வேதியியல் படித்தால் வெற்றி உனக்கு!

நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன.

நாம் காலையில் எழுந்து பல் துலக்கும் பேஸ்ட், குளிக்கும் சோப்பு, உண்ணும் உணவு என எல்லாவற்றிலும் பல வகையான வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன. இவற்றில் எல்லாம் வேதிப்பொருட்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும்.

இந்த வேதிப்பொருட்களை பற்றி படிக்கக்கூடிய அறிவியல் பிரிவிற்கு வேதியியல் (Chemistry) என்று பெயர்.

வேதியியல் படிப்பதன் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகள், ஆராய்ச்சி அனுபவங்கள், மருத்துவத் துறையில் வேதியியலின் பங்கு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆகிய அனைத்தும் நம் வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் ஐயமில்லை!

பத்தாம் வகுப்பு முடித்தவுடன் மேல்நிலைக் கல்வியில் வேதியியல் பாடம் (Chemistry) அடங்கியுள்ள ஒரு பிரிவை தேர்ந்தெடுத்து படியுங்கள்.

கெமிஸ்ட்ரி கடினமாக இருக்கும். ’நம்மால் படிக்க முடியாது!’ என்ற தாழ்வு மனப்பான்மையை சற்று தள்ளி வையுங்கள்! அதுவே உங்கள் வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

அடுத்தவர்களுக்காக வேதியியல் படிக்க வேண்டாம். உங்களுக்காக படியுங்கள்! அது உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

அழைக்கிறது ஐஐடி!

பன்னிரெண்டாம் வகுப்பு படித்த பிறகு கல்லூரியில் ஒருங்கிணைந்த வேதியியல் (Integrated M.Sc (Chemistry)) படிப்பை ஐஐடி(IIT) என்று சொல்லக் கூடிய இந்திய தொழில்நுட்ப கழகங்கள் வழங்குகின்றன.

நமது இந்தியாவில் மொத்தம் 23 ஐஐடிக்கள் (IIT) உள்ளன. வருடம் தோறும் ஜே.இ.இ (JEE- Joint Entrance Exam) என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த நுழைவுத் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று இந்தியாவில் உள்ள ஐஐடியில் எங்கு வேண்டுமானாலும் உதவித் தொகையுடன் படிக்கலாம்.

ஐஐடியில் படிக்கும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். மேல்நிலை கல்வியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஐஐடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

வேதியியலின் உட்பிரிவுகள்

வேதியியல் படிப்பானது பல வகையான உட்பிரிவுகளுடன் பல துறைகளைக் கொண்டுள்ளது.

கனிம வேதியியல் (Inorganic Chemistry)

கரிம வேதியியல் (Organic Chemistry)

பௌதிக வேதியியல் (Physical Chemistry)

உயிர் வேதியியல் (Bio – Chemistry)

பலபடி வேதியியல் (Polimer Chemistry)

உட்கரு வேதியியல் (Nuclear Chemistry)

தொழிற்சாலை வேதியியல் (Industrial Chemistry)

இளநிலை வேதியியல் முடித்த மாணவர்கள் முதுநிலை வேதியலில் ஏதாவது ஒரு உட்பிரிவை எடுத்து படிக்கலாம். அல்லது பொதுவான முதுநிலை வேதியியல் M.Sc (Chemistry) படிக்கலாம்.

இந்திய கல்வி நிறுவனங்கள்

வேதியியல் படிப்பினை பல்வேறு இந்திய கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.

IIT (Indian Institute of Technology) இந்திய அறிவியல் தொழில்நுட்ப கழகம்,

NIT (National Institute of Technology) தேசிய அறிவியல் தொழில்நுட்ப கழகம்,

TIFR (Tata Institute of Fundamental Research) டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்,

IISER (Indian Institute of Science Education and Research) இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி,

NISER (National Institute of Science Education and Research) தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி,

BARC (Baba Atomic Research Centre) பாபா அணு ஆராய்ச்சி மையம்,

IASC (Indian Academy of Science) இந்திய அறிவியல் கழகம்,

IISC (Indian Institute of Science) இந்திய அறிவியல் தொழில்நுட்ப கழகம்,

மத்திய பல்கலைக்கழகங்கள்,

மாநில பல்கலைக்கழகங்கள்,

கல்லூரிகள் போன்றவைகள் வேதியலில் பிரிவில் M.Sc முதுநிலை பட்ட படிப்பையும், Ph.D என்ற ஆராய்ச்சி படிப்பையும் வழங்குகின்றன.

Ph.D பட்டம் பெற்றவர்கள் முதுநிலை ஆராய்ச்சி படிப்பு PDF (Post Doctoral Fellow) நல்ல உதவித்தொகையுடன் இந்தியாவிலும் பண்ணலாம்.

நுழைவுத் தேர்வுகள்

ஐஐடி (IIT) நடத்தும் கேட் (GATE) என்ற தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் உள்ள அனைத்து ஐஐடிகளிலும் ஆராய்ச்சி படிப்பை உதவித் தொகையுடன் படிக்கலாம். 

அதைப் போலவே NIT (National Institute of Technology) தேசிய தொழில்நுட்ப கழகம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று உதவித் தொகையுடன் இங்கேயும் படிக்கலாம்.

மத்திய பல்கலைக்கழகங்கள் நடத்தும் CUCET (Central University Common Entrance Test) தேர்வில் தேர்ச்சி பெற்றால் முதுநிலை வேதியியல் மற்றும் ஆராய்ச்சி படிப்பை இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் எங்கு வேண்டுமானாலும் உதவித்தொகையுடன் படிக்கலாம்.

CSIR- (Council of Scientific and Industrial Research) இந்த தொழிலக ஆய்வு நிறுவனம் இந்தியாவில் 38 இடங்களில் உள்ளது. வேதியலில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவுடன் இந்த CSIR அமைப்பு நடத்தும் நெட் NET (National Eligibility Test) என்ற தேர்வில் தேர்ச்சி பெற்றால் நல்ல உதவித் தொகையுடன் கூடிய ஆராய்ச்சி பட்டப்படிப்பை (Ph.D) மேற்கொள்ளலாம்.

இல்லையெனில் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியலாம். மாநில பல்கலைக்கழகங்கள் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று உதவித்தொகையுடன் முதுநிலை வேதியியல் மற்றும் ஆராய்ச்சி படிப்பை படிக்கலாம்.

வெளிநாட்டுக் கல்வி

முதுநிலை வேதியியல் M.Sc மட்டும் முடித்தால் வெளிநாடுகளான தைவான், தென்கொரியா,வடகொரியா, ஜெர்மன், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் அதிகமான உதவி தொகையுடன் Ph.D ஆராய்ச்சி பண்ணுவதற்கும் வேலைக்கு செல்வதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

Ph.D பட்டம் பெற்றவர்கள் வெளிநாடுகளில் PDF- (Post Doctoral Fellowship) மேற்கொண்டு ஆராய்ச்சி படிப்பை படிக்கலாம்.

வேதியியல் வேலை வாய்ப்புகள்

B.Sc., (Chemistry) இளநிலை வேதியியல் அல்லது M.Sc (Chemistry) முதுநிலை வேதியியல் படித்து முடித்து இருந்தால் படிப்பிற்கு ஏற்றார் போல் வேலை கிடைக்கும்.

இந்த வேதியியல் படிப்பிற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தோல் தொழிற்சாலை, ரசாயன தொழிற்சாலை, உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை, குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை, பெட்ரோலியம் தயாரிக்கும் தொழிற்சாலை, மருந்து மாத்திரைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் உங்களுக்கு வேலை திறமையை பொறுத்து கிடைக்கும்.

இளநிலை வேதியியல் அல்லது முதுநிலை வேதியியல் படித்து முடித்தவுடன் கல்வியியல் கல்லூரிகளில் சேர்ந்து கல்வியியல் (B.Ed) படித்து முடித்து பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியலாம்.

CSIR- NET தேர்ச்சி பெற்றால் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியலாம்.

வேதியியல் ஆராய்ச்சியில் அதிக திறமை இருந்தால் CSIR, IIT , NIT, BARC, TIFR, IISER, NISER IASC, IISC போன்ற பெரிய ஆராய்ச்சி நிறுவனங்களில் விஞ்ஞானியாக (Scientist) பணிபுரியலாம்.

புதிய மருந்துகளை கண்டுபிடிக்கலாம்!

முதுநிலை வேதியியல் படிப்பு முடித்தவுடன், நீங்கள் ஆராய்ச்சியில் ஈடுபடலாம். நமது நாட்டில் இன்னும் சில வகையான நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

சர்க்கரை நோய், எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற பல நோய்களுக்கு புதிய மருந்துகளை கண்டுபிடிக்கலாம். இதன் மூலம் நோபல் பரிசுகளையும் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வேதியியல் படிப்பானது சிறந்த துறையாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்த துறையை எடுத்து படிப்பதன் மூலம் பல்வேறு ஆராய்ச்சிகளிலும் ஈடுபடலாம்.

வேதியியல் என்பது புரிந்து படித்தால் எளிமையானதாகவே இருக்கும்.

CSIR, NIT, IIT, IISER, NISER, BARC ,TIFR, IISc, IASC போன்ற புகழ் வாய்ந்த இடங்களுக்குச் சென்று இந்த வேதியியல் படிப்பை படிக்கலாம்.

அதற்கு நம்முடைய மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இந்த புகழ் வாய்ந்த இடங்களுக்கு செல்லும் வாய்ப்பை பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் நமது தமிழக மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது உறுதி.

பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) முதலாம் ஆண்டு
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
Cell- 9361723667
sivakumarpandi049@gmail.com

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.