எங்கு போனாலும் புறா தானே

புறாக்கள்

ஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில் நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன.

ஒரு நாள் கோயிலில் திருப்பணி வேலை ஆரம்பித்தார்கள். அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடி பறந்தன.

அவை வழியில் ஒரு தேவாலயத்தை கண்டன.

அங்கும் சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்த புறாக்களும் குடியேறின.

சில நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ் வந்தது. தேவாலயத்தைப் புதுப்பிக்கத் தயாரானார்கள்.

அப்போது புதிதாய் வந்த‌ பறவைகளும் அங்கு இருந்த பறவைகளும் வேறு இடம் தேடி பறந்தன.

வழியில் ஒரு மசூதியை கண்டன‌. அங்கும் சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்த புறாக்களும் குடியேறின.

சில நாட்கள் கழித்து ரமலான் வந்தது. வழக்கம் போல் இடம் தேடி பறந்தன.

இப்போது மூன்று இடத்திலும் உள்ள புறாக்களும் கோயிலில் குடியேறின.

 

 

ஒரு நாள் உணவு தேடி அவை சென்ற போது ஓரிடத்தில் மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.

ஒரு குஞ்சுப்புறா தாய் புறாவிடம் கேட்டது “ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் ?” என்று.

அதற்கு அந்த தாய் புறா சொன்னது, “நாம் இங்கு இருந்த போதும் புறா தான், தேவாலயத்துக்கு போனபோதும் புறா தான், மசூதிக்கு போன போதும் புறா தான் “.

“ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் இந்து, சர்ச்க்கு போனால்  கிறிஸ்த்தவன், மசூதிக்கு போனால் முஸ்லிம்” என்றது தாய் புறா.

குழம்பிய குட்டி புறா “அது எப்படி நாம் எங்கு போனாலும் புறா தானே அதுபோல தானே மனிதர்களும்“என்றது.

அதற்கு தாய் புறா “இது புரிந்ததனால் தான் நாம் மேலே இருக்கிறோம்,  அவர்கள் கீழே இருக்கிறார்கள்” என்றது.

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.