உப்பிருந்த பாண்டமும் உளவிருந்த நெஞ்சமும் தப்பிடாமல் தண்டுண்டு உடையும்

உப்பிருந்த பாண்டமும் உளவிருந்த நெஞ்சமும் தப்பிடாமல் தண்டுண்டு உடையும் என்ற பழமொழியை பாட்டி ஒருவர் சிறுவர்களுக்கு கூறுவதை காண்டாமிரும் கண்ணையன் கேட்டது.

ஆற்றங்கரையில் இருந்த புதருக்கு மறைவில் நின்று பாட்டியிடமிருந்து பழமொழிக்கு விளக்கம் ஏதேனும் கிடைக்குமா? என்று எண்ணியது. அதனால் ஆற்றங்கரையில் இருந்த கூட்டத்தினரை தொடர்ந்து கவனிக்கலானது.

கூட்டத்தில் இருந்த சிறுமி ஒருத்தி “பாட்டி இந்த பழமொழி வித்தியாசமாக இருக்கிறது. இதனை சற்று விளக்குங்கள்” என்று கேட்டாள்.

அதற்கு பாட்டி “ சரி நான் உங்களுக்கு விளக்குகிறேன். எந்த ஒரு பாண்டமும் (பாத்திரமும்) உப்பினால் நிறை பெற்றால் நாளடைவில் அது கெட்டு போகும். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதுவே இப்பழமொழிக்கான பாதிப் பொருளாகும்.” என்றாள்

அப்போது மற்றொரு சிறுமி எழுந்து “உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே! என்று ஒரு பழமொழியும் உண்டல்லவா?.” என்று கேட்டாள்.

அதற்கு பாட்டி பதில் சொன்னாள்.

உணவுப் பொருளுக்கு சுவை சேர்ப்பதற்காக உப்பை கலப்பது நமது சமையல் கலையில் பல ஆண்டு காலமாகவே இருந்து வருகிறது.
எவ்வளவு உயர்ந்த உணவை சமைத்து வைத்தாலும் உப்பில்லாமல் இருந்தால் உண்மையான ருசியை நாம் உணர முடிவதில்லை.

ஏன் காடுகளில் வாழும் சில வகை விலங்குகள் கூட உப்பை விரும்பி உண்ணும் வழக்கம் கொண்டுள்ளன.

வன போஜனத்திற்காக காட்டுக்குள் சென்று உணவு தயார் செய்யும்போது காடுகளில் வாழும் யானைகள் வந்தால் உப்பை மட்டும் விரும்பி உண்டு விட்டு சென்று விடும். இவையெல்லாம் உப்பின் பெருமையை உணர்த்துபவை.

உப்பினால் செய்யப்பட்ட உணவு பண்டங்களில் தலைமையிடம் பெறுவது காலம் கடந்து வாழும் ‘ஊறுகாய்” ஆகும்.

ஊறுகாய் – ஊறிய காய் – ஊறுகின்ற காய் – ஊறும் காய் – என இறந்த, நிகழ், எதிர்காலம் என்ற மூன்று காலங்களையும் கடந்தது இது. இந்த ஊறுகாயை போட்டு வைக்கும் பாத்திரம் கெட்டுப் போவது இயற்கையான ஒன்றுதான்.

இதுப்போலவே உளவிருந்த நெஞ்சமும் அதாவது கள்ள நெஞ்சம், வஞ்சக நெஞ்சம் என்று கூறும் நெஞ்சமும் கெட்டுவிடும்.

இதனால்தான் ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதார் உறவு கலவாமை வேண்டும்’ என்று வள்ளலார் இறைவனிடம் வேண்டுகின்றார்.

உளவிருந்த (வஞ்சக) நெஞ்சத்தை உடையவர்கள் தம்மையும் கெடுத்து, தம்மைச் சார்ந்தவர்களையும் கெடுத்து விடுவார்கள் என்பது வாழ்வியல் உண்மை. இதற்கு இராமாயண மாந்தரை (கூனி), மகாபாரத சகுனி உதாரணமாவர்.

“உப்பினை வைத்திருக்கும் பாத்திரமானது நாளடைவில் கெட்டு விடும். அதுபோல வஞ்சக நெஞ்சம் கொண்டோர் தானும் கெட்டு தன்னைச் சார்ந்தவர்களுக்கும் கெடுதல் உண்டாக்குவர். இதைக் கூறவே இந்தப் பழமொழி உருவானது.” என்று பாட்டி கூறினார்.

பழமொழி மற்றும் அதற்கான விளக்கத்தை அறிந்து கொண்ட காண்டாமிருகம் கண்ணையன் வேகமாக வட்டப்பாறையினை நோக்கி நடந்தது.

காண்டாமிருகம் கண்ணையன் வட்டப்பாறையினை அடைந்தபோது ஒரு சிலர் அங்கு இருந்தனர். இன்னும் சிலர் வட்டப்பாறைக்கு வந்து கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் காக்கை கருங்காலன் கூட்டத்திற்கு வந்தது. கூட்டத்தினரைப் பார்த்து “எல்லோரும் வந்து விட்டீர்களா?. இன்றைக்கான பழமொழி பற்றி தெரிந்து கொள்வோமா?” என்று கேட்டது.

கூட்டத்தினர் எல்லோரும் சேர்ந்து “எல்லோரும் வந்து விட்டோம். பழமொழி பற்றி தெரிந்து கொள்வோம்.” என்று கூறினர்.

காக்கை கருங்காலனும் “சரி. உங்களில் யார் இன்றைக்கு பழமொழி பற்றிக் கூறுகிறீர்கள்?” என்று கேட்டது.

காண்டாமிருகம் கண்ணையன் எழுந்து “தாத்தா நான் இன்றைக்கான பழமொழி மற்றும் அதன் விளக்கத்தைக் கூறுகிறேன்” என்றது.

காக்கை கருங்காலனும் “சரி என்ன பழமொழியை இன்று நீ கூறப்போகிறாய்?” என்று கேட்டது.

காண்டாமிருகம் கண்ணையன் “நான் இன்றைக்கு உப்பிருந்த பாண்டமும் உளவிருந்த நெஞ்சமும் தப்பிடாமல் தண்டுண்டு உடையும் என்ற பழமொழியைப் பற்றிக் கூறப்போகிறேன்” என்று தான் கேட்டவற்றை எல்லாம் விளக்கியது.

அணில் அன்னச்சாமி எழுந்து “யாரும் வஞ்ச நெஞ்சத்துடன் செயல்படக் கூடாது என்பதற்கு கண்ணையன் கூறிய பழமொழி நன்றாக இருந்தது. நாம் எல்லோரும் அதனைக் கடைப்பிடிப்போம்” என்று கூறியது.

காக்கை கருங்காலன் “குழந்தைகளே உங்களுக்கு கண்ணையன் கூறிய பழமொழி புரிந்தது என்பதை அன்னாச்சாமியின் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன். நாளை வேறு பழமொழி பற்றி தெரிந்து கொள்வோம்.” என்று கூறி எல்லோரையும் வழியனுப்பியது.

 இராசபாளையம் முருகேசன்     கைபேசி: 9865802942

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.