எள் – எண்ணெய் வித்துகளின் ராணி

எள் பண்டைய காலம் தொட்டு உணவுப் பழக்கத்தில் இருந்து வரும் முக்கியமான உணவுப் பொருளாகும். இது மனிதன் அறிந்த எண்ணெய் வித்துகளில் மிகவும் பழமையானது.

மற்ற எண்ணெய் வித்துக்களைவிட நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருப்பதால் இது எண்ணெய் வித்துக்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது.

இதனுடைய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நோய் தீர்க்கும் பண்புகளின் காரணமாக இது உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பராம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இது மனிதகுலத்திற்கு நன்கு தெரிந்த, பழமையான, இன்றியமையாத பொருளாகவும் உள்ளது.

இவ்விதையானது கறுப்பு, வெள்ளை, மஞ்சள், சிவப்பு என பலவண்ணங்களில் காணப்படுகிறது.

அடர்நிறங்கள் உடைய எள்ளானது இந்தியா உள்ளிட்ட ஆசியநாடுகளிலும், வெள்ளை, மஞ்சள் உள்ளிட்ட வெளிர்நிற எள்ளனாது ஐரோப்பியா, அமெரிக்கா நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

எள்ளானது அதிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெய்க்காக அதிகளவு பயிர் செய்யப்படுகிறது.

எள்ளின் அமைப்பு மற்றும் வளரியல்பு

எள்ளானது 0.5-1.5மீ உயரம் வளரும் செடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இத்தாவரம் நல்ல வறட்சியை தாங்கி வளரும் தன்மை உடையது. ஆதலால் வெப்பமண்டலப் பகுதிகளில் இது செழித்து வளருகிறது.

மணி வடிவ வெள்ளை, இளஞ்சிவப்பு நிறப்பூக்கள் இத்தாவரத்திலிருந்து தோன்றுகிறது.

 

மணி வடிவ பூக்கள்
மணி வடிவ பூக்கள்

 

இப்பூக்களிலிருந்து 1.5-5 செமீ நீளமுள்ள நீளவட்ட அல்லது செவ்வக வடிவிலான காய்கள் தோன்றுகின்றன.

இக்காய்கள் முதிர்ந்து முற்றும்போது வெடித்து விதைகளை வெளியேற்றுகிறது. ஒரு நெற்றில் 60-100 விதைகள் காணப்படுகின்றன. வெடிப்பதற்குள் நெற்றினை அறுவடை செய்து எள்ளைப் பிரித்து எடுப்பர்.

எள்ளானது 2.5-3 மிமீ நீளம், 1.5 மிமீ அகலம், 1மிமீ தடிமன் கொண்டு முட்டை வடிவத்தில் காணப்படுகிறது. இதனை வறுக்கும்போது நல்ல மணத்தை கொடுக்கிறது. எள்ளின் வகையினை பொறுத்து அதனுடைய நிறம் மாறுபடுகிறது.

எள்ளின் வரலாறு

உலகில் உள்ள வெப்பமண்டலப் பகுதிகளில் பன்னெடுங்காலமாகவே இப்பயிரானது பயிரிடப்பட்டு வருகிறது. இதனுடைய தாயகம் இந்தியா என்று அறியப்படுகிறது.

இந்தியாவிலிருந்தே இப்பயிர் உலகின் பிற வெப்பமண்டலப் பகுதிகளான ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவியது.

எகிப்தின் பழங்கால கல்லறை ஓவியத்தில் ரொட்டி மாவில் எள்ளினை சேர்ப்பது வரையப்பட்டுள்ளது. மேலும் இது டோலமியாக் காலத்தில் எகிப்தில் பயிரிப்பட்டதாகவும், மருத்துவத்திலும் பயன்படுத்தியதாகவும் அறியப்படுகிறது.

சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் பாபிலோன் மற்றும் அசீரியாவின் பண்டைய வேதங்களில் எள்ளினைப் பற்றிய குறிப்பு உள்ளது. 3000 ஆண்டுகளுக்கு முன்பு இப்பயிர் அங்கு பயிர் செய்யப்பட்டது.

கிமு 2000-ல் இந்தியா மற்றும் மெசபடோமியாவின் சில இடங்களில் எள் வர்த்தகம் நடைபெற்றதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன.

17-ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்கு எள் எடுத்துச் செல்லப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தியா, ஜப்பான், சீனா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் எள்ளினை வணிக நோக்கில் அதிகளவு பயிரிடுகின்றன.

எள்ளில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

எள்ளானது 60 சதவீதம் கொழுப்பு அமிலங்களையும், 20 சதவீதம் புரதத்தையும் கொண்டு அமினோ அமிலம் மற்றும் கொழுப்பு அமிலங்களின் மூலப்பொருளாக விளங்குகிறது.

எள்ளில் அதிகளவு விட்டமின் பி1(தயாமின்), பி6(பைரிடாக்ஸின்) உள்ளன. மேலும் இதில் விட்டமின் பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டாதெனிக் அமிலம்), இ போன்றவையும் காணப்படுகின்றன.

இவ்விதையானது மிகஅதிகளவு காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவற்றையும் அதிகளவு மெக்னீசியம், துத்தநாகம், செலீனியம் ஆகியவற்றையும், பொட்டாசியத்தையும் கொண்டுள்ளது.

இதில் மிகஅதிகளவு நிறைவுறா கொழுப்பு அமிலங்களும், அதிகளவு புரதமும், நார்ச்சத்தும் காணப்படுகின்றன. மேலும் இது கார்போஹைட்ரேட்டையும் கொண்டுள்ளது.

இது டிரிப்டோபன் உள்ளிட்ட அமினோ அமிலத்தையும், கொழுப்பினை எரிக்கக்கூடிய பாலிபீனால்களான சீசமின் மற்றும் சீசமோல் ஆகியவற்றையும் பெற்றிருக்கிறது.

எள்ளின் மருத்துவப் பண்புகள்

இதய நலத்திற்கு

இவ்விதைகளில் உள்ள எண்ணெயில் கரையக்கூடிய தாவர லிக்னான்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து உடலில் கொழுப்பு சேருவதைத் தடுக்கிறது. இதனால் இதயத்திற்கு ஏற்படும் அழுத்தமானது தவிர்க்கப்படுகிறது.

மேலும் இதில் உள்ள மெக்னீசியம் குழல் விரிப்பியாச் செயல்பட்டு இரத்தநாளங்கள் அடைக்கப்படுவதை தடைசெய்கிறது.

இதில் காணப்படும் ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலமான ஒலீயிக் அமிலம் உடலில் கெட்ட கொழுப்புகளைக் குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவினை அதிகரிக்கச் செய்கிறது.

இதில் உள்ள நார்ச்சத்து தமனிகள் மற்றும் இரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது.

இதனால் கரோனரி தமனி நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. எள்ளினை அளவோடு அடிக்கடி உணவில் சேர்த்து இதய நலம் பேணலாம்.

ஆரோக்கியமான செரிமானத்திற்கு

இதில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமானம் நடைபெற உதவுகிறது. இது மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சினைகளைத் தீர்க்கிறது.

அதே நேரத்தில் பெருங்குடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து இரைப்பை, குடல் நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து ஆரோக்கிய செரிமானத்தைப் பெறலாம்.

எலும்புகள் பலம் பெற

இதில் காணப்படும் செம்புச்சத்து, துத்தநாகம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் எலும்புகளைப் பலப்படுத்த பயன்படுகின்றன.

இந்த தாதுக்கள் புதிய எலும்புகளின் உருவாக்கத்திற்கும், காயத்தால் பலவீனமடைந்த எலும்புகளை வலுப்படுத்தவும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரித்து ஆஸ்டிபோரோஸிஸைத் தடுக்கவும் உதவுகின்றன. எனவே இதனை உண்டு ஆரோக்கியமான எலும்புகளைப் பெறலாம்.

சரும ஆரோக்கியத்திற்கு

இவ்விதைகளில் உள்ள துத்தநாகச் சத்தானது கொலாஜன் உற்பத்திக்கு அவசியமான ஒன்றாகும். கொலாஜன் தசை, திசுக்கள், கேசம் மற்றும் சருமம் ஆகியவற்றிற்கு வலிமை அளிக்கிறது.

இதில் உள்ள விட்டமின் இ-யானது முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் காயங்களை நீக்க உதவுகிறது.

மேலும் வயதோதிகத்தால் சருமத்தில் உண்டாகும் சுருக்கங்களைப் போக்குகிறது. சருமத்தில் நல்ல எண்ணெய் தேய்த்தும், எள்ளினை உட்கொண்டும் சரும ஆரோக்கியத்தைப் பேணலாம்.

கேசப் பராமரிப்பிற்கு

இவ்விதையானது தாவர பாலிபினால்களைக் கொண்டுள்ளது. இப்பாலிபீனால்கள் கேசப் பராமரிப்பிற்கு உதவுகிறது.

நல்லெண்ணையை கேசத்தில் தடவும் போது இதில் உள்ள விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இளநரையைத் தடுப்பதோடு ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

இதில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்ட்கள் கேசத்திற்கு பளபளப்பைத் தருகின்றன.

புற்றுநோயைத் தடைசெய்ய

இவ்விதைகளில் காணப்படும் எண்ணெயில் கரையக்கூடிய லிக்னான்களான சீசமின் மற்றும் சீசமோல் ஆகியவை ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன. இவை புற்றுநோயைத் தடை செய்பவையாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதில் உள்ள விட்டமின் இ, மெக்னீசியம் போன்றவை புற்றுநோயைத் தடைசெய்பவைகளாக விளங்குகின்றன.

மேலும் இதில் உள்ள பைட்டேட் அரியவகை புற்றுநோயைத் தடுக்கும் கலவையாகும். பைட்டேட் ஃப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டினை தடைசெய்து புற்றுநோய் உருவாக்கத்தைத் தடைசெய்கிறது.

வாய் பராமரிப்பிற்கு

இவ்விதையானது வாயின் ஆரோக்கியத்தில் சக்தி வாய்ந்த விளைவுகளை ஏற்படுத்துகிறது. நல்லெண்ணையை வைத்து வாய் கொப்பளித்தல் என்பது வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து வாய் துர்நாற்றத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

வாயின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியாவை வாய் கொப்பளித்தல் முறையில் நீக்கி வாயினைப் பராமரிக்கலாம்.

ஹார்மோன் அளவினை சீராக வைக்க

இவ்விதையில் உள்ள சீசமின் என்ற லிக்னானானது குடலில் எண்டோரோலாக்டோனாக மாற்றப்படுகிறது. இது ஈஸ்ட்ரோஜனின் செயல்பாட்டினைக் கொண்ட பைட்டோ ஈஸ்டரோஜன் கலவை ஆகும்.

பெண்களுக்கு வயதாகும்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு குறைகிறது. எனவே ஈஸ்ட்ரோஜனின் அளவில் குறைபாடு உள்ளவர்கள் இதனை உண்ணும்போது ஹார்மோனின் அளவினை சீராகிறது.

அத்தோடு உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவினையும் கட்டுப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்கிறது.

சீரான இரத்த ஓட்டத்திற்கு

இவ்விதையில் உள்ள செம்புச்சத்தானது இரும்புச்சத்தை உடல் உட்கிரகிக்கவும், ஹீமோகுளோபின்களின் உருவாக்கத்திற்கும் உதவுகிறது.

மேலும் உடல் உறுப்புக்கள் நன்கு செயல்பட செம்புச்சத்தின் காரணமாக ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடலின் பாகங்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் விரைந்து அளிக்கப்படுகிறது.

இரத்த நாளங்கள், எலும்புகள், மூட்டுகள் ஆகியவற்றின் வலிமைக்கு செம்புச்சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இதனால் எள்ளினை உண்டு சீரான இரத்த ஓட்டத்தைப் பெறுவதோடு மூட்டுகள், தசைகள், எலும்புகளில் உண்டாகும் வலிகளையும் போக்கிக் கொள்ளலாம்.

வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெற

எள்ளில் உள்ள புரதச்சத்தானது உடலால் சிதைக்கப்பட்டு உடலின் பாகங்களுக்கு தேவையானவைகளாக மாற்றம் செய்யப்படுகின்றன.

இதனால் உடலுக்கு ஒட்டு மொத்த வலிமை கிடைக்கப் பெறுவதோடு ஆரோக்கியமான செல்களின் வளர்ச்சி, சீரான வளர்ச்சிதை மாற்றம் ஆகியவை நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எள்ளினைப் பற்றிய எச்சரிக்கை

எள்ளினை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது உடல் எடை அதிகரிப்பு, வயிற்றுப்போக்கு, அழற்சி, தோல் அரிப்பு, முடி கொட்டுதல், கருச்சிதைவு ஆகியவை உண்டாகலாம். எனவே எள்ளினை எப்போதும் அளவோடு அடிக்கடி உண்ணலாம்.

எள் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய பொருளாகும். ஒரே சீரான நிறத்துடன், ஒரே அளவில், நாற்றமில்லாதவைகளைத் தேர்வு செய்யலாம்.

எள் அப்படியோவோ, வறுத்தோ பயன்படுத்தப்படுகிறது. சாலட், பிஸ்கட், ரொட்டி, கேக், இனிப்புகள், காரங்கள் ஆகியவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

எள்ளினை வெறும் வாணலியில் வறுத்து வைத்தால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.

எண்ணெய் வித்துக்களின் ராணி எள்ளினை அளவோடு அடிக்கடி உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.

வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.