மேகங்கள் போல லேசான மனம்
எங்கும் மிதக்கிறது இந்த காற்றில்
காற்றில் மேலே எழும்பும் ஒற்றை இறகு
அது பயணிக்கும் திசை தெரியாது இறகுக்கு
அதை கூட்டிச்செல்லும் காற்றுக்கும் தெரியாது
என் மனம் போல அது எங்கோ பறக்குது
சிறகு இல்லாமல் எந்த காட்டிலும்
அலைந்து தொலையுது மனம்
அதற்கு வாசம் இல்லை
வாசல் இல்லை
எங்கும் நுழைய பார்க்குது
காற்றுப் போகா இடம் கூட
இந்த மனம் கடந்து கிடக்கிறது
அது காலத்தையும்
கன வினாடிகளில் கடந்து விடுகிறது
அது எங்கு செல்ல நினைத்தாலும்
நினைத்த தருணத்தில் அங்கு நிற்கிறது
அதன் உள்ளே செல்லாமல்
அடம்பிடிக்கிறது நிழலில்லா மனம்
பிறர் மனம் அறிய
என் மனம் கூடு பாய்கிறது
அங்கு அனுமதி இல்லாததால்
அப்படியே விழுந்து விடுகிறது
மனம் நினைப்பதை
எண்ணங்கள் செய்வதில்லை,
எண்ணங்களை உருவாக்கும்
மனமும் அதை அறிவதில்லை
அது பாயும் திசையெல்லாம்
எதையோ தேடி பார்க்கிறது
இறந்த நிமிடங்களையும்
நொடிகளையும் எண்ணி
இருக்கும் நொடிகளை
இழந்துவிடுகிறது
மாறாக என் இதயம் ததும்பி
வழியும் போதெல்லாம்
நான் நினைப்பதுண்டு
இந்த மனம் ஏன்?
இப்படி நினைக்கிறது என்று!
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!