உருளைக்கிழங்கு குருமா பிரபலமான உணவு வகை ஆகும். சப்பாத்தி, பூரி, சாதம், இடியாப்பம் என எல்லாவற்றிற்கும் தொட்டுக் கொள்ள இக்குருமா மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
எளிமையான சுவையான உருளைக்கிழங்கு குருமா செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – ¼ கிலோ கிராம்
பெரிய வெங்காயம் – 100 கிராம்
கொத்த மல்லி இலை – 3 தண்டு
அரைக்க
தேங்காய் – ½ மூடி (மீடியம் சைஸ்)
மல்லித் தூள் – 1 ஸ்பூன்
சீரகத் தூள் – ½ ஸ்பூன்
வத்தல் தூள் – ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
கடுகு – ½ ஸ்பூன்
கறிவேப்பிலை – 4 கீற்று
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயைத் திருகிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை நீரில் அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கொத்த மல்லியை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வேக வைத்த உருளைக்கிழங்கை மீடியம் சைஸில் சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
மிக்ஸியில் துருவிய தேங்காய், மல்லித் தூள், சீரகத் தூள், வத்தல் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து மசால் தயார் செய்து கொள்ளவும்.
குக்கரில் நல்ல எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்து கொள்ளவும்.
பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், அரைத்து வைத்துள்ள மசாலா, தேவையான தண்ணீர், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
பின் கலவையை நன்கு கிளறி குக்கரை மூடி விசில் போடவும். ஒரு விசில் வந்தவுடன் அடுப்பின் தணலை சிம்மில் வைக்கவும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து பொடியாக நறுக்கிய கொத்த மல்லி இலைகளைச் சேர்க்கவும்.
சுவையான உருளைக்கிழங்கு குருமா தயார்.
இதனை எல்லோரும் விரும்பி உண்பர். சப்பாத்தி மற்றும் இடியாப்பத்திற்கு இது தொட்டுக் கொள்ள மிகவும் பொருத்தமானதாகும்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மல்லித் தூள், வத்தல் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள் ஆகியவற்றிற்குப் பதிலாக மசாலா பொடி 2 ஸ்பூன் சேர்த்து மசால் தயார் செய்யலாம்.
–ஜான்சிராணி வேலாயுதம்
Super. Most people like this.
Super and very tasty