ஓடி விளையாடாதே பாப்பா; ஓயாமல் படி பாப்பா

விளையாட்டு

ஓடி விளையாடாதே பாப்பா; ஓயாமல் படி பாப்பா என்பது தான் எல்லா இந்தியப் பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறையாக இருக்கின்றது.
அதனால்தான் ஒலிம்பிக்கில் காணாமல் போன குழந்தையாக இந்தியா இருக்கின்றது.

விளையாட்டு சோறு போடாது; எனவே விளையாட்டு என்பது நேரத்தை வீணாகச் செலவிடுவது என்று நாம் எண்ணுகிறோம்.

கடுமையான போட்டி நிலவும் இந்த காலத்தில் படிப்பை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும்; விளையாட்டு என்பது தேவையற்றது என்ற கருத்து நிலவுகிறது.

ஆனால் ஒரு மனிதனின் முழுமையான வளர்ச்சிக்கு விளையாட்டு ஒரு கட்டாயமான தேவை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பரபரப்பான இந்த உலகில் வேகம் நிறைந்த காலத்தில் உழைப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல. வாழ்வு சிறக்க போதிய அளவு ஓய்வும் அவசியம்.

ஓய்வு என்றால் படுத்து உறங்குவதல்ல, செய்கின்ற வேலையை மாற்றிச் செய்வதும் விருப்பமானவர்களுடன் சேர்ந்து உறவாடுவதும் விளையாடிக் களிப்பதும் ஆகும்.

ஒவ்வொருவரும் நமக்குப் பிடித்த விளையாட்டைத் தேர்வு செய்து அதில் நல்ல பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுவதும் விளையாடுவதைப் பழக்கமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் விளையாடும்போது உடலில் உள்ள கழிவு உப்புகள் வியர்வையாக வெளியேறும். அந்த வியர்வை நீராவியாகும் போது நம் உடல் குளிர்ந்து உடல் வெப்பம் சீராகின்றது.

நாம் விளையாடும்போது நம் உடல் பருமனைக் குறைக்க உதவும் ‘டாப்மைன்’ என்ற பொருள் மூளையில் சுரக்கின்றது.

விளையாட்டு நம் உடலை ஆரோக்கியத்துடனும் கட்டுக்கோப்புடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது. நோய்கள் நம்மை அணுகவிடாமல் தடுக்கும் கவசமாக இருக்கின்றது.

உடலும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையதால் உடல் புத்துணர்ச்சி அடைவதால் மனமும் மகிழ்ச்சியடைகின்றது.

வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும், விரைந்து முடிவெடுக்கும் திறனையும், நம்மைப் பற்றி சுயமதிப்பீடு செய்து கொள்ளவும் விளையாட்டு நமக்குக் கற்றுக் கொடுக்கின்றது.

குழுவாகச் செயல்படும் பண்பையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையையும், நட்புணர்வையும், சகிப்புத்தன்மையையும் விளையாட்டு சொல்லிக் கொடுக்கின்றது.

சுருங்கச் சொன்னால் தலைமைப் பண்பு வளர்க்கும் கருவி என்று விளையாட்டைச் சொல்லலாம்.

விளையாட்டை நாம் மறந்ததால்தான் பொழுதுபோக்கு என்பது போதை என்று மாறிவிட்டது.

முன்பெல்லாம் கிராமங்களில் காலை மாலை வேளைகளில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இப்பொதெல்லாம் சிறுவர்கள் விளையாடும் காட்சி அபூர்வமாகி விட்டது.

ஒவ்வொரு ஊரிலும் விளையாட்டு மைதானங்களை உருவாக்கி நன்கு பராமரித்து வரவேண்டும். சிறுவர் பெரியவர் என அனைவரும் உற்சாகத்துடன் விளையாடி வந்தால் அந்த ஊர் மகிழ்ச்சி நிறைந்த ஊராக இருக்கும்.

மாவட்ட அளவில், மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசும் பெரிய நிறுவனங்களும் நல்ல வசதி செய்து கொடுத்தால் அவர்கள் உலக அரங்கில் நம் நாட்டிற்குப் புகழ் சேர்ப்பார்கள்.

விளையாட்டு வீணர்களின் வேலை அல்ல; புத்திசாலிகளின் தேவை என்று உணர்வோம்; விளையாடி மகிழ்வோம்.

– வ.முனீஸ்வரன்

 

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.