உலகின் டாப் 10 பெரிய தீவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தீவுகள் என்பவை நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டவை ஆகும்.
ஆஸ்திரேலியா உலகின் மிகப்பெரிய தீவாக இருந்தாலும், அது கண்டமாகவே கருதப்படுகிறது. இனி டாப் 10 பெரிய தீவுகள் பற்றிப் பார்ப்போம்.
கிரீன்லாந்து

21,30,800 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்ட கிரீன்லாந்து, உலகின் மிகப்பெரிய தீவாகும். இது வட அமெரிக்க கண்டத்தில், அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ளது.
இதனுடைய 80சதவீதப்பகுதி பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளது. எனவே மிகக்குறைவான மக்கள்தொகையையே கொண்டுள்ளது.
அன்டார்டிக்காவை அடுத்து இங்கே அதிகளவு பனி காணப்படுகிறது. கிரீன்லாந்தின் நகரங்கள் சாலைகளால் இணைக்கப்படவில்லை.
இங்குள்ள மக்கள் சீல், திமிங்கலம் மற்றும் மீன்கள் ஆகியவற்றைப் பிடித்தலை முக்கிய தொழிலாகக் கொண்டுள்ளனர்.
கிரீன்லாந்தில் உள்ள லுலிசாட் பனிக்கட்டி துருவப்பகுதிக்கு வெளியே உள்ள மிகப்பெரிய பனிப்பாறை ஆகும்.
நியூகினி
நியூகினி
7,85,783 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்ட நியூகினி, உலகின் இரண்டாவது மிகப்பெரிய தீவாகும்.
மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள இத்தீவின் கிழக்குப்பகுதி பாப்பு நியூகினியாலும், மேற்குப்பகுதி இந்தோனேசியாவாலும் நிர்வகிக்கப்படுகின்றன.
இத்தீவில் உயரமான மலைகள் அதிகம் காணப்படுகின்றன. 16,503 அடி உயரம் உள்ள ஜெயா சிகரம் இத்தீவின் உயரமான பகுதியாகும். சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் இத்தீவில் வசித்துள்ளனர்.
இத்தீவில் தங்கம் மற்றும் தாமிர கனிமங்கள் அதிகளவு உள்ளன. அழகான பறவை இனங்களின் சொர்க்கமாக இத்தீவு விளங்குகிறது.
போர்னியோ

7,48,168 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்ட போர்னியோ, உலகின் மூன்றாவது பெரிய தீவாகும்.
மத்திய மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இத்தீவின் 73 சதவீதம் இந்தோனேசியாலும், 26 சதவீதம் மலேசியாவாலும் மற்றும் 1 சதவீதம் புரூனேவாலும் ஆட்சி செய்யப்படுகிறது.
இத்தீவில் உள்ள மழைக்காடுகள், உலகின் மிகப்பழமையான மழைக்காடுகள் ஆகும். 15,000 வகையான தாவரங்கள், 221 வகையான பாலூட்டிகள் மற்றும் 420 வகையான பறவைகள் ஆகியவை இத்தீவில் வசிக்கின்றன.
தென்கிழக்கு ஆசியாவின் மிகஉயரமான சிகரமான கிமாபாலு இத்தீவில் அமைந்துள்ளது.
போர்னியா உராங்குட்டான், தயக் பழ வெளவால்கள் இத்தீவில் மட்டுமே காணப்படுகின்றன.
மடகாஸ்கர்

5,87,713 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்ட மடகாஸ்கர், உலகின் நான்காவது பெரிய தீவாகும். இது இந்திய பெருங்கடலில், ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கு கடற்கரையினை ஒட்டி அமைந்துள்ளது.
இது இந்திய துணைக்கண்டத்திலிருந்து, சுமார் 88 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் பிரிந்து சென்றதாக கருதப்படுகிறது.
இத்தீவு தனித்துவமான விலங்குகள் மற்றும் தாவரங்களின் இருப்பிடமாகும். ஆதலால் இது எட்டாவது கண்டம் அல்லது மாற்று உலகம் என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது.
இத்தீவில் 2,50,000 வகையிலான விலங்குகள் காணப்படுகின்றன. இவற்றுள் 70 சதவீதம் இத்தீவில் மட்டுமே உள்ளன. இங்குள்ள 14,000 விதமான தாவரங்களில் 90 சதவீதம் இத்தீவில் மட்டுமே காணப்படுபவை.
இத்தீவின் தென்மேற்கு பகுதியில் உள்ள டோலியாரா பவளப்பாறைகள், உலகின் மூன்றாவது பெரிய பவளப்பாறையாகும்.
பாஃபின் தீவு
பாஃபின் தீவு
5,07,451 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்டு வடக்கு அட்லாண்டிக் கடற்பகுதியில் உள்ள பாஃபின், உலகின் ஐந்தாவது பெரிய தீவாகும்.
இது நுனாவுட் பிரதேசத்தில் அமைந்துள்ள கனடாவின் மிகப்பெரிய தீவாகும். ஆர்டிக் தீவுக் கூட்டத்தில் உள்ள இத்தீவு -8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் மிகவும் குளிரான காலநிலையைப் பெறுகிறது.
இத்தீவில் மலையிடக் கடல் மற்றும் நன்னீர்நிலைகள் அதிகம் காணப்படுகின்றன.
துருவக்கரடிகள், ஆர்டிக் ஓநாய்கள், லெம்மின்ஸ்கள் ஆகியவை இங்கு வாழ்கின்றன.
சுமத்ரா தீவு
சுமத்ரா தீவு
4,80,848 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்டு இந்தியப்பெருங்கடலின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சுமத்ரா தீவு, உலகின் ஆறாவது பெரிய தீவாகும்.
இந்தோனேசியா தீவுக்கூட்டத்தில் மேற்கு திசையில் உள்ள இது, இந்தேனேசியாவில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய தீவு ஆகும்.
இத்தீவானது இந்தோ-ஆஸ்திரேலியன் மற்றம் யுரேசியன் தட்டுகளுக்கு இடையில் அமைந்துள்ளதால், இது சுனாமி மற்றும் நிலநடுக்கத்திற்கு பேர் போனது.
எனினும் இத்தீவு மழைக்காடுகள் மற்றும் ஆச்சர்யமூட்டும் விலங்குகளுகளின் இருப்பிடமாக உள்ளது.
இத்தீவில் தங்கம் மற்றும் வெள்ளி கனிமங்கள், எண்ணெய் வித்துக்கள், நிலக்கரி வயல்கள் ஆகியவை அதிகளவுள்ளன.
ஹொன்ஷு
ஹொன்ஷு
2,25,800 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்டு ஜப்பானின் மிகப்பெரிய தீவான ஹொன்ஷு, உலகின் ஏழாவது மிகப்பெரிய தீவாகும்.
இது பசிபிக் பெருங்கடல் மற்றும் ஜப்பான் கடலுக்கு இடையில் அமைந்துள்ளது. இது ஜப்பானின் மொத்த அளவில் 60 சதவீதம் ஆகும்.
இத்தீவில் டோக்கியோ, கியோட்டோ, ஹிரோஷிமா, யோகோகாமா மற்றும் ஒசாகா போன்ற ஜப்பானின் முக்கிய நகரங்கள் அமைந்துள்ளன.
ஜாவாவிற்கு அடுத்தபடியாக, அதிகளவு மக்கள்தொகையை கொண்ட இரண்டாவது பெரிய தீவு இது.
ஜப்பானின் பெரிய மலையான புஜி மலை மற்றும் பெரிய ஏரியான பைவா ஏரி ஆகியவை இத்தீவில் அமைந்துள்ளன.
விக்டோரியா தீவு
விக்டோரியா தீவு
2,17,291 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்டு கனடாவின் இரண்டாவது பெரிய தீவான விக்டோரியா தீவு, உலகின் எட்டாவது மிகப்பெரிய தீவாகும்.
இந்த தீவை ஆர்டிக் ஆய்வாளர் தாமஸ் சிம்ப்சன் 1838-ல் கண்டுபிடித்தார்.
விக்டோரியா பேரரசியின் நினைவாக இத்தீவிற்கு, விக்டோரியா தீவு எனப் பெயரிடப்பட்டது.
கத்தூரி எருது, துருவ மான் ஆகியவை விக்டோரியா தீவில் அதிகளவு காணப்படுகின்றன.
கிரேட் பிரிட்டன் தீவு
கிரேட் பிரிட்டன் தீவு
2,09,331 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்டு ஐரோப்பாவின் பெரிய தீவான கிரேட் பிரிட்டன் , உலகின் ஒன்பதாவது பெரிய தீவாகும்.
இது ஐக்கிய ராச்சியத்தின் ஒரு பகுதியாகும். இத்தீவு 1000 தீவுகளால் சூழப்பட்டுள்ளது.
மனிதர்கள் இத்தீவினை சுமார் 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பே தங்களின் வசிப்பிடமாகக் கொண்டிருந்தனர்.
ஆண்டு முழுவதும் இங்கு இனிமையான காலநிலை இங்கு நிலவுகிறது. லண்டன் மாநகரம் இத்தீவில் அமைந்துள்ளது.
எல்லெஸ்மியர் தீவு
எல்லெஸ்மியர் தீவு
1,96,236 சதுர கிலோமீட்டர் பரப்பினைக் கொண்டு கனடாவின் மூன்றாவது பெரிய தீவான எல்லெஸ்மியர் தீவு, உலகின் பத்தாவது பெரிய தீவாகும்.
இது கனடாவின் நுனாவுட் மகாணாத்தில் அமைந்துள்ளது. இத்தீவு முழுவதும் கம்பீரமான மலைகள் மற்றும் ஐஸ் வயல்கள் நிரம்பி உள்ளன.
இத்தீவில் உள்ள மலைகள் 1,00,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. ஆர்டிக் வில்லோ எனப்படும் மரவகை மட்டுமே, இத்தீவில் காணப்படும் தாவர வகையாகும்.
உலகின் டாப் 10 பெரிய தீவுகள் என்ற பட்டியலில், கனடாவின் முதல் மூன்று பெரிய தீவுகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் இப்பட்டியலில் வடஅமெரிக்க கண்டத்தில் நான்கு தீவுகளும், ஆசிய கண்டத்தின் நான்கு தீவுகளும், ஆப்பிரிக்காவின் ஒரு தீவும், ஐரோப்பாவின் ஒரு தீவும் இடம்பெற்றுள்ளன.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!