உளுந்தம் பருப்பு குழம்பு எங்கள் ஊரில் பிரபலமான ஒன்று. உளுந்தம் பருப்பு இறைச்சிக்கு இணையான சத்துக்களைக் கொண்டிருப்பதாகவும், ஆதலால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எங்கள் பாட்டி கூறுவார்.
உளுந்தம் பருப்பு வயிற்றுப் புண்ணினை ஆற்றும் தன்மை உடையது. பிரதோச விரதமுறையை மேற்கொள்ளுபவர்கள் இதனை சமைத்து உண்டு தங்களது விரத வழிபாட்டினை முடிப்பர்.
இனி எளிமையாக உளுந்தம் பருப்பு குழம்பு செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உளுந்தம் பருப்பு (தோல் நீக்கியது) – 150 கிராம்
பச்சை மிளகாய் – 1 எண்ணம் (பெரியது)
சீரகம் – 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ ஸ்பூன்
வெள்ளைப் பூண்டு – 7 பற்கள் (மீடியம் சைஸ்)
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)
கறிவேப்பிலை – 3 கீற்று
கடுகு – ¼ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு குழம்பு செய்முறை
உளுந்தம் பருப்பைக் கழுவிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை கழுவி நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.
வெள்ளைப் பூண்டினை தோலுரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
குக்கரில் அலசிய உளுந்தம் பருப்பு, கீறிய பச்சை மிளகாய், தோலுரித்த வெள்ளைப் பூண்டு, மஞ்சள் பொடி, சீரகம், தேவையான தண்ணீர் (6 டம்ளர்) ஆகியவற்றை சேர்க்கவும்.

குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.
மூன்று விசில் வந்தவுடன் குக்கரை சிம்மில் மூன்று நிமிடங்கள் வைத்து அடுப்பினை அணைத்து விடவும்.
குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து கலவையை நன்கு கிளறவும்.
அதனுடன் தேவையான உப்பு சேர்த்து ஒரு சேரக் கிளறவும்.
குழம்பினை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய விடவும்.
அதனுடன் சதுரமாக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளித்து குழம்பில் சேர்க்கவும்.


சுவையான உளுந்தம் பருப்பு குழம்பு தயார். இதனை சாதம், சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.

இக்குழம்புடன் பொரித்த அப்பம், முட்டை ஆம்லெட், வெள்ளை சாதம் சேர்த்து உண்ண பொருத்தமாக இருக்கும்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் தோலுடன் கூடிய உளுந்தம் பருப்பினைச் சேர்த்து இக்குழம்பினைத் தயார் செய்யலாம்.