எதிர்கால கனவுகள் – சிறுகதை

திருமருகல் சந்தைப்பேட்டையில் டீக்கடை நடத்தி வந்தான் கார்த்திக். கார்த்திக்குக்கு வயது முதிர்ந்த அப்பா, அம்மா மற்றும் இரண்டு தங்கைகள்.

மணம் முடித்து இளைய தங்கை தன் கணவன் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

மூத்த தங்கையின் கணவர் குடிப்பழக்கத்தினால் இளம் வயதிலேயே இறந்து விட, மூன்று குழந்தைகளுடன் தன் தாய் தந்தை வீட்டிலேயே வந்து குடியேறி விட்டாள்.

கார்த்திக்கிற்கு குடும்பத்தின் சுமை கூடியது. தங்கையின் குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்புடன் வயது முதிர்வு காரணமாக நோய் வாய்ப்பட்டு இருந்த தாய் தந்தையரை பார்த்துக் கொள்ளும் கடமையும் சேர்ந்து கொண்டது.

கார்த்திக் படித்திருந்ததனால் அந்த டீக்கடையை வைத்து திறம்பட தன் குடும்பத்தை நடத்தி வந்தான்.

கார்த்திக்கு 38 வயதாகியும் ஏனோ தெரியவில்லை திருமண யோகம் நெருங்கி வரவில்லை. அவர்களும் பெண் தேடி அலையாத இடம் இல்லை. இன்னும் அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தங்கையின் குழந்தைகளும் படித்து ஆளாகி வாலிபர்களாக வலம் வந்து கொண்டு இருந்தனர்.

நேற்று முன்தினம் ஒரு புரோக்கர் மூலம் கும்பகோணத்தில் ஒரு பெண் இருப்பதாகவும் நல்ல குடும்பம் என்றும் செய்தி வந்தது.

கார்த்திக்கின் குடும்பத்தினர் அனைவரும் சென்று பெண்ணை பார்த்துவிட்டு வந்திருந்தனர்.

கார்த்திக் குடும்பத்தினருக்கு பெண்ணை பிடித்து விட்டது. ஆனால் பெண் வீட்டிலிருந்து என்ன செய்தி வருமோ? எப்படி வருமோ? எந்நாளில் வருமோ என்று கார்த்திக்கின் மனம் பதைப் பதைத்துக் கொண்டிருந்தது .

இந்த இடமாவது அமைந்து வருமா என்று கார்த்திக் ஏங்கிக் கொண்டிருக்கையில். கார்த்திக்கின் நண்பர்கள் அவனை கிண்டல் அடித்து விளையாடினர்.

“டேய் கார்த்திக் பொண்ணு எப்படிடா? நல்ல அழகா இருக்குமா!” என்றான் ரமேஷ்.

“அது என்னமோ தெரியலப்பா. என் வீட்டில் உள்ள அனைவருக்கும் பொண்ணு புடிச்சிருக்குதாம். என் போட்டோவை கொடுத்துட்டு பொண்ணோட போட்டோவ வாங்கிட்டு வந்து இருக்காங்க. பெண் வீட்டிற்கும் என்னை பிடித்திருந்தால் மேற்கொண்டு செய்தி சொல்லி அனுப்புவாங்க.” என்று பதில் கூறினான் கார்த்திக்.

“…ம் ..ம். அடுத்தது கல்யாண சாப்பாடு தான்.” என்றான் சுரேஷ்.

“அட ஏன்டா நீ வேற? இப்படித்தான் எத்தனையோ பொண்ணுங்க வந்துச்சு. ஏதேதோ காரணத்தை சொல்லி தட்டி கழிச்சு போயிடுச்சு. இந்த இடமாவது வருமான்னு யோசனையில ஒக்காந்து இருக்கேன். நீ வேற வயத்தெரிச்சல கிளப்பாதடா.” என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் கார்த்திக்.

அப்போது ரமேஷ் குறுக்கிட்டு, “அதுக்கு தாண்டா மாப்பிள்ளை சொல்றேன். இன்னும் ரெண்டு வருஷத்துல என் பொண்ணுக்கு கல்யாணம் செய்யணும். பேசாம நீ என் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கன்னு.” என்றான்.

“டேய் டேய் மாப்ள என் தங்கச்சி ஒன்னு இருக்குடா.” என்று தன் பங்குக்கு கூறினான் சுரேஷ்.

“டேய் எந்திரிச்சு ஒழுங்கு மரியாதையா ஓடிப் போயிடுங்கடா. அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்று சொல்லி விரட்டினன் கார்த்திக்.

நண்பர்கள் கூட்டம் சிரித்துக் கொண்டே எழுந்து நகர்ந்தது.

கார்த்திக் தன் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து இரவு உணவு முடித்து உறங்கச் சென்றான். பகல் முழுவதும் வேலை பார்த்த அசதியில் கண்கள் சுழன்றன.

“என்னங்க என்னங்க … எழுந்திரிங்க.” என்றாள் மஞ்சுளா.

“தூக்கத்துல இருக்கும்போது ஏன் தொந்தரவு பண்ற?” என்றார் கார்த்திக்.

“எழுந்திரிங்க பொழுது விடிஞ்சிடுச்சு இன்னும் தூங்கிட்டு இருக்கீங்க” என்று மீண்டும் சத்தமிட்டாள் மஞ்சுளா.

கார்த்திக் கண்ணை கசக்கி கொண்டு எழுந்து உட்கார்ந்தார்.

“என்னங்க எழுந்து மசமசன்னு உக்காந்துட்டு இருக்கீங்க. எழுந்து போய் கை கால் மூஞ்சியை கழுவிட்டு வாங்க. காப்பிய குடிச்சிட்டு கடைக்கு போயிட்டு இந்த லிஸ்ட்ல உள்ள ஜாமான் எல்லாம் வாங்கிட்டு வாங்க. இன்னைக்கு நம்ம பொண்ணு கயல்விழிய பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்கங்கிறது நினைவு இருக்குல்ல.”

“அட! ஆமா இன்னைக்கு புதன்கிழமையா? எனக்கு மறந்தே போச்சு. சாயங்காலம் மூணு மணிக்கு வந்துருவாங்க. சரி சரி இதோ ரெடியாயிட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றார் .

கார்த்திக் குளித்துவிட்டு வந்ததும், மஞ்சுளா கையில் ஒரு மஞ்சள் துணிப்பையும் எழுதி வைத்திருந்த பில் தாளையும் எடுத்து நீட்டினாள்.

“என்னங்க இந்த சாமானையெல்லாம் மறந்து விடாமல் வாங்கிட்டு வந்துருங்க”

“சரி சரி என்னோட அக்கவுண்ட்ல பேலன்ஸ் இல்ல. அப்படியே உன்னோட செல்ல எடுத்துட்டு வா. நான் பேடிஎம் பண்ணி ஜாமான் வாங்கிட்டு வந்துடறேன்.”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நேத்திகே உங்க மகன் ஆதிதமிழ் கலிபோர்னியாவில் இருந்து 20 லட்சம் ரூபா உங்க அக்கவுண்டுக்கு அனுப்பிட்டானாம். நீங்க உங்க மொபைலை எடுத்துட்டு போயி பேடிஎம் பண்ணி சாமான வாங்கிட்டு வந்துருங்க. அப்புறம் இன்னொன்னு சொன்னான்.”

“…ம்.. என்ன?” .

“உங்க பேரன் செல்வத்தமிழை திட்டச்சேரி ஜேசி கான்வென்ல எல்கேஜி சேர்த்து விடணுமா. இரண்டு லட்ச ரூபாய் டொனேஷன் கேப்பாங்களாம். கட்டிட சொன்னான். அப்புறம் தங்கச்சிக்கு நல்ல இடமா பார்த்து பேசி முடிக்க சொன்னான். காச பத்தி நீ கவலைப்படாதம்மா. எல்லாம் நான் பார்த்துக்கிறேன்னு சொன்னான் என் புள்ள.”

“ஏன் உன் புள்ள என்கிட்ட பேச மாட்டாராமா? இருக்கட்டும் சரி சரி நான் போயிட்டு வரேன்” என்று சொல்லி கார்த்திக் புறப்பட்டார்.

11:30 மணி மஞ்சுளா கார்த்தியிடம் பில்லை வாங்கி சாமான்களை சரி பார்த்துக் கொண்டிருந்தாள்.

8-3-2045

பால் 2 லி – 400 ரூ
சீனி 1 கி – 200 ரூ
ரவை 1 கி – 300 ரூ
புரூ காப்பி – 50கிராம் – 200 ரூ
ஆயில் – 1லி – 900 ரூ
முந்திரி – 100 கிராம் – 300 ரூ
திராட்சை- 50 கிராம் – 100 ரூ
மொத்தம் – 2400 ரூ

“என்னங்க இப்படி இருக்குது விலைவாசி?” என்றாள் மஞ்சுளா.

“அதுக்கு என்ன பண்றது? உன் மகன் வெளிநாட்டிலிருந்து சம்பாதிக்கிறதுக்கும் நாம இங்கே சாப்பிடுவதற்கும் சரியா தான் இருக்குது. ஆமாம் எங்க உன் மருமகள்?”

“மாடியில டிவி பார்த்துக்கிட்டு இருக்கா”

“சரி சரி. போய் வேலையை பாரு. உன்னைய கல்யாணம் பண்ணப்ப பவுனு 45 ஆயிரம். இப்போ ஒரு பவுனு இரண்டு லட்சம்.”

“என்னங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க 20 பவுனு கேட்டு இருக்காங்களே! என்ன செய்யப் போறீங்க?”

“என்னது 20 பவுனா?”

கனவு கலைந்து எழுந்தான் இன்னும் பெண் தேடிக் கொண்டிருக்கும் கார்த்திக்.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.