நமக்கு நன்மை செய்பவர்களை எந்த சூழ்நிலையிலும் புறந்தள்ளக் கூடாது என்பதை கருணையின் சிகரம் என்ற இக்கதை கூறுகிறது. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பச்சை வனம் என்ற காட்டில் ஓங்கி உயர்ந்த மரம் ஒன்று இருந்தது. அம்மரத்தில் ஏராளமான பறவைகள் பகலில் வந்து அமரும்.
காக்கை, குருவி, செம்பருத்தான் உள்ளிட்ட பறவைகள் கூடுகட்டி வசித்து வந்தன.
அம்மரத்தில் இருந்த பொந்தில் கிளி ஒன்று வசித்து வந்தது.
தினமும் அக்கிளியானது மரத்தில் உள்ள பழங்களைத் தின்றுவிட்டு அந்த மரத்துடன் பேசி சிரித்து விளையாடும்.
மரத்தோடு மட்டுமில்லாமல் அங்கிருந்த மற்ற பறவைகள் மற்றும் சிறுவிலங்குகளுடனும் சிரித்து பேசி மகிழும்.
ஒருநாள் வேடன் ஒருவன் காட்டிற்கு வந்தான். அவனுக்கு ஏழுநாட்களாக வேட்டையில் ஒன்றும் சிக்கவில்லை. அதனால் ஒருவாரமாக வேடனும் அவனுடைய குடும்பமும் பட்டினியில் கிடந்தனர்.
இன்றைக்கு எப்படியாவது ஒருமானையாவது வேட்டையாடிட வேண்டும் என்று எண்ணி, தீவிரமாக மானைத் தேடிக் கொண்டிருந்தான்.
அப்போது ஒருமான் கூட்டமே வேடனின் கண்ணில் பட்டது. வேடனும் தன்னிடமிருந்த விஷ அம்புகளில் ஒன்றை எடுத்து ஒரு மானைப் பார்த்துக் குறி வைத்து விட்டான். ஆனால் விஷ அம்போ மானைத் தாக்காமல் கிளி தங்கி இருந்த மரத்தில் குத்தியது.
அம்பில் இருந்த விசம் மரத்தினை பாதித்தது. நாளடைவில் விசத்தின் காரணமாக மரம் பட்டுப் போக ஆரம்பித்தது.
மரம் பட்டுப் போக ஆரம்பித்ததும் மரத்தில் இருந்த பறவைகள், விலங்குகள் மரத்தினை விட்டுவிட்டுச் சென்றன.
ஆனால் கிளி மட்டும் மரத்தினை விட்டுப் போகாமல் மரத்திலேயே தங்கி இருந்தது. நாட்கள் செல்ல செல்ல மரத்தின் நிலைமையைப் பார்த்து கிளியும் வருந்தி வாடத் தொடங்கியது.
கிளியின் செயலைக் கண்ட அக்காட்டின் தேவதை, வழிப்போக்கன் போல் வேடம் அணிந்து மரத்தின் அருகே வந்தது.
கிளியிடம் ‘கிளியே, உலர்ந்து போன இந்த மரத்தினை விட்டு போகாமல் நீ ஏன் இங்கேயே தங்கி இருக்கிறாய்?’ என்று கேட்டது.
அதற்கு கிளி ‘ஐயா, நான் பிறந்து வளர்ந்தது இந்த மரத்தில்தான். இம்மரமானது எனக்கு உண்ண உணவு கொடுத்தது.
அத்தோடு எனக்கு இருப்பிடமாகவும், பகைவர்களிடமிருந்து பாதுகாப்பு அரணாகவும் விளங்கியது. என்னிடம் பரிவு காட்டிய இம்மரத்தைவிட்டு ஏன் நான் போக வேண்டும்?.
நமக்கு உதவி செய்தவர்களிடம் நாம் பரிவுடன் நடப்பது தானே நியாயம்.
இந்த மரம் நல்ல நிலையில் இருந்தபோது, இதனை அண்டி வாழ்ந்த நான், இப்போது மோசமாகி விட்டதைக் கண்டு விலகிச் சென்றால், என்போல் துரோகி வேறு யார் தான் இருக்க முடியும்?’ என்று எதிர் கேள்வி கேட்டது.
கிளி கூறியதைக் கேட்ட வழிப்போக்கன் வேடமிட்ட தேவதை, ‘கிளியே, உன்னுடைய பரிவைக் கண்டு மெச்சினேன்.
பட்டமரத்தை மீண்டும் துளிர்க்கச் செய்கிறேன்.’ என்று கூறி மரத்தை துளிர்க்கச் செய்தது. தேவதையின் அருளால் மரமானது மீண்டும் பூத்துக் குலுங்கியது.
பிறர் துன்பப்படும்போது நேசக்கரம் நீட்டி அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை கருணையின் சிகரம் என்ற இக்கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.