சில மாதங்களுக்கு முன் ஒரு சாதாரண நாளில், அதுவும் ஆன்லைன் வகுப்பில் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான நிகழ்வொன்று சிறு கட்டுரையாக இதோ:
இன்ட்ரோடக்சன் டூ ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Introduction to Artificial Intelligence) வகுப்பு சென்று கொண்டிருந்தது.
இதுவரை கற்பனை கதைகளில் மட்டும் படித்து ரசித்த பாடம்.
மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று எண்ணி ஆரம்பத்தில் நிறைய ஆர்வத்துடன் இணைய வழி வகுப்பைக் கவனிக்க ஆரம்பித்தேன்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகு தான் தெரிந்தது இதில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன என்று.
இருப்பினும் தொடக்கத்திலிருந்து ‘தியரி’யாகவே வகுப்பு சென்று கொண்டிருந்ததாதல் சுவாரசியமும், ஈடுபாடும் குறைய ஆரம்பித்தன.
சற்றென்று,’கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு‘ என்ற எழுத்தாளர் சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதை ஞாபகத்திற்கு வந்தது.
அக்கதையில் வரும் அறிவியல் அறிஞரின் கண்டுபிடிப்பு, ஒரு கதை எழுதும் கணினி. கதையின் வகை மற்றும் கதாபாத்திரங்களின் எண்ணிக்கையைக் கணினியில் தட்டச்சு செய்தால் போதும்.
அது தானாகவே ஒரு கதையை உருவாக்கி, சொற்களையும் வாக்கியங்களையும் சரியான முறையில் வடிவமைத்து நல்லதொரு கதைக்கருவுடன் தட்டச்சு செய்து கொடுக்கும். அக்கணினி எழுதிய கதையானது புதிதாக இருக்கும்.
இதன் சிறப்பம்சமே மனிதனின் கற்பனைத் திறனிற்குச் சமமாக அல்லது சவாலாக அமைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறான கணினியை வடிவமைக்க ஏ.ஐ. (AI – Artificial Intelligence) ப்ரோக்ராம் பண்ணப்பட்டிருக்க வேண்டும்.
இக்கதை வெளிவந்த காலக் கட்டத்தில் ஏ.ஐ. என்னும் நுட்பம் அத்தனை பெரிதாக வளர்ந்திருக்கவில்லை. ஆனால், அதே நிலைமை இப்பொழுது இல்லையே! தொழில்நுட்பத்தில் எத்தனையோ முன்னேற்றம் அடைந்திருக்கிறோமே!
வகுப்பு முடிந்ததும், விளையாட்டாக ‘கதை உருவாக்கும் தளம்’ என்று கூகுளில் தேடித் பார்த்தேன். எதிர்பார்த்தது போலவே சில தேடல் முடிவுகளும் வந்து குவிந்தன.
முதலாவதாக தென்பட்ட ‘ஆன்லைன் ஸ்டோரி மேக்கர்’ என்ற பக்கத்தைத் தேர்ந்தெடுத்தேன். உள்ளே நுழைந்ததும், முன் சொன்ன கதையைப் போல, இங்கும் சில விவரங்கள் தர வேண்டியிருந்தது.
கதையின் வகை, கதை மாந்தர்களின் எண்ணிக்கை, பெயர், வயது, கதை நிகழும் இடம், அதிகபட்ச வார்த்தைகள் என பட்டியல் கொஞ்சம் பெரிதாகத் தான் சென்றது.
முடிவில், கணினி சுயமாக எழுதிய கதை கண் முன்னே, அதுவும் நொடிகளில் தோன்றியது! மிகவும் அசந்துதான் போனேன்.
அக்கதையைப் படிக்கும் முன்பு, ஏதோ 200-300 சொற்களை ஒன்றாகப் பத்தி பத்தியாக அமைத்துத் தந்திருக்கிறது என்று நம்பிக்கை ஏதுமில்லாமல் படிக்கத் தொடங்கினேன்.
படித்து முடித்ததும் நான் அடைந்த வியப்பை அளவிட முடியாததாக இருந்தது.
ஒரு இடத்தில் கூட கதை புரியாமலோ, இலக்கணப் பிழையோ இல்லை. எத்தனை நுணுக்கமான கலை கதை எழுதுவது! நிகழ்கால தொழில்நுட்பம் அதை மனிதனின் உதவியின்றி வாசகரின் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துத் தருகிறது.
இருப்பினும் இத்துடன் விடுவதாக நானில்லை.
கதை மட்டும் தான் எழுத முடியுமா உன்னால்? கவிதை வராதா? என்று அடுத்த சவாலை முன்வைத்தேன்.
மறுபடியும் ‘ஆன்லைன் போயெம் ரைட்டரை’ தேடினேன். கிடைத்தது. விவரங்களைக் கொடுத்தேன்.
அடுத்த அதிசயமும் வந்து நின்றது. ‘பொயெட்டிக் டிவைசஸ்’ (Poetic devices) என்று சொல்வார்களே, அதுவும் இடம் பெற்றிருந்தது. இதற்கு மேல் சவாலெல்லாம் வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டேன்.
இந்த சம்பவத்திற்குப் பின் சில யோசனைகளும் கேள்விகளும் வந்து சென்றன.
‘ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் புத்தம் புது கதை, கவிதை என்று அள்ளி விடுகிறது, ஏ.ஐ தொழில்நுட்பம்.
அதன் வளர்ச்சியை நினைத்துப் பூரிப்பதா, இல்லை இதே வேகத்தில் சென்றால் மனித எழுத்தாளர்கள் மற்றும் என் போன்ற வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் நிலை என்னவாகும் என்று கவலை கொள்வதா?
ஒரு சுவாரசியமான விஞ்ஞான கதையைப் படிக்கிறோம். சிறிது காலம் கழித்து கதையில் நடந்ததைப் போலவே நம் நிஜ வாழ்விலும் நிகழ்ந்தால்?
அதனால் நமக்குத் துன்பம் நேராமல் இருந்தால் பரவாயில்லை. அதே நிலைமை தலைகீழானால்? நினைத்துப் பார்க்க சற்று பயமாகத்தான் இருக்கிறது.’
இப்போது நான் படித்த ஏலியன் வகைக் கதைகளை நினைத்துப் பார்க்கிறேன்!
ஹ்ரிஷிகேஷ்