ஏமாற்றாதே ஏமாறாதே

ஏமாற்றாதே ஏமாறாதே என்ற இக்கதை, எல்லோரையும் நாம் ஏமாற்றினால், ஒருநாள் நாமும் ஏமாறுவோம் என்பதை விளக்குகிறது. கதையைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பச்சையூர் என்பது அழகிய வயல்வெளிகளையும், உயரமான மலையையும் உடைய மலையடிவார கிராமம்.

அங்கு செல்வன் என்ற குறும்புக்கார சிறுவன் வசித்து வந்தான். அவன் ஆடுகளை மேய்கும் தொழிலைச் செய்து வந்தான். கிராமத்தின் மேற்குப் பக்கத்தில் இருக்கும் அவன் மலையின் சரிவில் ஆடுகளை மேய்ப்பது வழக்கம்.

ஒருநாள் செல்வன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அப்போது மலையடிவாரத்தில் இருந்த வயல்வெளிகளில் ஆட்கள் வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்தான். உடனே அவர்களிடம் தன்னுடைய குறும்புத்தனத்தைக் காட்ட எண்ணினான்.

திடீரென “ஐயோ, காப்பாற்றுங்கள், ஓநாய் வருகிறது. யாராவது உதவிக்கு வாருங்கள். காப்பாற்றுங்கள்!” என்று கூக்குரலிட்டான்.

செல்வனின் சத்தம் கேட்டதும், வயல்வெளியில் இருந்தவர்கள் கையில் கம்புகளை எடுத்துக் கொண்டு, ஓநாயை விரட்ட ஓடி வந்தனர்.

செல்வனிடம் “எங்கே ஓநாய்?” என்று கேட்டனர்.

அவர்கள் பதறி அடித்து ஓடி வந்து கேட்டதைக் கண்டதும் செல்வன் நமட்டு சிரிப்பு சிரித்தான்.

“ஓநாயா? எங்கே? நீங்கள் எல்லோரும் ஏன் பதறி அடித்துக் கொண்டு வந்துள்ளீர்கள்?” என்று கேட்டான்.

“இல்லை. இங்கிருந்துதான் ஓநாய் வருகிறது. காப்பாற்றுங்கள்! என்று சத்தம் வந்தது” என்றனர்.

“அப்படியெல்லாம் இல்லை. நீங்கள்தான் தவறாகப் புரிந்து கொண்டு இங்கு வந்துள்ளீர்கள்” என்று கூறினான்.

வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சிலநாட்கள் சென்றன.

மீண்டும் ஒருநாள் செல்வன் “ஓநாய் வருகிறது. காப்பாற்றுங்கள்!. காப்பாற்றுங்கள்!” என்று கத்தினான்.

உடனே வயல்வெளியில் வேலை செய்தவர்கள், தங்களின் வேலையை அப்படியே போட்டுவிட்டு வந்தனர்.

செல்வன் அவர்களிடம் “ஓநாயும் இல்லை. ஒன்றும் இல்லை. யாரும் காப்பாற்றுங்கள் என்று கத்தவில்லை.” என்று கூறினான். வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

‘முட்டாள்கள் இவர்களை நன்றாக ஏமாற்றி விட்டேன்.’ என்று மனதிற்குள் எண்ணி சிரித்துக் கொண்டான்.

சிலமாதங்கள் சென்றன. ஒருநாள் செல்வன் ஆடுகளை மலைச்சரிவில் மேய்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது ஓநாய் அங்கே வந்தது. ஓநாயைக் கண்டதும் செல்வன் கத்தினான்.

“காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள். ஓநாய் வருகிறது” என்று கத்தினான்.

வயல்வெளியில் இருந்தவர்கள் சத்தம் கேட்டும் வரவில்லை. செல்வன் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மரத்தில் ஏறிக் கொண்டான்.

ஓநாய் ஆட்டுக்குட்டியைத் தூக்கிச் சென்றது. செல்வன் ஆட்டுக்குட்டிக்காக அழுதான்.

“நான் எல்லோரையும் ஏமாற்றி ரசித்தேன். இன்றைக்கு நான் ஏமாந்தேன். ஏமாற்றாதே ஏமாறாதே என்பதை உணர்ந்து கொண்டேன்” என்று வாய்விட்டு அழுதான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.