கரைந்த வாயு – வளியின் குரல் 5

வணக்கம் மனிதர்களே!

மீண்டும் உங்களோடு பேசுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆம். ஒன்று கேட்க வேண்டும். சென்ற முறை நான் பேசியது நினைவிருக்கிறதா?

திரவ வாயு பற்றி பேசினேனே. எதற்கு இக்கேள்வியை கேட்டேன் தெரியுமா? அன்று பேசிவிட்டு செல்லும் போது, ஒரு மனிதர் மற்றொருவரிடம் இவ்வாறு கேட்டார்.

″வாயு திரவமா மாறுது சரி, அதேசமயத்துல சில வாயுக்கள் நீருலையும் இருக்குதே ரெண்டுக்கும் என்ன வித்தியசம்?″

அவரது கேள்விக்கு மற்றொருவர் பதில் சொன்னாரா? இல்லையா″ என்று எனக்கு தெரியவில்லை. காரணம் அப்பொழுது வேறிடத்திற்கு நான் செல்ல வேண்டியிருந்தது.

இன்று அந்த கேள்விக்கான விடையை கூறலாம் என்று எண்ணியிருக்கிறேன்.

ஆம், அந்த மனிதர் சொன்னபடி, சில வாயுக்கள் நீரில் கரைகின்றன.

முக்கியமாக ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் முதலியன நீரில் கரைகின்றன.

நீரில் கரைந்திருக்கும் வாயுவை ′கரைந்த வாயு′ என்று தானே சொல்ல வேண்டும். ஆங்கிலத்தில் ′dissolved gas′-என சொல்லலாம் அல்லவா?

அறிவியல் நோக்கில் பார்த்தால் திரவ வாயுவும் கரைந்த வாயுவும் ஒன்றல்ல.

அம்மோனியா வாயு பற்றி உங்களுக்கு தெரியும் தானே? இது எளிதில் திரவமாகும் தன்மை பெற்றது.

அதனால் குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தை பயன்படுத்தி திரவ அம்மோனியாவை பெற முடிகிறது.

அத்தோடு, அம்மோனியா வாயுவை நீரில் செலுத்த அது கரைகிறது. எப்படி தெரியுமா?

நீருடன் வினைபட்டு தான். அதாவது அம்மோனியா நீருடன் வினைபட்டு அம்மோனியம் ஹைட்ராக்சைடு சேர்மத்தை தருகிறது. இது நீரில் நன்கு கரையும் இயல்பு கொண்டது.

இதேபோல கார்பன்-டை-ஆக்சைடு வாயுவும் நீருடன் சேர்ந்து கார்போனிக் அமிலத்தை தருவதன் மூலம் தனது கரைதிறனை வெளிப்படுத்துகிறது.

ஆனால் எல்லா வாயுக்களும் நீருடன் வினைபடுவதன் மூலம் கரைவதில்லை. ஆக்சிஜன் நீரில் கரைந்தாலும் ஆக்சிஜன் மூலக்கூறாகவே இருக்கிறது.

இம்… இப்பொழுது சந்தேகம் தீருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

சரி, இன்னொன்றும் சொல்ல வேண்டும். நீரில் ஒரு கரைந்த வாயுவின் செறிவு சீரானதாக இருப்பதில்லை.

அது வெப்பநிலை, அழுத்தம் மற்றும் இடத்தைப் பொறுத்து குறிப்பிடத்தக்க அளவு மாறுபடுகிறது.

மேலும் ஒரு நீர்ச்சூழ்நிலை மண்டலத்தில் ஆழத்தைப் பொறுத்தும் கரைந்த வாயுவின் செறிவு கணிசமான அளவு வேறுபடுகிறது.

எடுத்துக்காட்டிற்கு சொல்ல வேண்டுமெனில், கடலின் மேற்பரப்பில் இருந்து ஆழத்தை நோக்கிச் செல்ல கரைந்த ஆக்சிஜனின் செறிவு குறையும்.

அத்தோடு, காற்றில் உள்ள ஒவ்வொரு வாயுவின் அளவும் கடலில் இருக்கும் கரைந்த வாயுவின் அளவிலிருந்து மிகவும் வேறுபட்டது.

இப்பொழுது தான் நினைவிற்கு வருகிறது,

ஒரு வாயுவின் கரைதிறனைப் பொறுத்தே நீரில் அதன் செறிவு நிர்ணயிக்கப்படுகிறது.

சரி, கரைதிறன் என்றால் என்ன? நினைவூட்டவா?

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், பொதுவாக வெப்பநிலை பூஜ்ஜியமாகவும், வளிமண்டல அழுத்தம் ஒன்றாகவும் இருக்கும் போது, ஒரு வாயு நீரில் கரைந்திருக்கும் பெரும அளவு தான் கரைதிறன் எனப்படுகிறது.

அதாவது நீரில் கரைதிறன் அதிகம் கொண்ட வாயுக்கள் அதிக செறிவில் இருக்கும். கரைதிறன் குறைவாக இருக்கும் வாயுக்களின் செறிவுகளும் குறைவாகவே இருக்கும்.

வாயுவின் கரைதிறன் அழுத்தம், வெப்பநிலை மற்றும் நீரில் கரைந்திருக்கும் உப்புக்களின் செறிவு முதலியனவற்றையும் சார்ந்தே இருக்கிறது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், அழுத்தம் அதிகரிக்கும் போதும் ஒரு வாயுவின் கரைதிறனும் அதிகரிக்கும்.

ஆனால் வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மை குறைந்தால் வாயுவின் கரைதிறன் அதிகரிக்கும்.

ஒன்றைக் கவனித்தீர்களா?

இயற்கையாகவே, சில வாயுக்கள் நீரில் கரைகின்றன. அதனால் என்ன பயன்?

காரணம் இல்லாமல் இவ்வுலகில் எதுவும் நடப்பதில்லை தானே?

கரைந்த வாயுவிற்கும் காரணம் உண்டு. அது உங்களுக்கும் தெரிந்தது தான்.

ஆமாம், நீர் வாழ் விலங்குகளின் சுவாசத்திற்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது அல்லவா?

தாவரக் குற்றுயிர்கள் (phytoplankton) உள்ளிட்ட நீர் வாழ்த்தாவரங்கள் ஒளிச்சேர்க்கை வினையை நிகழ்த்துவதற்கும் கார்பன்-டை- ஆக்சைடு தேவைப்படுகிறது,

கடலில் கரைந்த நைட்ரஜன் வாயு பாக்டீரியாவால் நைட்ரேட்டாகவும் நைட்ரைடாகவும் நிலைநிறுத்தப்படுகிறது. இது ஊட்டச்சத்தாகப் பயன்படுகிறது.

சில நேரங்களில் அதிக செறிவில் இருக்கும் கரைந்த வாயுக்களால் பாதிப்புகளும் உருவாக்குகின்றன.

ஆம், நீரில் அதிக அளவு கார்பன்-டை-ஆக்சைடு கரைந்திருக்குமானால், நீரின் PH-மதிப்பு குறையும்.

அதாவது நீர் அதிக அமிலத்தன்மை பெரும். இந்நிகழ்வு கடலில் நிகழ்ந்தால் அதற்கு கடல் அமிலமயமாக்கல் என்று பெயர்.

பொதுவாகவே அமிலத் தன்மை கொண்ட நீர் அரிக்கும் பண்பு கொண்டது என்பது உங்களுக்கு நன்கு தெரிந்ததே.

கடல் அமிலமயமாக்கல் பல கடல் உயிரினங்களில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், கடல் உணவுச் சங்கிலிகளில் மாற்றும் நிகழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல, ஹைட்ரஜன் சல்பைடு என்ற வாயு நீரில் அதிக செறிவில் இருந்தாலும் சூழ்நிலைக்கும், அதிலிருக்கும் உயிரினங்களுக்கும் அது தீய விளைவுகளை தரும்.

ஆக மொத்தத்தில் ஒரு செய்தியை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

நீரில் சரியான செறிவில் கரைந்த வாயுக்கள் இருப்பது அவசியம். இதனை பேணிக் காப்பது முக்கியம்.

(குரல் ஒலிக்கும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.