உருவத்தை கண்டு எடை போடாதே – சிறுவர் கதை

உருவத்தை கண்டு எடை போடாதே

மனிதர்கள் பொதுவாக புதிதாக சந்திக்கும் மற்ற மனிதர்களை அவர்களின் உருவம், உடை உள்ளிட்ட வெளிப்புறத் தோற்றங்களை வைத்தே மதிப்பீடு செய்கின்றனர்.

அவ்வாறு செய்யும் மதிப்பீடு தவறானது என்பதை விளக்கும் கதையே உருவத்தை கண்டு எடை போடாதே. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

 

பச்சை வனம் என்ற காட்டில் குதிரை ஒன்று வசித்து வந்தது. அது கொழு கொழுவென பார்ப்பதற்கு அழகாக இருந்தது.

குதிரை, அதனுடைய அழகு மற்றும் வேகத்தினைப் பற்றி எப்போதும் பெருமையாகவே எண்ணிக் கொள்ளும். தன்னைவிட இந்த உலகில் யாரும் வேகமாக ஓட முடியாது என்று தன்னைப் பற்றி தற்பெருமை கொள்ளும்.

ஒருநாள் காலையில் குதிரை வயிரார உண்டுவிட்டு கம்பீரமாக நடந்து கொண்டிருந்தது. வழியில் நத்தை ஒன்று மெதுவாக ஊர்ந்து செல்வதைப் பார்த்தது. நத்தையின் வேகம் மற்றும் அதனுடைய உருவம் அதற்கு சிரிப்பை வரவழைத்தது.

குதிரை நத்தையைப் பார்த்து “ஏய், நத்தையே என்ன மெதுவாகச் செல்கிறாய்?. இப்படிச் சென்றால் அங்கே தெரியும் மரத்தினைத் தொடுவதற்குள் இன்று இரவு பொழுதே வந்துவிடும்.”என்று கூறி பலமாகச் சிரித்தது.

குதிரை பேசுவதைக் கேட்டதும் நத்தை ஏதும் பேசாது அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தது. குதிரையோ அதனை விடுவதாக இல்லை.

“என்னைப் பார். என்னுடைய வலிமையான கால்களைப் பார். என்னைப் போல் வேகமாக ஓடுபவன் இந்த உலகத்தில் யாரும் இல்லை.” என்று பெருமையாகக் கூறியது.

நத்தை குதிரையின் தற்பெருமை குணத்தை தெரிந்து கொண்டது. அப்போதும் நத்தை அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தது.

நத்தை ஏதும் பேசாமல் நகர்ந்து கொண்டிருப்பதைக் கண்டதும் குதிரைக்கு கோபம் வந்தது.

அதிவேகமாக ஓடும் என்னை மதிக்காமல், என்னுடைய கேள்விக்கும் பதிலளிக்காமல் செல்லும் இந்த நத்தையை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று மனதிற்குள் குதிரை எண்ணியது.

“நான் பேசி கொண்டே இருக்கிறேன். நீயோ எதையும் சட்டை செய்யாமல் நகர்ந்து கொண்டே இருக்கிறாய். வலிமையான என்னுடன் நீ ஓட்டப் போட்டிக்கு தயாரா?” என்று குதிரை கேட்டது.

நத்தையையும் தற்பெருமை மிக்க குதிரைக்கு தக்க பாடம் புகட்ட எண்ணியது. “சரி, நான் உன்னுடன் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்கிறேன்.” என்று கூறியது.

இருவரும் இரண்டு வாரங்கள் கழித்து ஒருநாள் ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்வது என்று ஒப்பந்தம் செய்து கொண்டன.

 

நத்தை தன்னுடைய கூட்டத்தினரை சந்தித்தது. தற்பெருமை மிக்க குதிரையை எப்படியாவது தோற்றகடிக்க வேண்டும் என்று தனது கூட்டத்தினரிடம் தெரிவித்தது.

அதனைக் கேட்டதும் கூட்டத்தில் இருந்த வயதான நத்தை “நீ வெற்றி பெற வேண்டுமானால் நமது புத்தியை உபயோகிக்க வேண்டும். அதற்கு நம்முடைய உருவ ஒற்றுமை உதவும்.

நீ ஓட்டப் பந்தயத்தில் வெல்வதற்கு ஓர் வழியை கூறுகிறேன். ஓட்டப் பந்தயப் பாதையில் உள்ள கல், மண், செடி உள்ளிட்ட மறைவிடங்களில் ஒவ்வொருவராக ஒளிந்து கொள்ளுங்கள்.

குதிரையின் காலடி ஓசைக் கேட்டதும் அதற்கு முன்னால் ஊர்ந்து செல்லுங்கள். நீ எல்லை கோட்டு அருகே மறைந்து கொள். குதிரை எல்லைக்கோடு அருகே வரும்போது நீ எல்லைக்கோட்டில் நில்.” என்று தன்னுடைய திட்டத்தை கூட்டத்தாருக்கு விவரித்தது.

கூட்டத்தாரும் வயதான நத்தை சொன்னதுபடி நடப்பது என்று முடிவு செய்தன.

 

ஓட்டப்பந்தய நாளைக்கு முந்தைய நாளிலேயே நத்தை கூட்டத்தில் இருந்த ஒவ்வோர் நத்தையும் ஓட்டப்பந்தயப் பாதையில் உள்ள கல், செடி, மணல் உள்ளிட்ட தடுப்புகளின் பின்னே ஒளிந்து கொண்டன.

குதிரையிடம் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதாகக் கூறிய நத்தை எல்லைக்கோடு அருகே மறைந்திருந்தது.

குதிரை காலையில் ஓட்டப்பந்தயம் நடைபெறும் இடத்திற்கு வந்தது.

அங்கே குதிரையை எதிர்நோக்கி நத்தைக் கூட்டத்தைச் சார்ந்த ஒரு நத்தை தயாராக இருந்தது. போட்டி ஆரம்பமானது. நத்தை மெதுவாக நகர ஆரம்பித்தது.

அதனைக் கண்ட குதிரை மனதிற்குள் சிரித்துக் கொண்டே கம்பீரமாக நடக்கத் தொடங்கியது.

சிறிது தூரம் சென்றதும் குதிரை குனிந்து பார்த்தது. குதிரைக்கு முன்னால் நத்தை ஊர்ந்து செல்வதைக் கண்டது.

உடனே குதிரை ஓடத் தொடங்கியது. சிறிது நேரத்திற்கு பின்னர் குனிந்து பார்த்தது. அப்போதும் குதிரைக்கு முன்னால் நத்தை ஊர்ந்து செல்வதைக் கண்டது. உடனே குதிரை வேகமாக ஓடியது.

எல்லைக்கோட்டருகே குதிரை சென்ற போது, எல்லைக்கோட்டைக் கடந்து நத்தை நிற்பதைக் கண்டது.

உடனே குதிரை தன்னுடைய மனதிற்குள் உருவத்தை கண்டு எடை போடாதே என்று சொல்லிக் கொண்டது. தோல்வியால் வெட்கி தலைகுனிந்தது.

நாம் எப்போதும் ஒருவரை அவருடைய உருத்தை வைத்து எடை போடக் கூடாது. தற்பெருமையும் கொள்ளக் கூடாது. இல்லையெனில் குதிரையின் நிலைமைதான் நமக்கும் உண்டாகும்.

 

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.