என்னவள் என்று நான்
எண்ணும் வேளைதனில்
என்றோ மாண்டிருந்தாள்
மண்ணுக்குள்ளே
என்னங்க என்றழைத்த
என்னவளின் குரலோசை
என்றோ காற்றோடு
ஒன்றி கரைந்து போயின
கூப்பிட்ட வேளைகளில்
வேளைக்கொரு வேலையாய்
கூப்பாடு போட்டாலும் இனியொரு
வேளையேனும் கேளாமல்
கட்டிக் கொள்ள துடித்த
என்னவளின் கைகளை
கட்டிப் போட்டு சுற்றம்
போற்றிய பாவியானேன்
என்னில் சரிபாதி நீ
என்றுரைத்ததை நம்பி
என்னவள் உரைத்தவை யெல்லாம்
வெறும் கூப்பாடாகவே
ஆண்டாண்டு காலம்
அழுது புரண்டாலும்
மாண்டார் வருவதுண்டோ
முன்னோர் வாக்கு
புரியும் வேளையில்
புணரும் ஆசையில்
பிரியும் வேலைதான்
உணரும் போதெனில்
என்னவள் என்று நான்
எண்ணும் வேளைதனில்
என்றோ மாண்டிருந்தாள்
மண்ணுக்குள்ளே
அவளின் கவிகள்
என்னுள் இரங்கி
செவியில் நுழைந்த
பாணமாய் நெஞ்சில் செருகி
தீராத இரணமாய்
கனக்கும் வேளை – என்னவளை
பாராத நாட்களை நினைக்க
கனத்து தான் போயின
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!