கண்ணின் கருவிழி பேசும் – கவிஞர் கவியரசன்

கண்ணின் கருவிழி பேசும் – உன்
காதலில் புதுமணம் வீசும் – அடி
சின்னஞ்சிறு நடைகொண்டு
அன்னத்தின் சாயலில்
வாடி – இன்பம் தாடி!

இன்பத்தேன் கொட்டிடும் அருவி நீ
இணங்கிட மறுத்தாலே நான் துறவி
என் எண்ணத்துள் எழிலாட்சி
எந்நாளும் நடத்திடும்
ராணி – கொஞ்ச – வாநீ!

யார் என்ன செய்வார்கள் கண்ணே – அடி
எதற்குதான் அச்சமோ முன்னே – பெரும்
போர்மூண்டுப் போனாலும்
பாராண்டத் தமிழன்நான்
வெல்வேன் – மணம் கொள்வேன்!

அன்பொன்றே குடிகொண்ட அகமோ – அந்த
அழகிய குமதம் உன்முகமோ – நல்
பொன்வார்த்த மேனியில்
என்னை நீ போர்த்திடு
கரும்பே – முல்லை – அரும்பே!

வஞ்சிநீ மீட்டும்நல் வீணை – உனை
வளைத்திட இதழ் சிந்தும் தேனை – மனம்
கெஞ்சிடவே செய்வதேன்
கொஞ்சிடும் மஞ்சமே
முறையா – வீண் திரையா!

பேசுவோர் பேசட்டும் போடி – பெரும்
பிழையில்லை காதலும் வாடி – அடி
வீசிடும் தென்றலும்
வேள்வியை எழுப்புது
சுகமா – நல்ல பதமா!

தண்டையின் ஓசையே தூதாய் – வந்து
தவிப்பினை தீர்த்ததே தோதாய் – உன்
கொண்டையில் கோலோச்சும்
செண்டான மல்லியும்
மயக்கும் – என்னை அழைக்கும்!

உடுக்கையின் பிடியது இடையா – நான்
உன்னுடனே உறவாடத் தடையா – இடும்
தடுப்பணை தகர்த்தெறி
தங்கமே கைப்பிடி
தோதாய் – எழில் மாதாய்!

நால்வகை குணம் அதை ஒதுக்கு – நான்
நல்லவன் தான்அச்சம் எதற்கு – என்
தோள் சாய்ந்து கொண்டாலே
தோல்வியே இல்லையே
மதியே – பொய் விதியே!

ஒருகையில் ஓசையும் வராது – ஓடி
ஒளிந்திட ஆசையும் தீராது – துளிர்
கரத்தினால் கரம் பற்றும்
உரத்தினை மனம் ஏற்றி
வாடி – முத்தம் தாடி!

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250

கவிஞர் கவியரசன் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.