கலாம் எனும் காவிய நாயகன் – பேரினப் பாவலன்

கலாம் நம் நாட்டின் காவிய நாயகன்.

இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள தெருக்கோடி மனிதரும் முயன்றால் தேசத்தின் தலைமகனாக ஆகலாம் என்ற வரலாற்று வாழ்க்கை சித்திரம் தான் ஐயா அப்துல் கலாம் அவர்கள்.

ஆம்! தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான ராமேஸ்வரத்தில் கிபி 1931 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 15ஆம் நாள் ‘ஜைனுலாப்தீன்’ என்பார்க்கும் ‘ஆஷியம்மா’ என்பாருக்கும் மகனாக அவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் பிறந்தார்.

வறுமை தாலாட்டிய இளமைக் காலத்தில் தன் வாழ்க்கைப் படகை நடத்துவதற்காக இராமேஸ்வரத்துத் தெருக்களிலே தன் அண்ணனுடன் இணைந்து தினசரி நாளிதழ்களை போடும் பணியை ஆற்றினார்.

படிப்பிலே படுசுட்டி என்று சொல்ல முடியாது. சராசரி இரகம்தான். ஆரம்பக் கல்வியையும் உயர் கல்வியையும் உள்ளூரில் முடித்த பின்னர் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் திருச்சியில் உள்ள கல்லூரியில் பெற்றார்.

‘விமானியாக பறக்க வேண்டும்’ என்ற தணியாத தாகத்தின் பொருட்டு சென்னையில் ‘ஏரோநாட்டிக்கல்’ எஞ்சினீரிங் எடுத்து படித்தார்.

படித்து முடித்த பின்னர் இந்திய போர்த் தளவாட ஆராய்ச்சி அபிவிருத்தி மையத்தில் (DRDO-DEFENCE RESEARCH AND DEVELOPMENT ORGANISATION) பணியில் அமர்ந்தார்.

அங்கு அவர் சிறிய அளவிலான இராணுவ பயன்பாட்டிற்கான ‘இலங்கு ஊர்தியை’ (Helicopter) வடிவமைத்தார். பின்னர் சிறிது காலம் இந்திய அணுசக்தி துறையில் பணியாற்றினார்.

அதன் பின்னர் கிபி 1969ல் இந்தியாவின் முதல் உள்ளாட்டு செயற்கைக்கோள் பாய்ச்சுதல் வாகனம் (S.L.V-satellite launch vehicle) திட்டத்தின் இயக்குனராக பணியமர்த்தப்பட்டார். இங்கு பணிக்குச் சேர்ந்த பின்னர்தான் ‘தன்னையே கண்டு பிடித்ததாக’ பின்னாட்களில் அப்துல் கலாம் பெருமை பொங்க கூறினார்.

கி.பி1980ல் இந்தியாவின் ‘ரோகிணி‘ செயற்கைக்கோள் அப்துல் கலாமின் தலைமையில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஏவுகணை தொழில்நுட்பத்தில் நன்கு வளர்ச்சி அடைந்த அமெரிக்கா போன்ற நாடுகளே செயற்கைக்கோள் பாய்ச்சுதல் வாகன உற்பத்தியில் பத்தாண்டுகளுக்கும் மேலான கால அளவை எடுத்துக் கொள்ளும் பொழுது வெறும் ஏழே ஆண்டுகளில் தனது அயராத உழைப்பினால் அதைச் சாதித்துக் காட்டியவர் அப்துல் கலாம் அவர்கள்.

அன்றைய இந்திய பொருளாதார சூழல்களை கவனத்தில் கொண்டால் இதன் கடினத் தன்மை நன்கு புரியும். இச்சம்பவத்திற்குப் பிறகு ஏவுகணை தொழில்நுட்பத்தில் கோலோச்சிய உலக நாடுகளின் பட்டியலில் 6-வது நாடாக இந்தியா இணைந்தது.

இதுமட்டுமின்றி, ‘திரிசூல்’,’அக்னி’, ‘பிருத்வி’, ‘நாக்’, ‘ஆகாஷ்’ மற்றும் ‘பிரமோஸ்’ ஏவுகணைகள் அனைத்தும் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை ஆகும்.

இன்றளவிலும் உலகில் முப்படைகளிலும் பயன்படுத்தக்கூடிய ஒரே ஏவுகணை ‘பிரமோஸ்’ என்பதில் இந்தியர்கள் நிச்சயம் பெருமை அடையலாம்.

கிபி 1998 இல் தனது நண்பர் மருத்துவர் ராஜ் அவர்களுடன் இணைந்து இதய நோயாளிகளுக்கான “coronary stent” ஐ கண்டுபிடித்ததும் கலாம் தான். அதற்கு “ராஜ்-கலாம் ஸ்டண்ட்” என்றே இன்றளவும் பெயர்.

“உனது குறிக்கோளிலிருந்து ஒருபோதும் விலகாதே” என்று தனது சக ஊழியரிடம் அடிக்கடிச் சொல்வார் கலாம்.

கலாம் எதிலும் எப்பொழுதும் நேர்மறையான சிந்தனைக்கு சொந்தக்காரர்; கவிதையும் இசையும் கைவரப் பெற்றவர்; முகமலர்ச்சியோடும் நட்புறவோடும் அனைவரிடமும் இனிமையாகப் பழகக் கூடியவர்; தாய்மொழி வழிக் கல்வியில் பயின்றவர்.

ஐ.நா மன்றத்திலே “யாதும் ஊரே! யாவரும் கேளீர்!!” என்று பேசி தமிழின் பெருமையைப் பறை சாற்றியவர். திருக்குறளும் திருக்குர்ஆனும் இரு கண்ணெனக் கொண்டவர்.

இத்தகைய விழுமிய பண்பு நலன்களே அவரை இந்த தேசத்தின் குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தது எனின் மறுப்பவர் உளரோ?

சுதந்திர இந்தியாவின் ஏகோபித்த மக்கள் ஆதரவோடு ஜூலை 25. 2002 ல் தேசத் தலைமகனாக அமர்ந்தார். அன்றுதான் எளிய மக்களுக்கான ராஜபாட்டை திறக்கப்பட்டது.

இந்தியாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் அவர்க்கு டாக்டர் பட்டம் வழங்கி தமது பெருமையை உயர்த்திக் கொண்டன.

ஐக்கிய நாடுகள் அவை கலாமின் 79 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு “உலக மாணவர் தினமாக” அன்றைய நாளை அறிவித்தது.

இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் கலாமிற்கு பட்டங்களை வழங்கின.

இந்திய அரசும் 1981ல் “பத்ம பூஷண்” விருதும், 1990ல் “பத்ம விபூஷண்” விருதும், 1997ல் “பாரத ரத்னா” விருதும் வழங்கி கௌரவித்தது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், மைசூர் பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராகவும் பணிபுரிந்தவர் கலாம்.

தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மாணவர்களிடம் செலவிடுவதே குறிக்கோளாகக் கொண்டார். அந்த இலட்சிய பயணத்திலேதான் தன் இன்னுயிர் துறந்தார் (ஜூலை27,2015 ஷில்லாங், மேகாலயா).

கலாம் மீது ஏவப்படும் வஞ்சக ஏவுகணைகள் உள்நோக்கம் உடையவை. அவர் எப்பொழுதும் அரசியல்வாதியாக இருந்ததே இல்லை.

“அவர் இதற்குக் கருத்துச் சொல்லவில்லை, அவர் அதற்குக் கருத்துச் சொன்னதில்லை” என்பதெல்லாம் முட்டாள்களின் முடக்கு வாதம் தான்.

அணுசக்தித் துறையில் முன்னோடிகளான ஹோமி பாபா, விக்ரம் சாரா பாய் போன்றோரின் மர்ம மரணத்தை அவர் அறிந்தே இருந்தார். அதன் பொருட்டே அவர் திருமணமும் செய்து கொள்ளவில்லை என்கிற எழுத்தாளர் ஜெயமோகனின் வாதங்களும் இங்குக் கூர்ந்து கவனிக்கத் தக்கது.

ஒருவேளை வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு பணிபுரிந்து அவர் நோபல் பரிசை கூட பெற்றிருக்கலாம். அப்போது அவரை நாம் தலையில் வைத்துக் கொண்டாடி இருப்போம்.

பெருநிதியும் ஒரு அமைப்பும் எப்பொழுதும் அவருடைய ஆய்வுக்குத் தேவைப்படக்கூடிய சூழலில் அரசுக்கு இணக்கமாக இருந்தாக வேண்டிய கட்டாயம் அவருக்கு மட்டுமல்ல ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கே கூட உண்டு என்கிறார் ஜெயமோகன்.

அப்துல்கலாம் தனது வாழ்நாளை தூய காந்தியவாதியாக தன்னை வரித்துக் கொண்டார். காந்தியின் தற்சார்பு பொருளாதாரம் கலாமை கவர்ந்திருந்தது. ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்பதுதான் அவர் கண்ட கடைசிக் கனவு.

‘இன்றைய மாணவர்கள்தாம் நாளைய நம்பிக்கைகள்’ என்று நன்கு உணர்ந்த கலாம் அவர்களிடையே 2020ஆம் ஆண்டிற்கான இந்திய கனவை விதைத்துச் சென்றார்.

“எது நல்ல நாள்! எது கெட்ட நாள்?” என்று கேட்ட மாணவியின் கேள்விக்கு “பூமி மீது சூரிய ஒளிபட்டால் பகல்; படாவிட்டால் இரவு; இங்கு, நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை. நீ முயன்றால் நட்சத்திரங்களையும் கைகளால் பறிக்கலாம்” என்று நம் செவித் துளைக்கச் செவியறிவு பகன்றவர் கலாம்.

வானத்தை அண்ணாந்து பார்த்து அந்த விமானத்தைப் போல ‘நாமும் பறக்க வேண்டும்’ என்ற கனவுகளுடன் கடைவீதிக்கு வந்தவனை விண்வெளி வரை தூக்கிச் சென்றது காலம்.

ஞாலம் கருதினுங் கைகூடும் காலங்
கருதி இடத்தாற் செயின். (குறள்-484)
என்ற வள்ளுவனின் வாக்குக்கு காலம் கடந்தும் கனகச்சிதமாய் பொருந்திப் போகிறார் கலாம்.

காவிய நாயகன் கலாம் பிரிவாற்றாமைத் தாங்காது நாடே அழுது புலம்பியது எதைக் காட்டுகிறதென்றால், புராண கால இராமன் தொட்டு; இன்றைக் கால கலாம் வரை இலட்சிய மாந்தர்களுக்கு மண்ணில் மாறா மதிப்பிருக்கிறது என்பதையே.

அந்த மாமனிதர் விட்டுச் சென்ற கனவுகளை நம் கண்களின் வழியே நினைவாக்குவோம். அதுதான் அந்த மனிதருக்குச் செய்யும் நன்றிக்கடன்.

கலாமின் மந்திர வரிகள்

“நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமைகள் இல்லாமல் இருக்கலாம் ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன”

”கஷ்டம் வரும்போது கண்களை மூடாதே; அது உன்னை கொன்றுவிடும். கண்களைத் திறந்து பார் அதை வென்று விடலாம்”.

பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி:  8667043574

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.