கறிவேப்பிலை சட்னி அசத்தலான சுவையுள்ள ஆரோக்கியமான சட்னி ஆகும். கறிவேப்பிலை சத்து மிகுந்தது. கறிவேப்பிலையை பொதுவாக தாளிதம் செய்யவே பயன்படுத்துகிறோம்.
நம்மில் பெரும்பாலானோர் உணவில் உள்ள கறிவேப்பிலையை சாப்பிடாமல் ஒதுக்கி விடுகிறோம். ஆதலால் கறிவேப்பிலையில் உள்ள முழுச் சத்துக்களையும் பெற கறிவேப்பிலையை சட்னி செய்து சாப்பிடலாம்.
இனி சுவையான கறிவேப்பிலை சட்னி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை – ஒரு கைபிடி (அழுந்தப் பிடித்து அளந்தது)
வேர்க்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (பெரியது)
இஞ்சி – சுண்டு விரல் அளவு
பச்சை மிளகாய் – 2 எண்ணம்
சின்ன வெங்காயம் – ஐந்து எண்ணம்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
நல்ல எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 1 எண்ணம்
கறிவேப்பிலை சட்னி செய்முறை
கறிவேப்பிலையை உருவி சுத்தம் செய்து அலசி எடுத்துக் கொள்ளவும்.
கொத்தமல்லி இலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நேராக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி மற்றும் வெள்ளைப்பூண்டினை தோல் நீக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை காம்பு நீக்கி அலசிக் கொள்ளவும்.
வாணலியில் நல்ல எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அதில் வேர்க்கடலை சேர்க்கவும்.
வேர்க்கடலை லேசாக பொரிந்ததும் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்க்கவும்.
பருப்புக்கள் சிவந்ததும் அதில் நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து ஒருநிமிடம் வதக்கவும்.
பின்னர் அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து 30 நொடிகள் வதக்கியதும், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடிப் பதம் வந்தவுடன் அதில் புளி சேர்த்து ஒரு சேரக் கிளறவும்.
அதனுடன் சுத்தம் செய்த கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும்.
கறிவேப்பிலை வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
அரை நிமிடம் கழித்து கொத்தமல்லி இலையைச் சேர்த்து வதக்கவும்.
மல்லி இலை வதங்கியதும் இறக்கி கலவையை ஆற விடவும்.
பின்னர் மிக்ஸியில் தேவையான உப்பு, தண்ணீர் மற்றும் வதக்கிய கலவை சேர்த்து விழுதாக்கிக் கொள்ளவும்.
அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம் மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து தாளிதம் செய்து சட்னியில் சேர்க்கவும்.
சுவையான கறிவேப்பிலை சட்னி தயார்.
குறிப்பு
சட்னிக்கு கறிவேப்பிலையைத் தேர்வு செய்யும் போது தளிர் இலைகளைத் தேர்வு செய்தால் சட்னி சுவையாக இருக்கும்.
மறுமொழி இடவும்