எல்லாம் அவன் செயல் – சிறுகதை

தேவன்குடி என்ற ஒரு சிறிய கிராமம்.

அந்த கிராமத்தில் இரண்டே தெருக்கள் தான். ஒன்று கீழத்தெரு. மற்றொன்று மேலத்தெரு.

கீழத்தெரு, சிறுசிறு குடிசைகள் அதிகம் நிறைந்த பகுதி. அங்கு ஓர் குடிசை வீட்டில் வசித்து வந்தான் சதீஷ்.

அம்மா, அப்பா, ஒரு தம்பி என்று ஒரு அளவான குடும்பம் தான் சதீஷினுடையது. சதீஷ் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.

அப்பா இளநீர் வியாபாரி. வியாபாரத்திற்கு காலையிலேயே எழுந்து சென்று விடுவார்.

சதீசின் அம்மா மகேஸ்வரி, சதீஷையும் தம்பியையும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு நடந்து இஸ்லாமிய ஊரான திட்டச்சேரியில் வீட்டு வேலை பார்ப்பது வழக்கம்.

சதீஷ் பள்ளிமுடித்து விட்டு தன்னுடைய அம்மா வீட்டு வேலை செய்யும் வீட்டிற்கு வருவான். அம்மா வீட்டு வேலையை முடித்தவுடன் சதீஷை அழைத்துக் கொண்டு அவர்களுடைய வீட்டிற்கு வருவார்.

அப்பா வியாபாரத்தை முடித்துக் கொண்டு காய்கறி, அரிசி, பருப்பு, தம்பிக்கு ரொட்டி சதீஷ்க்கு தின்பண்டம் என்று அனைத்தும் வாங்கி வருவார்.

இப்படி நன்றாகத்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது.

திடீரென்று ஏனோ தெரியவில்லை, அப்பா குடித்துவிட்டு வர ஆரம்பித்தார்.

அம்மாவுக்கும், அப்பாவுக்கும் தினமும் பிரச்சனை தான். ஒவ்வொரு நாளும் சண்டை சச்சரவு. சில சமயம் அப்பா அம்மாவை அடித்து விடுவார்.

அன்றும் அப்படித்தான் நடந்தது.

அப்பா குடித்துவிட்டு வந்து அம்மாவின் தலை முடியை பிடித்து இழுத்து அடிக்க, அம்மா வலி தாங்காமல் அப்பாவை பிடித்து தள்ள, அப்பா அருகில் இருந்த அம்மிக் கல்லின் மீது தடுமாறி கீழே விழ, அம்மிக் குழவி அப்பாவின் காலை பதம் பார்த்தது.

பிறகு ஏதேதோ வைத்தியம் செய்து பார்த்தார்கள். அப்பாவால் எழுந்து நடக்க முடியாமல் போனது.

அவ்வளவுதான்; வீட்டில் வறுமை பிடித்து ஆட ஆரம்பித்தது. கைக்குழந்தையையும் சதீஷையும் உடம்பு சரியில்லாத அப்பாவையும் வைத்துக் கொண்டு அம்மா ரொம்பவே சிரமப்பட்டார்.

தினமும் வீட்டு வேலை பார்த்து, அங்கு கிடைக்கும் சாப்பாட்டையும் அவர்கள் தரும் பணத்தையும் வைத்து அம்மாவால் குடும்பத்தை நடத்த முடியவில்லை.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் அம்மாவின் முகத்தில் இப்போது இருக்கும் சோகத்தை பார்க்க முடியவில்லை சதீசுக்கு.

அம்மாவிடம் பள்ளிக்கூடம் செல்வதாக சொல்லிவிட்டு தானும் வேலை தேட ஆரம்பித்தான்.

திட்டச்சேரி கடைத் தெருவில் உள்ள 73 கடைகளிலும் ஏறி இறங்கி கேட்டு விட்டான். அவன் சிறுவன் என்பதால் எவரும் வேலை தருவதாக இல்லை.

அப்போது அந்தி நேரத்தில் ஒரு இஸ்லாமிய பெரியவர் சூப் கடை நடத்தி வந்தார். அவரிடம் சென்று வேலை கேட்டான் சதீஷ்.

“ஐயா எனக்கு பக்கத்தில் உள்ள தேவன்குடித்தான் ஊரு. வீட்டில் கஷ்டம். அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. என்னையும் தம்பியையும் வச்சுக்கிட்டு அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க. எனக்கு ஏதாச்சும் வேலை கொடுங்க” என்றான்.

அவனை பார்த்த பெரியவரின் மனசு இளகியது. சதீஷை தன் கடையில் சேர்த்துக் கொண்டார்.

இருவரும் கடையை முடித்துக் கொண்டு புறப்பட இரவு ஒன்பது மணி ஆனது. சதீஷ் சிறுவன் என்பதால் தன் ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு அவன் வீட்டிற்கு சென்றார்.

பைக்கின் சத்தம் கேட்டு அம்மா மகேஸ்வரி வீட்டிற்கு வெளியே வந்தார். பைக்கை விட்டு கீழே இறங்கினான் சதீஷ் .

சதீஷை பார்த்ததும் அம்மா “எங்கப்பா போன இவ்வளவு நேரமா? உன்ன காணாம அப்பா தேடிட்டு இருந்தாங்க. ஆமாம் இவங்க யாரு உன்ன கூட கூட்டிட்டு வந்து இருக்காங்க.”

“அம்மா, நான் திட்டச்சேரியில் சூப் கடை வைத்து இருக்கிறேன். சாயங்காலம் சதீஷ் வந்தான். உங்க வீட்டு கஷ்டத்தை எல்லாம் சொல்லி வேலை கேட்டான். நானும் அவனை என் கடையில் வேலைக்கு சேர்த்துக் கொண்டேன். நல்ல பையன்; ஆமாம் இவன் படிக்க போகலையா?”

“படிச்சுக்கிட்டுதானுங்க ஐயா இருந்தான். அவங்க அப்பாவுக்கு உடம்புக்கு முடியல. முடியாமல் போனதுல குடும்பத்துல ரொம்ப கஷ்டம். அதுதான் பள்ளிக்கூடத்தை நிப்பாட்டிட்டு இப்படி வேலைக்கு வந்துட்டான். நான் என்ன பண்றது.

நல்லா சம்பாதிச்சிட்டு இருந்த மனுஷன் இப்படி படுத்துட்டாரு.
ரெண்டு குழந்தைகளை வச்சுக்கிட்டு நான் எவ்வளவு கஷ்டப்படுறது?”

“பரவாயில்லமா நம்பல படைச்ச கடவுள் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். இதற்கு மேலயும் உங்களுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்க மாட்டார். கடவுளை நம்புங்க.

“நாளையிலிருந்து சதீஷ் பள்ளிக்கூடத்துக்கு போய் படிக்கட்டும். பள்ளிக்கூடம் முடிந்து 5.00 மணிக்கு நம்ம கடைக்கு வந்தா போதும். அவனால முடிஞ்ச வேலையை பார்க்கட்டும்.

என்னால இயன்றதை நான் கொடுக்கிறேன். ஓரளவுக்கு உங்கள் சுமை குறையும். அதற்கு மேல் கடவுள் விட்ட வழி. நான் வருகிறேன்”கூறி என்று பெரிய கிளம்பினார்.

அதன்பின் சதீஷ் பள்ளிக்கூடம் முடிந்ததும் அப்படியே கடைக்கு சென்று வேலை பார்க்க ஆரம்பித்து விடுவான். வேலை முடிந்ததும் முதலாளி வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுச் செல்வார்.

இப்படியே சில மாதங்கள் சென்றன. கடையில் சதீஷ் நன்றாக வேலையை கற்றுக் கொண்டான்.

ஒருநாள் சதீஷ் பள்ளிக்கூடம் முடிந்து கடைக்கு வர கடை பூட்டி இருந்தது. கடைக்காரரின் வீட்டிற்கு சென்றான்.

அவர் வீட்டு வாசலில் ஒரே கூட்டமாக இருந்தது. வீட்டிற்குள் சதீஷ் சென்றான்.

அங்கு ஒரு கட்டில் மீது அவரை படுக்க வைத்து இருந்தார்கள். காலையில் அவர் நெஞ்சு வலி என்று சொன்னதாகவும், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும் சொல்லி அழுது கொண்டு இருந்தார்கள் உறவினர்கள்.

இறுதிச் சடங்கு முடிந்ததும் சதீஷ் சிறிது நேரம் இருந்து விட்டு தன் வீட்டிற்கு சென்றான்.

இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை சதீஷ்க்கு. மறுநாள் பொழுது விடிந்ததும் எழுந்து நேரத்துடன் தன் முதலாளியின் வீட்டிற்கு சென்றான்.

முதலாளியின் மனைவி “வாடா தம்பி, சதீஷ்! உட்கார். உன் முதலாளியைப் பாத்தியா. அவர் ஒருவர் இருந்தார். நம்மள எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டாரு.

இப்போ நம்மள இப்படி அனாதைய விட்டுட்டு போயிட்டாரு. இனி நம்பள எல்லாம் யார் கவனிச்சுப்பா?” என்று சொல்லி தேம்பி தேம்பி அழுது கொண்டு இருந்தார்.

சதீஷ் “அம்மா கடை சாவியை கொடுங்க” என்றான்.

முதலாளியின் மனைவி “ஏம்பா நீ என்ன செய்யப் போற?” என்றார்.

“நான் இருக்கிறேன் அம்மா உங்களுக்கு. எனக்கு எல்லா வேலையும் தெரியும். இனிமே நான் என் அம்மா அப்பா உங்கள எல்லாத்தையும் பார்த்துக் கொள்வேன்” என்று சொல்லிவிட்டு தன்னம்பிக்கையுடன் சாவியை வாங்கிக் கொண்டு நடந்தான் சதீஷ்.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.