காதல் என்று மூன்று எழுத்துக்களில் சொல்லி விடுகிறோம். ஆனால் இருமனங்கள் அதற்காக போராடி பெரும் அவமானங்களுக்கும் அவப்பெயருக்கும் ஆளாகிறார்கள்.
முருகன் என்ற பையன் தேவகி என்ற பெண்ணை காதலித்த கதைதான் இது.
முருகனும் தேவகியும் ஒரே பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்கள். முருகனின் சித்தப்பா தேவகி வீட்டின் பக்கம் புதிதாக வீடு கட்டி குடிவந்தார்.
முருகனை அவங்க சித்தி அம்புலு என்ற செல்லப் பெயர் வைத்து அழைப்பார். அதனைக் கண்ட தேவகி முருகனை அந்த பெயர் வைத்து கூப்பிட்டு கிண்டல் செய்தாள்.
இதனை அறிந்த முருகனின் தோழன், தேவகி உன்னைக் காதலிக்கிறாள் என்று முருகனிடம் கூறினான். அதனால் முருகனுக்கு தேவகி மேல் காதல் ஆரம்பித்து விட்டது. தேவகிக்கும் தெரிய வந்தது முருகனின் காதல்.
தேவகி முருகனிடம் சண்டை போட்டாள். பத்து நாட்கள் பேசாமல் இருந்தாள். ஆனால் தேவகிக்கும் முருகன் மீது காதல் தோன்றியது. இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.
இருவருக்கும் இடையில் பல பிரச்சினை, சண்டை வந்தாலும் ஒருவருக்கு ஒருவர் பேசாமல் இருக்க மாட்டார்கள். அவர்கள் காதல் கல்லூரி வரை வந்தது.
இருவரும் ஒரே கல்லூரியில் படித்தார்கள். முருகன் கனிணி அறிவியல் படித்தான். தேவகி கணிதவியல் படித்தாள். தேவகி பயந்த சுபாவம் உடையவள். முருகனிடம் கல்லூரியில் பேசப் பயப்படுவாள். ஆனால் முருகன் தேவகியை உயிராய் உருகி சுற்றி சுற்றி வருவான்.
இருவரும் கல்லூரி இரண்டாமாண்டில் நுழைந்தார்கள். அப்போதே வினையும் வந்தது.
தேவகியின் சித்தப்பா மகன் சரவணன். அவன் தேவகியின் காதலை அறிந்தான். முருகனும் தேவகியும் வாட்ஸ் ஆப் மூலம் பேசி உரையாடுவதை அறிந்து விட்டான் சரவணன். இதை அறிந்த தேவகி சினம் கொண்டு சரவணனிடம் பெரும் சண்டை போட்டாள்.
இதனால் தேவகி வீட்டிற்கு காதல் தெரிந்து விட்டது. அவள் பெற்றோர், அண்ணன் தேவகியை அடித்து விட்டார்கள்.
இதனை அறிந்த முருகன் தன் வீட்டார்களிடம் அவன் காதலைச் சொன்னான். அவர்களும் தேவகி வீட்டில் பேசினார்கள். ஆனால் தேவகி வீட்டாருக்கு விருப்பமே கிடையாது. தேவகி பிடிவாதமாக இருப்பதால் சரி என்று சொன்னார்கள்.
ஆனால் முருகனுக்கு அப்போது 19 வயதுதான் நடந்தது. அக்காவிற்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். முருகனின் 21 வயதில்தான் திருமணம் செய்து வைக்கக் கூடிய சூழ்நிலை. ஆனால் தேவகி வீட்டில் உடனே திருமணம் என்ற பேச்சு; சண்டைகள்.
தேவகிக்கு ஒரே மனப் போராட்டம். இதற்கெல்லாம் காரணம் சரவணன் என்று அவள் மனதில் பெரும் கோபம். முருகனும் தேவகியும் அதிக காதலும் அன்பும் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பத்து வருடமாக காதலித்து வருகிறார்கள்.
ஆனால் விதியும் கூட அவர்களுக்கு மாறாக நிற்கிறது. நட்சத்திர பொருத்தம் கூட அவர்களுக்கு இல்லை. அவர்கள் ஜாதகத்தை பார்த்த ஜோசியர் இருவரும் பிரிந்து விடுவீர்கள் என்று கூறுகிறார்.
அவர்கள் சேர என்னதான் வழி?
முருகனின் 21 வயதில் இருவருக்கும் திருமணம் நடக்குமா?
ஒரு பெண்ணையும் ஆணையும் பெரும் கஷ்டங்களுக்கு ஆளாக்கி, விடை சொல்லாமல் நிற்கிறது காதல்.