உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை-2016

இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை

மத்திய அரசு இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை தர வரிசை செய்து 04.04.2016 அன்று அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு வரை இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலானது பல தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வந்தது. இதில் உள் நோக்கம் கொண்டு தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மேலும் சர்வதேச அளவில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் சர்வதேச அளவில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் சர்வதேச தர வரிசைப் பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்கள் இடம் பெறுவதில்லை.

எனவே மேற்கூறிய குற்றச்சாட்டுகளை களையும் முயற்சியாக இந்திய உயர்கல்வி நிறுவனங்களை தரம் பிரித்து தரவரிசைப் பட்டியலை இந்தாண்டு மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்துவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். இப்பட்டியலை தயாரிப்பதற்காக தேசிய தர வரிசை நிர்ணய கமிட்டி என்ற அமைப்பினை ஏற்படுத்தி இருப்பதாக மத்திய அரசின் அங்கமான மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் 29.09.2015 அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டடுள்ளது.

தேசிய தர வரிசை நிறுவனம் இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை பொறியியல், மேலாண்மை, கட்டிடக் கலையியல் (ஆர்க்கிடெக்ச‌ர்), மருந்தியல், பல்கலைக் கழகங்கள் மற்றும் கலைகல்லூரிகள் என ஆறு வகைகளாகப் பிரித்து தனித்தனியே தரவரிசைப் பட்டியலைத் தயாரித்து வெளியிட முடிவு செய்து உள்ளது.

ஆனால் இந்த வருடம் கட்டிடக் கலையியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் பட்டியல் தயார் செய்ய போதிய விவரங்கள் கிடைக்கப் பெறாததால் அதற்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடவில்லை என்றும், ஏனையப் பிரிவுகளான பொறியியல், மேலாண்மை, மருந்தியல், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றின் தரவரிசைப் பட்டியல் தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசின் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரவரிசைப் பட்டியல் தயார் செய்ய கீழ்காணும் விவரங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன.

1.கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல் மற்றும் அதற்குத் தேவையான வளங்கள்

2.கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி, ஆலோசனை மற்றும் கூட்டுச் செயல் திறன்

3.கல்வி நிறுவனங்களிலிருந்து பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களின் திறமை (வேலை வாய்ப்பு, மேற்படிப்பு மற்றும் தொழில் முனையும் தன்மை, வேலை வாய்ப்பு மூலம் பெறும் சம்பளம்)

4. கல்வி நிறுவனங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் சதவீதம், கல்வி நிறுவனங்களில் பயிலும் பெண்கள் மற்றும் பணிபுரியும் பெண்களின் சதவீதம், கல்வி நிறுவனங்களில் பயிலும் சமூகத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களின் சதவீதம், கல்வி நிறுவனங்களில் பயிலும் உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள்.

5. சமானியர்களை மதிப்பீடு செய்யும் செயல்முறை, இருக்கை விகித பயன்பாடுகள் போன்ற விவரங்கள்.

கல்வி நிறுவனங்கள் மேற்காணும் விவரங்களின் படி ஆய்வு செய்யப்பட்டு 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்ற அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் தர வரிசைப்பட்டியல் தயார் செய்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது மாணவர் மற்றும் அவர்களின் பொற்றோர்களுக்கு கல்லூரியைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாக இருக்கும். மேலும் அடுத்தாண்டு முதல் அதிகப் பிரிவுகளின் கீழ் நாட்டின் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் தரம் பிரிக்கப்படும்.

இப்பணியை மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய சான்றளிக்கும் அமைப்பான என்.பி.ஏ மேற்கொள்ள உள்ளது என்ற விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள் தங்களின் கட்டிட வசதி, ஆய்வுக்கூட வசதி, ஆசிரியர்களின் கல்வித் தகுதி, அனுபவம், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், ரேங்க் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தங்கள் இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.

பின் விவரங்களை நேரில் ஆய்வு செய்து உறுதிபடுத்திய பின் தரவரிசை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று தேசிய தரவரிசை நிர்ணயக் கமிட்டி தெரிவித்துள்ளது.

2016-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள தர வரிசைப் பட்டியலில் பல்கலைகழகங்களில் இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களுர் 91.81 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், பொறியியல் பிரிவில் இந்திய தொழில்நுட்ப கழகம், சென்னை 89.42 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மேலாண்மைப் பிரிவில் இந்திய மேலாண்மை நிறுவனம், பெங்களுர் 93.04 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மருந்தியல் பிரிவில் மணிப்பால் மருந்து அறிவியல் கல்லூரி, மணிப்பால் 77.87 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும் பிடித்துள்ளன.

 

உயர்கல்வி தரவரிசை 2016

பல்கலைக் கழகங்கள்

பல்கலைக் கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் 100 இடங்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மொத்தம் 15 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவை

 

வரிசை எண் பெயர் மதிப்பெண் ரேங்க்
1 பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் 74.32 14
2 அமிர்தா விஸ்வவித்யா பீடம், கோயம்புத்தூர் 71.03 19
3 தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை 64.23 36
4 தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி, கோயம்புத்தூர் 63.66 40
5 சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 62.46 42
6 எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 62.29 43
7 பெரியார் பல்கலைக் கழகம், சேலம் 60.99 47
8 காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனம், கோயம்புத்தூர் 60.85 48
9 அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி 60.63 49
10 கலசலிங்கம் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி, திருவில்லிபுத்தூர் 60.27 52
11 அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் 57.58 57
12 ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை 57.36 58
13 தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம், திருவாரூர் 55.37 67
14 நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையம், கன்னியாகுமரி 53.42 75
15 செட்டிநாடு ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாடாமி, சென்னை 47.05 100

 

 

மேலாண்மை நிறுவனங்கள்

மேலாண்மை தரவரிசைப் பட்டியலில் 50 இடங்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மொத்தம் 9 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவை

 

வரிசை எண் பெயர் மதிப்பெண் ரேங்க்
1 இந்தியன் மேலாண்மை நிறுவனம், திருச்சிராப்பள்ளி 75.23 14
2 தியாகராசர் மேலாண்மைப் பள்ளி, மதுரை 74.68 15
3 வேலூர் தொழில்நுட்ப நிறுவனம், வேலூர் 73.00 17
4 கிரேட் லேக் மேலாண்மை நிறுவனம், மணமை கிராமம் 63.51 31
5 எஸ்.எஸ்.என் மேலாண்மைப் பள்ளி, காலவாக்கம் 61.76 33
6 தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி 60.65 34
7 ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் 57.77 41
8 அதியமான் பொறியியல் கல்லூரி, ஓசூர் 56.44 42
9 ஆர்.வி.எஸ் தொழில்நுட்ப வளாகம் 53.95 47

 

 

மருந்தியல் நிறுவனங்கள்

மருந்தியல் தரவரிசைப் பட்டியலில் 50 இடங்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மொத்தம் 7 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவை

 

வரிசை எண் பெயர் மதிப்பெண் ரேங்க்
1 ஜெ.எஸ்.எஸ் மருந்தியல் கல்லூரி, உதகமண்டலம் 63.29 9
2 பி.எஸ்.ஜி மருந்தியல் கல்லூரி, கோயம்புத்தூர் 61.30 11
3 பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி 53.17 27
4 நந்தா மருந்தியல் கல்லூரி, ஈரோடு 52.35 32
5 விநாயகா மிசன் மருந்தியல் கல்லூரி, கொண்டப்பன்நாயக்கன்பட்டி 51.43 35
6 ஜெ.கே.கே. நடராஜா மருந்தியல் கல்லூரி, குமாரப்பாளையம் 49.56 45
7 மருந்தியல் கல்லூரி மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்னை 48.00 50

 

 

பொறியியல் நிறுவனங்கள்

பொறியியல் தரவரிசைப் பட்டியலில் 100 இடங்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மொத்தம் 20 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவை

 

வரிசை எண் பெயர் மதிப்பெண் ரேங்க்
1 இந்திய தொழில் நுட்ப கழகம், சென்னை 89.42 1
2 தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளி 74.45 12
3 வேலூர் தொழில்நுட்ப கழகம், வேலூர் 74.40 13
4 பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கழகம், கோயம்புத்தூர் 67.80 24
5 தியாகராசர் தொழில்நுட்ப கல்லூரி, மதுரை 66.51 29
6 கோயம்புத்தூர் தொழில்நுட்ப கழகம், கோயம்புத்தூர் 62.58 34
7 சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அகாடமி, (சாஸ்திரா), தஞ்சாவூர் 61.11 40
8 காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், கோயம்புத்தூர் 59.29 44
9 கொங்கு பொறியியல் கல்லூரி, பெருந்துறை 59.06 46
10 சோனா தொழில்நுட்பக் கல்லூரி, சேலம் 58.97 47
11 அமிர்தா விஸ்வ வித்யா பீடம், எட்டிமடை 58.78 50
12 குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, கோயம்புத்தூர் 58.44 53
13 பி.எஸ்.அப்துல் ரகுமான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 57.80 54
14 பன்னாரி அம்மன் தொழில்நுட்ப நிறுவனம், சத்தியமங்கலம் 56.21 62
15 நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையம், கன்னியாகுமரி 55.45 66
16 இந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம் 54.32 72
17 இந்தியன் தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு உற்பத்தி கழகம், காஞ்சிபுரம், சென்னை 52.64 80
18 ஸ்ரீ ராம கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் 50.55 90
19 அதியமான் பொறியியல் கல்லூரி, ஓசூர் 50.04 94
20 ஆனந்த் தொழில்நுட்ப கழகம், சென்னை 49.41 98

 

இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் உலகத் தரம் வாய்ந்த கல்விக்கு வித்திடுவதோடு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவும் அரசு எடுத்துள்ள முதல் முயற்சியைப் பாராட்ட வேண்டும். தொடர் முயற்சிகள் மூலம் உலகத் தரம் வாய்ந்த கல்வியை இந்தியாவில் கிடைக்கச் செய்வது அரசின் கடமையாகும்.

– வ.முனீஸ்வரன்

 

Comments

“உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை-2016” மீது ஒரு மறுமொழி

  1. பெயரிலி

    Timely Article Thanks to Inithu Magazine And the Author.
    -KamarajSir

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.