மொட்டைப்பாறை மொக்கையன்தான்
மொழு மொழுவென்று வளர்ந்தவன்தான்
வெட்ட வெளியில் நிற்பவன்தான்
விண்ணைத் தொட்டிட நினைப்பவன்தான்
மொட்டைப்பாறை அவனருகே
குட்டைப் பாறை ஒருவன்தான்
தட்டையாகக் கிடந்தானே
தலைக்கனமின்றி இருந்தானே
தட்டைப் பாறை மடி மீது
தவறி விழுந்தது விதையொன்று
வெட்டிப் பயலே சிறுவிதையே
விலகிச் சென்றிடு என்றான் குட்டையனும்
பட்டென குட்டையன் சொன்னது கேட்டு
பயந்து போன சிறுவிதையும்
சுட்டும் வெயிலில் உனைக்காக்க
சுகமாய் என்னை வளரவிடு
குட்டைப் பாறை உனை மூடி
குளிரச்செய்ய நான் வளர்வேன்
சிட்டுக்குருவி பறவைகளும்
சிறப்பாய் தங்கிட இடம் தருவேன்
மொட்டைப்பாறை மொக்கையன்போல்
இருந்தால் என்ன பயனோ சொல்
எட்டா உயரம் வளர்ந்திருந்தும்
எதுதான் பயன் என்றே சொல்
கூட்டு வாழ்க்கை கோடி நன்மை
கொண்டாடிட அன்பு பெருகும் உண்மை
வாட்டம் தீரப் பெருகும் வலிமை
வாழும் வாழ்வில் நிலைக்கும் இனிமை
குட்டி விதையவன் சொன்னது கேட்டு
கெட்டியாய் அதன் வேர் பிடித்தது பாறை
வட்டப்பாறையில் மரம் வளரக்கண்டு
கொட்டியது மழையினை வானமுமங்கே
விட்டுக்கொடுத்த குட்டைப் பாறை
வெற்றி பெற்றதைக் கண்டு
நெட்டையாக வளர்ந்த பாறை
வெட்கி நின்றது அங்கு
விதைக்கு அன்பால் இடம் கொடுத்து
விருட்சமான பின்னும் அதைக் காத்து
பலவகைப் பறவைகள் அங்கு
பாதுகாப்பாய் வாழ இடம் கொடுத்த
பாறையைச் சுற்றி
எப்போதும் கேட்கும் இன்னிசையே!
நம் மனதும் பாறையாக இருந்தாலும் பக்குவமாய்க் காதலால் (வாழ்க்கைத்துணை, வரமாய்ப் பெற்ற குழந்தைகள், இயல்பான தோழமைகள்) மெல்லக் கசிந்துருக இன்னிசையே நம் வாழ்வில் என்னென்றும் ஒலித்திடுமே!
கைபேசி: 9865802942