ஏழையின் உழைப்பு!

“பச்சைக்கீரை, கரிசலாங்கண்ணி, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, முளைக்கீரை…”

“முளைக்கீரை, பச்சைக்கீரை, மணத்தக்காளி கீரையோ, கீரை, கீரை….”

இப்படி சொல்லிக் கொண்டே போகும் வயது முதிர்ந்த பாட்டியை தினமும் நடை பயணத்தில் எதிர்கொள்வது இயல்பு.

அன்று காலை 7 மணி.

நடைப்பயணம் முடித்து திரும்பும் போது அந்த கீரை அம்மாவும் நானும் ஒருசேர நடந்து வந்தோம்.

ஒரு 50 அடி சென்ற பின் ஒரு வீட்டின் மதில் சுவரில் தன் கீரைக்கூடையை தாங்கலாக வைத்தார்.

இது தான் சமயம் என்று என் விவாதத்தை தொடங்கும் முன் முதியவரிடம் இருந்து 3 கீரை கட்டை ரூ 60 கொடுத்து வாங்கிக் கொண்டேன்.

“பாரம் குறைந்ததா?” என்று ஆரம்பித்தேன்.

“இதில் 15 கிலோவிற்கு மேலே என் முதலாளி ஏற்றி வைத்து இருக்கிறார்”

“அங்க, அங்க நின்னு சற்று இளைப்பாறி பின் என் வியாபாரத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்”

“எங்கிருந்து வருகிறீர்கள்?”

“மாத்தூர்”

(இது குடந்தையில் இருந்து 5 கிலோ மீட்டர் இருக்கும்)

அங்கு உள்ள அந்த நிலக்கிழார் தன் வயலில் விளைந்த விளைச்சலை வியாபாரத்திற்காக இந்த பாட்டியிடம் கொடுத்து இருக்கிறார் என்பதை அறிந்தேன்.

“வயது?”

“அது என்ன? 60க்கு மேலத்தான் இருக்கும்”

“சரி; இதில் எவ்வளவு ரூபாய்க்கு கீரை இருக்கும்?”

“ரூ2000 முதல் ரூ2500 வரை”

“இன்னும் எவ்வளவு தூரம் நடப்பீர்கள்?”

“மாகமகம் குளம் வரை”

(இது செல்ல இன்னும் 8 கி.மீ செல்ல வேண்டும்)

“ஆக நீங்க ஒரு நாளைக்கு சுமார் 13 to 15 கி.மீ நடக்குறீங்க?”

“அததெல்லாம் எனக்கு தெரியாது!!”

“அப்புறம் மணி 11 அல்லது 12 மணிக்கு எல்லா கீரையும் விற்ற பிறகு (சில சமயம் தங்கிவிடும்) டவுண் பஸ் பிடித்து மாத்தூருக்கு மதியம் 2 மணிக்கு சென்று விடுவேன். அங்கே போய் தான் சாப்பாடு”

நெஞ்சம் கனகனத்தது.

தினமும் 10000 அடி நடந்தால் மன அழுத்தம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வலி இன்ன பிற வியாதிகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.

வாட்சப்பில் அதிகம் பகிரப்படும் செய்தியை இந்த அம்மையார் அறிந்து இருக்க வாய்ப்பில்லை.

ஆனால் அந்த வாய்ப்பு வரமாக நெளிந்த உடலுடன், தினமும் தன் உழைப்பை மூலதனமாக கொண்டு செயல்படும் இந்த 65 வயது பாட்டியின் தேகமே ஒரு சான்றாக இருந்தது.

நான் நடந்து செல்ல, எனக்கு வேண்டிய விட்டமினையும், தாது சத்துக்களையும் கொடுத்து விட்டு, இயற்கை தந்த அந்த சூரிய ஒளியில் தன் தேகத்தை மிளிர வைக்கும் அந்த மாதா என் குடும்ப விளக்கு.

அந்த மாதாவை என் தேசிய கீதம் என்பேன் !!!

“கீரை… கீரை….பச்சைக்கீரை, கரிசலாங்கண்ணி, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, முளைக்கீரை…..” நகர்ந்தாள் அந்த அம்மை.

அந்த ஒலி இன்னும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

வீட்டில் பேரனோ, பேத்தியோ அந்த ஒலியை நம்பி காத்துக் கொண்டு இருப்பது நிச்சயம்.

செல்வராஜ் ராமன்
18/33, நெல்லுக்கடை தெரு,
கும்பகோணம் 612001.
கைபேசி 9095522841.