்கள் மலர்ந்திடுமே
போற்றுகிறேன் இன்று மகளிர் தினம் – மகளே உன்
பெருமை உலகம் உணர்ந்திடவே
சாற்றுகிறேன் இக்கவிதையினை – மகளே உன்
சாதனை உலகினை வென்றிடவே
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!