நம் முன்னோர்கள் ஏன் கோவில் கட்டினார்கள் தெரியுமா?
மக்கள் ஒழுக்கமாகவும் சுத்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
மாரியம்மன், காளியம்மன், முருகன், கருப்பசாமி என கடவுளர்களின் கைகளில் சூலாயுதமும், வேலும், வெட்டரிவாளும் ஏன் கொடுத்திருந்தார்கள்?
நாம் பொய் சொல்லக்கூடாது; திருடக் கூடாது; பாவங்கள் செய்யக் கூடாது; மேலும் எந்த தவறும் செய்யக் கூடாது என்பதற்காகத்தான்.
மீறி தவறு செய்தால் கடவுள் பொறுத்து இருந்து பார்த்து தக்க சமயத்தில் அதற்கு உண்டான தண்டனை கொடுப்பார் என எச்சரித்திருக்கிறார்கள்.
ஆகையால்தான் ‘அரசன் அன்றே கேட்பான்; தெய்வம் நின்று கேட்கும்’ என்ற பழமொழியை பெரியோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆதலால் எக்காரணங்கள் கொண்டும் எந்த தவறும் செய்யக் கூடாது.
நம் முன்னோர்கள் திருவிழாக்களை நடத்தினார்கள். அவர்களைத் தொடர்ந்து இன்று நாமும் திருவிழாக்களை நடத்துகின்றோம்.
திருவிழாக்களின் போது சாமியை அலங்காரம் செய்கின்றோம். பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் என அன்னதானம் செய்து வந்தவர்களுக்கு சாப்பிட சொல்லி கொடுத்து நாமும் சாப்பிடுகிறோம்.
அந்த நேரத்தில் ஜாதி, இனம், மதம் எனப் பார்க்காமல் அனைவரையும் சமமாகப் பாவித்து அன்புடன் பழகுகிறோம்.
தேர் திருவிழாவின் போதும் ஜாதி, மதம் பார்க்காமல் பெரிய தேரை ஆயிரக் கணக்கானவர்கள் சேர்ந்துதான் இழுக்க வேண்டியிருக்கிறது.
அந்நிகழ்வில் சிறுசிறு விரோதியாய் இருந்தாலும் அதனை மறந்து விடுகிறோம். அப்படிதான் வாழ்ந்து வரவேண்டும் எல்லா நாட்களிலும்.
மேலும் சுவாமிக்கு படைத்த பொங்கல், புளியோதரை, பழங்கள், தின்பண்டங்கள் எல்லாவற்றையும் நாம்தான் சாப்பிடுகிறோம். சாமி பார்த்து கொண்டு தான் இருக்கிறார்.
சாமிக்கு படைத்த எல்லாவற்றையும் சாமி சாப்பிட்டால் நாம் சாமிக்கு எதுவும் படைக்கவே மாட்டோம். சாமிக்கு படைத்தவைகளை சாமி பெயரைச் சொல்லி எல்லாவற்றையும் நாம் தான் பகிர்ந்து சாப்பிடுகிறோம்.
சுய நலத்தைக் குறைத்து, மக்கள் அனைவரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் கோவில் கட்டினார்கள்.
மறுமொழி இடவும்