கணநாத நாயனார் – சம்பந்தரை வணங்கி கையிலையை அடைந்தவர்

கணநாத நாயனார் பழம்பெரும் புகழ் பெற்ற தலமான சீர்காழியில் பிறந்த வேதியர். அவர் சீர்காழியில் வாழ்ந்த வேதியர்களுக்குத் தலைவராகவும், அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் விளங்கினார்.

அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் கணநாதர். அவர் இறைவன் மற்றும் அடியவர்கள் பால் கொண்டிருந்த பேரன்பின் காரணமாக கையிலாயத்தில் சிவகணங்களின் தலைமைப் பதவியை இறையருளால் கிடைக்கப் பெற்றவர்.

கணநாதர் தம்முடைய மரபுக்கு ஏற்ப ஒழுக்கத்தில் சிறந்து, சீர்காழியில் உள்ள தோணியப்பர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட்டு பலவகையான தொண்டுகளைச் செய்து வந்தார்.

திருக்கோவில், நந்தவனம் மற்றும் தெப்பம் முதலியவற்றை பாதுகாத்து அவ்வப்போது செப்பனிட்டு சிறப்பாக வைத்துக் கொள்வதை தம்முடைய வாழ்நாள் பணியாகக் கொண்டு அவற்றைத் திறம்படச் செய்து வந்தார்.

மேலும் அவர் திருக்கோவிலுக்குத் திருத்தொண்டு செய்ய விரும்பி வந்தவர்களை, அவரவர்களுக்கு ஏற்றவாறு தொண்டு செய்யும் வழியில் பயிற்சிகள் தந்து, சிறப்பாக அத்தொண்டில் ஜொலிக்கச் செய்தார்.

நந்தவனப்பணி செய்வர்களுக்கு எவ்வாறு செடி கொடிகளைப் பாதுகாத்து வளர்ப்பது என்பதைக் கற்றுத் தந்தார். பூக்களைப் பறிக்கும் முறையையும், அப்பூக்களை மாலையாகத் தொடுக்கும் பணியையும் சிலருக்குக் கற்றுக் கொடுத்தார்.

திருமஞ்சனப் பணி செய்பவர், இரவும் பகலும் ஆலயத்தில் திருவலகிடுபவர், மெழுகுபவர், திருவிளக்கு எரிப்பவர், திருமுறைகளை எழுதுபவர் மற்றும் அத்திருமுறைகளை ஓதுபவர் ஆகிய பலவகைத் தொண்டர்களுக்கும் முறையான பயிற்சிகளை தந்ததோடு அவர்களை அச்செயலில் சிறந்து விளங்கும்படி ஊக்குவித்தார்.

இதனால் கணநாதரைச் சுற்றிலும் எப்போதும் தொண்டர் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இல்லறத்தில் வழுவாது நின்று, சிவத்தொண்டில் ஆர்வம் கொண்டு, தொண்டு புரிபவர்களுக்கு ஆதரவும் ஆக்கமும் அளித்து, யாவரும் நன்கு மதிக்க வாழ்ந்தார் நாயனார்.

அவருக்கு சீர்காழியில் தோன்றிய ஞானக் கொழுந்தான திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரிடம் அளவற்ற பக்தி உண்டாயிற்று. அவர் ஞானசம்பந்தரின் திருவடிகளை போற்றி வணங்கி வந்தார்.

தொண்டருக்குத் தொண்டராகவும் தொண்டர்களுக்கு நாதராகவும் ஞானசம்பந்தர் பக்தராகவும் வாழ்ந்த இப்பெருமான், சிவனாரின் திருவருளால் திருக்கையிலையை அடைந்து கணநாதராகும் பதவி பெற்றுச் சிறப்படைந்தார்.

கணநாத நாயனார் குருபூஜை பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

முறையான சிவவழிபாடு மற்றும் சிவனடியாரான சம்பந்தரை போற்றி கையிலையில் சிவகணங்களுக்கான தலைமைப் பதவியைப் பெற்ற கணநாத நாயனாரை, சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்‘ என்று புகழ்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.