கவிதை எழுதவென அமர்ந்தேன்
ஒருகாலைப் பொழுதில்
கையில் பேனாவும் பேப்பருமாய்.
கன்னத்தில் கைவைத்து யோசித்தேன்.
கரைந்தது நேரம்;
வந்தது கவலைதான் கவிதையல்ல.
என்ன சொல்லிவிடப் போகிறேன்
இந்த உலகுக்கு?
கணக்கில்லா கவிகள் வாழ்ந்திருந்து
கருத்துடன் சொல்லி வைத்த கவிதை பல
இருக்கையிலே புதிதாய் என்ன சொல்ல?
உரத்துக் கேட்டது மனது.
காட்டிலே காய்ந்த நிலா போல
கொட்டிய ரத்தினம் பலவும்
வீணாய் இங்கே கிடைக்கையில்
விரயமாய் நீயும் எழுதணுமா?
விடைதேடி
சடுதியில் சளைக்கிறது மனம்.
‘மழை தூறுதுல, உள்ள வாடா’
அழைக்கிறது அம்மாவின் குரல்.
தொல்லையாய்த் தோன்ற
எழுந்து வானம் பார்த்தேன்;
ஏனிந்த மழை வீணாய்? என்றேன்.
கடலில், பொட்டல் காட்டில், வீதியில்,
பாலையில், பாறையில் விழுந்து
வீணே பலதுளி போனாலும்
நத்தையின் வயிற்றிலும் ஒருதுளி விழலாம்;
முத்தாய் உருமாறலாம்;
எனவே தான் மழை.
வானம் பதில் சொல்லியது.
கசங்கிய காகிதத்தை எடுத்துக் கொண்டு
கன்னத்தில் கைவைத்தேன் மீண்டும்.
– வ.முனீஸ்வரன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!