உயிர்வளி (ஆக்சிஜன்) நல்கும் நன்மைகள்

உயிர்வளி என்றால் ஆக்சிஜன் என்று அர்த்தம். உணவு, உடை, உறைவிடம் இவை அனைத்தையும் விட உயிர் வாழ முக்கியமானது உயிர்வளி என்று அழைக்கப்படும் ஆக்சிஜன் ஆகும்.

காற்று மண்டலத்தில் ஐந்தில் ஒரு பங்கான ஆக்சிஜனானது சுவாசிப்பதற்கு மட்டுமல்லாமல், வேறு சிலகாரணங்களாலும், உயிரினங்களின் வாழ்வில் பெரும்பங்கு வகிக்கிறது. வாருங்கள், இதன் பயன்பாடுகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

 

அன்றாட செயல்பாடுகளுக்கு

நமது எல்லா செயல்களுக்கும் ஆற்றலானது தேவைப்படுகிறது. இதே போன்று விலங்குகளின் செயல்பாடுகளுக்கும் ஆற்றல் அத்தியாவசியமானது. இவ்வாற்றலை, நாமும், விலங்குகளும் எப்படி அடைகிறோம்?

புலி

உண்ணும் உணவிலிருந்து! அதாவது, உட்கொண்ட உணவு செரிமானம் அடைந்து ஆற்றலை தருகிறது.

உணவு செரிமானம் அடைவதற்கு ஆக்சிஜனானது தேவைப்படுகிறது. அதாவது, ஆக்சிஜன் உணவுடன் வினைபட்டு, உணவினை ஆற்றலாக மாற்றுகிறது. எனவேதான், நாம் ஆக்சிஜனை மட்டும் சுவாசிக்கிறோம். சுமார் 80% ஆற்றலை, ஆக்சிஜனின் மூலமாகவே நாம் பெறுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

 

அப்படின்னா, நீரில் வாழும் மீன் உள்ளிட்ட விலங்கினங்களுக்கும் ஆக்சிஜன் தேவைப்படுமே!  இது எப்படி சாத்தியம்? ஆக்சிஜன் நீரில் கரையுமா?ன்னு கேள்வி எழலாம்.

இதற்கு பதில் ஆம், ஆக்சிஜன் நீரில் கரையும். பொதுவாக, எல்லா வாயுக்களும் நீரில் கரையாது. அம்மோனியா போன்ற ஒரு சில வாயுக்கள் மட்டுமே நீரில் நன்கு கரையும் தன்மை பெற்றவை.

ஆக்சிஜனானது மிககுறைந்த அளவே நீரில் கரையும் தன்மையை பெற்றிருக்கிறது. எந்த அளவுக்கு என்றால், நீர்வாழ் விலங்கினங்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற அளவு!. இயற்கை எல்லாவற்றையும் கச்சிதமாக அமைத்திருப்பதற்கு இதுவும் ஒருசான்று.

 

தாவரங்களின் வளர்ச்சிக்கு

தாவரங்களுக்கும் ஆக்சிஜனின் தேவை உண்டு. ஆம், தாவரங்கள் வளர்வதற்கும் ஆற்றல் தேவைப்படும் இல்லையா? இந்த ஆற்றலை விலங்குகளைப் போன்றே, இவைகளும் உணவு செரித்தல் மூலமாகத்தான் பெறுகின்றன‌.

இலை

வித்தியாசம் என்னவெனில், விலங்குகள் எப்பொழுதும் ஆக்சிஜனை சுவாசிக்கும். தாவரங்களோ, இரவுப்பொழுதில் மட்டும் ஆக்சிஜனை சுவாசிக்கும்.

 

நோய்களை எதிர்கொள்ள

தற்கால வாழ்க்கை முறையினால் வரும் மனஅழுத்தம், அமிலத்தன்மை, மற்றும் சிலவகை பாக்டீரியங்களினால் வரும் நோய்களை ஆக்சிஜன் கட்டுப்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எனவே, போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைத்தால், நாம், ஆரோக்கியத்துடன் வாழமுடியும் என்று கருதுகின்றனர் ஆய்வாளர்கள். மேலும், நிமோனியா, எம்பிசீமா, ஹைப்போதெர்மியா உள்ளிட்ட சிலநோய்களின் சிகிச்சையிலும், ஆக்சிஜனின் தேவை அளப்பரியது.

தியானம்
தியானம்

நம் முன்னோர்கள், நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்ததற்கான காரணம், ஆக்சிஜன்தான்னு விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆமாம், அக்காலத்துல, காற்று மண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு 40%  இருந்ததால், இது சாத்தியமாச்சுன்னு கூறுகிறார்கள்.

 

ஆற்றல்  உற்பத்தி

’மின்சாரமின்றி எதுவும் இயங்காது’ என்றும் கூறலாம். அந்த அளவிற்கு, மின்சாதன பொருட்கள் நம்மைச் சூழ்ந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், இச்சாதனங்கள் இன்றி நாம் இயங்குவதும் மிககடினம். எனவே, தேவையான மின்சார உற்பத்தி அவசியம்.

தற்காலத்தில், பெரும் சதவிகித மின்னுற்பத்தியானது, நிலக்கரியை எரித்து வரும் வெப்ப ஆற்றலில் இருந்து பெறப்படுகிறது. எரித்தல் வினைக்கு ஆக்ஸிஜன் அவசியம்.

பஜாஜ் வி15

இந்நவீன உலகத்தில் வாகனங்களின் பங்கு இன்றியமையாதது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த வாகனங்கள் இயங்குவதற்கு பெட்ரோல், டீசல் முதலிய எரிபொருட்கள் அவசியம். எரிபொருட்கள் ஆக்ஸிஜன் முன்னிலையில் எரிந்து வாகனங்கள் இயங்குவதற்கு தேவையான ஆற்றலைத் தருகின்றன.

 

தொழிற்துறை பயன்பாடு

வீட்டின் ஜன்னல், கதவு தாழ்பாள், ஆணி உள்ளிட்ட பல பொருட்கள் இரும்பினால் ஆனவை. சமைக்க பயன்படும் பாத்திரங்கள், ’ஸ்டீல்‘ எனப்படும் இரும்பின் உலோக கூழ்மமாகும்.

இத்தகைய பயனுக்குரிய இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரிக்கும் முறையில் ஆக்ஸிஜன் பயன்படுகிறது. தவிர, காகித உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட முறையிலும் ஆக்சிஜனின் தேவை இன்றியமையாதது.

மேலும், உலோகங்களை வெட்டி ஒட்டும் வெல்டிங் முறையிலும், எண்ண‌‌ற்ற வேதிப்பொருட்கள் தயாரிப்பிலும், ராக்கெட் எரிபொருளிலும், ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிக்கிறது.

வெல்டிங்
வெல்டிங்

மருத்துவ உபகரணங்களை சுத்தம் செய்யும் கிருமிநாசினிகளை உற்பத்தி செய்யவும் ஆக்சிஜன் உபயோகப்படுகிறது.

விண்வெளி வீர்கள், உயரமான மலை ஏறுபவர்கள் மற்றும் ஆழ்கடல் நீச்சல் வீர்களும் சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் டாங்குகளை பயன்படுத்துகின்றனர்.

பாலியெஸ்டர் எனும் செயற்கை பலபடி மூலக்கூறு தயாரிக்கவும் இது தேவைப்படுகிறது. பாலியெஸ்டரைக் கொண்டு தற்கால உடைகள் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணுக்கு தெரியாத ஆக்சிஜன் உயிரினங்களை வாழவைக்கிறது என்பதை அறியும் பொழுது, இயற்கையின் பிரம்மாண்டமான அறிவியலை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. இதனை எல்லாம் உணர்ந்த தமிழர்கள், ஆக்சிஜனுக்கு ’உயிர்வளி’ என்று பெயரிட்டு இருப்பதும் சாலச் சிறந்ததே!

– முனைவர்.ஆர்.சுரேஷ்
ஆராய்ச்சியாளர்
பகுப்பாய்வு மற்றும் க‌னிம வேதியியல் துறை
கன்செப்ஷன் ப‌ல்கலைக்கழகம், சிலி
sureshinorg@gmail.com

 

 

One Reply to “உயிர்வளி (ஆக்சிஜன்) நல்கும் நன்மைகள்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.