எமதர்மன் பெற்ற சாபம்

எமதர்மன் பெற்ற சாபம்

எமதர்மன் பெற்ற சாபம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?. மகாபாரதத்தில் ஞானியாகவும், சிறந்த அறிவாளியாகவும் போற்றப்படும் விதுரர் எமதர்மனின் அவதாரம் என்று கருதப்படுகிறார்.

முழுவிவரங்களைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து கதையைப் படியுங்கள்.

மாண்டவ்யர் முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது திருடர்கள் பலர் முனிவரின் ஆசிரமத்திற்குள் நுழைந்தனர். திருடர்களை அரண்மனைக் காவலர்கள் துரத்தி வந்தனர்.

ஆசிரமத்திற்குள் நுழைந்த திருடனில் ஒருவன் மாண்டவ்ய முனிவரின் கழுத்தில் திருடிய நகைளை போட்டான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால் நடந்தவைகளை அறியவில்லை.

ஆசிரமத்திற்குள் நுழைந்த அரண்மனைக் காவலர்கள் திருடர்களைப் பிடித்ததோடு மாண்டவ்யரையும் திருடன் என தவறாகக் கருதி கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அரசனிடம் திருடர்களைப் பிடித்த செய்தியைத் தெரிவித்தனர். அரசனும் பிடிப்பட்ட திருடர்களை கழுவில் ஏற்றி கொல்ல உத்தரவு இட்டான். அரசனுக்கு மாண்டவ்யர் திருடனாகப் பிடிப்பட்டது பற்றி ஏதும் தெரியாது.

அரசனின் ஆணையின்படி அரண்மனைக் காவலர்கள் பிடிபட்டவர்கள் அனைவரையும் கழுவில் ஏற்றினர். மாண்டவ்யரும் கழுவில் ஏற்றப்பட்டார்.

திருடர்கள் அனைவரும் இறந்தனர். மாண்டவ்யர் மட்டும் தியானத்தில் கழுவில் இருந்தார். முனிவர் இறக்காமல் இருந்ததை காவலர்கள் அரசனுக்குத் தெரிவித்தனர்.

அரசன் செய்தியைக் கேட்டு திடுக்கிட்டு முனிவர் இருந்த இடத்திற்கு வந்தான். முனிவரை கழுவில் இருந்து இறக்குமாறு கட்டளை இட்டான்.

அவர்களும் அவ்வாறே செய்தனர். நடந்தவற்றிற்காக அரசன் முனிவரிடம் “நான் அறியமல் செய்த பிழையை மன்னித்து என்னைக் காத்தருள வேண்டும்” என்று வேண்டினான். முனிவரும் அவனை மன்னித்தார்.

பின்னர் எமன் உலகம் சென்ற அவர் எமதர்மனிடம் “எனக்கு இப்படிப்பட்ட துன்பம் வர என்ன காரணம்?” என்று கோபமாகக் கேட்டார்.

அதற்கு எமதர்மன் “நீங்கள் சிறுவனாக இருந்த போது சிறுபூச்சியான தும்பி ஒன்றினை ஈர்க் குச்சியில் கோர்த்து விளையாடினீர்கள். அந்த தும்பி பட்ட துன்பத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்பது விதி. ஆதலால் கழுவில் ஏற்றப்பட்டீர்கள்.” என்று கூறினார்.

இதனைக் கேட்டதும் மாண்டவ்யர் “எமதர்மனே, பிள்ளைப் பருவத்தில் அறியாமல் செய்த பாவத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?

இப்படி விதித்த நீ பூமியில் மனிதனாகப் பிறப்பாய். அரசகுலத்தில் பிறந்தும் அரசப் பதவியைப் பெற முடியாமல் இருப்பாய்” என்று சாபம் இட்டார்.

எமதர்மன் பெற்ற சாபம் காரணமாக‌ பூமியில் விதுராக அரச குலத்தில் பிறந்தும் அரசனாகாமல் இருந்தார். எமதர்மனின் அவதாரம் ஆதலால் நீதிதவறாமல் வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது.

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.