மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் அந்தக் கடைவீதியில் போவோர், வருவோரிடமெல்லாம் கையேந்தி பிச்சை கேட்பவர்களின் மத்தியில் வித்தியாசமான ஒருவன் பிச்சை கேட்டுக் கொண்டிருந்ததை கொஞ்ச நாட்களாகக் கவனித்துக் கொண்டிருந்தான் பிரகாஷ்.
அன்று அலுவலகம் சென்று கொண்டிருந்த சமயம் தன்னிடம் பிச்சை கேட்டு கையேந்திய அவனிடம் பிரகாஷ், “உனக்கு என்னப்பா குறைச்சல்? கை, கால் எல்லாம் நல்லாதானே இருக்கு? இந்த வயசில உழைச்சு சம்பாதிக்க வேண்டிய நீ, இப்படி பிச்சை எடுக்கிறயே, உனக்கே இது நியாயமாப்படுதா?”
பிரகாஷின் கேள்விக்கு அவன் பதிலளிக்கவில்லை. அங்கிருந்து நகர ஆரம்பித்தான்.
சேவ் செய்யப்படாத முகம். தலையில் காவிநிற முண்டாசு. காவிநிறத் துண்டு ஒன்று உடம்பைப் போர்த்தயிருக்க, கொஞ்சங்கூட கூச்சமோ, தயக்கமோ இன்றி ஒவ்வொருவரிடமும் கையேந்தி பிச்சை கேட்டுக் கொண்டிருந்தவனை அழைத்தான் பிரகாஷ்.
அருகில் வந்த அவனிடம், “எவ்வளவோ ஓட்டல்கள் இருக்கு. மூன்று வேளையும் டிபன், சாப்பாடு தந்து நாள் ஒன்றுக்கு ஐநூறு ரூபாய் வரை வேலைக்குத் தகுந்தாற்போல் சம்பளம் கொடுக்கிறாங்க. எவ்வளவோ இடங்கள்ல ஆள் கிடைக்காமல் வேலைகள் காத்துக் கிடக்கும்போது கௌரவமா உடலை வருத்தி உழைச்சு சம்பாதிக்காமல்” அவன் தலைகுனிந்தபடியே நிற்க, மீண்டும் தொடர்ந்தான் பிரகாஷ்.
“அந்த ஸ்கூல் வாசல்ல சாக்கு விரித்து பழங்கள், வேர்கடலை எல்லாம் விக்கிற அந்த வயசான அம்மாவைப் பாரு. தன்னம்பிக்கையோட இந்த தள்ளாத வயசுலகூட எப்படி உழைக்கிறாங்க பார். நல்ல ஆரோக்கியமே ஆண்டவன் நமக்குப் போட்ட பிச்சைதான்.”
‘உழைப்பு’ங்கிறது பலாப்பழம் மாதிரி. அதோட வெளிப்புறத் தோற்றம் கரடு முரடாய்த்தான் இருக்கும். உள்ளே இருக்கும் சுளைகளை சுவைக்க விரும்பினால் கடின தோல் பகுதிகளை நீக்க பாடுபடத்தான் வேண்டும்.
அதே மாதிரிதான் ‘பலா’ போன்ற உழைப்பும். உடலை வருத்தி உழைக்காமல், அலட்டிக் கொள்ளாமல் வாழ்க்கை நடத்த நினைத்தால், பலாச்சுளை போன்ற வாழ்க்கை வேப்பங்காய் கசப்புதான். ஆரோக்கியமா இருக்கிற நீ இனிமேலாவது உழைச்சு சம்பாதிக்கப் பாரு.”
பிரகாஷ் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அந்த ஆள் சட்டை செய்யவில்லை. பிரகாஷை ஒரு மாதிரியாகப் பார்த்தவாறே அவனை விட்டு நகர்ந்து, போவோர் வருவோரிடமெல்லாம் கையேந்திக் கொண்டிருந்தான்.
அன்று மாலை அலுவலகம் முடிந்து பஸ்ஸில் வந்து கொண்டிருந்தான் பிரகாஷ்.
ஸ்டாப் ஒன்றில் பஸ் நிற்க, ஜன்னல் வழியாக எதேச்சையாக பார்வை எதிரே இருந்த ‘டாஸ்மார்க்’ கடைக்குச் சென்றது.
அவனுடைய கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. காலையில் காவி உடையில் பிச்சை எடுத்த அதே ஆள், தனது சாமியார் கோலத்தை மாற்றி கைலி, சட்டையுடன் கடைக்காரரிடம் ‘சரக்கை’ வாங்கிக் கொண்டிருந்தான்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!