இருபது கோடி இந்திய மக்கள்
இரவினில் உணவின்றிப் படுக்கும்
அருளிலா நிலையை அழித்தொழித் திழிவை
அகற்றுதற் கரசுகள் முயலும்
திருமகள் உறையும் திருநிலம் ஆகும்
தீமைகள் தீருமென் றிருந்தால்
கருவிய நெஞ்சாற் கழுத்தறு செயலைக்
கருத்துடன் செய்குது பாரீர்
உடலுயிர் வருத்தி உழவினர் செய்த
உயிர்நிகர் அரிசியைக் கொண்டு
குடலினுள் சென்று குற்றுயிர் தின்னும்
குடங்குட மதுவகை செய்தும்
அடங்குதல் இன்றி அடுத்தடி எடுத்தார்
அதுமிகக் கொடியது மனிதா
கிடங்குகள் அமைத்துக் கிளரெரி பொருளாய்க்
கீழ்த்தர அர(ரி)சியல் செய்தார்
எரிபொரு ளாக அரிசியைக் கொண்டால்
எதிர்வரும் விளைவுகள் பெருகும்
வரிவரி யாக வளர்கிற நூல்போல்
வரியினம் ஏறியே கொல்லும்
பெரியதே வாழுஞ் சிறியது சாகும்
பெரும்பெரும் பிறழ்வுகள் தோன்றும்
நரிமனங் கொண்டோர் நயந்திதைச் செய்யும்
நாமினி வாழ்வதும் அரிதே!
பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி: 8667043574