கல் கட்டிடமும் கல் மனசும்!

ஒவ்வொரு நாளும் இந்த இடத்தைக் கடக்கும் போதும், இந்த கல் கட்டிடத்தைப் பார்க்கும் போதும் ஒருவிதமான மனநிலைக்குத் தள்ளப்படுகிறேன்.

என் வாழ்நாளில் பெரும்பகுதியை இந்த வழியிலேயே கடக்க வேண்டிய தருணமாகவே எனக்கு அமைந்து விட்டது. இங்கே உயிர் பிழைத்தவர்கள் ஏராளம். இக்கட்டடத்துக்குள் வந்து போயி இருந்ததை மறக்க முடியாது.

இங்கே வந்து போகாத உறவுகளே இருக்க முடியாது. எந்தவகையிலும் ஒருவர் வந்து இருந்து போயிருப்பார்.

இந்தக் கருங்கல் கட்டடத்தில் உள்ள ஒவ்வொரு கல்லும் எத்தனை உயிரை சுவைத்து உரமேறியிருக்குமோ?

என்னால் கற்பனை செய்து பாக்க முடியல.

நோய்கள், அடிதடி சண்டை, வெட்டுக்குத்து, விபத்துக்கள், பாம்புக்கடி, தீவைத்துக் கொள்ளுதல், மருந்தக் குடித்தவர்கள், மாண்டுப் போகக் கயிறுப் போட்டுப் பாதியிலே வந்தவர்கள் எல்லாம் உயிருக்குப் போராடிக் கொண்டுதான் வந்தார்கள்.

எத்தனை எத்தனை மனிதர்கள் அத்தனை அத்தனை நோய்கள்.

எங்கிருந்து வந்தது?

எப்படி பெயர் வைத்தார்கள்?

பிரம்மாவின் படைப்பில் லட்சோப லட்சம்பேர் இதிலே கருவறை கிழித்து வெளியே வந்தவர்கள். இப்படியாக நோயில் இருந்து விடுபட்டு, ‘பிட்டுக்கு மண் சுமந்த மண்ணில்’ உலவிக் கொண்டு இருக்கிறார்கள்.

கல் மாளிகையில் இன்னும் எத்தனை உயிர்கள் ஒட்டிக்கொண்டு இருக்கிறதோ?

அத்தனையும் காலப்பதிவேட்டில் இருந்தாலும் அவைகள் பதிவு செய்ய முடியாத மர்மங்களையும், வலிகளையும் இங்கு அப்பிக்கிடக்கும் சோகத்தையும் என்னால் விளக்க இயலவில்லை.

இதன் இருப்பை நீட்டினால் நீண்டு கொண்டே போகும்.

பலரைப் பழுதுபார்த்த தடமாகும். சிலரை இனிமேல் ஒன்னும் செய்ய முடியாது என்ற நிலையில் நித்திரைதான் தீர்வு எனத் தன்னுள் சுவீகரித்துக் கொண்டது.

ஆனா, பெரிய ஆஸ்பத்திரி ஏழையின் நோய் நீக்கிய உயிர்களின் புகலிடம்; பணக்காரர்களின் ஏளனம்.

இது மருந்தும் மாத்திரையும், ரத்தமும் சதையும், மருந்துகளின் நெடியும், மூத்திரக் கவுச்சியும், புரையோடிய புண்களின் சலங்களும், இருமிப் துப்பியச் சளியும், எச்சில்களும், வெத்திலப்பாக்கு, போயிலையும் இவைகளைப் பார்த்துப் பார்த்து மனம் மரத்துப்போன கல் கோட்டை.

எவ்வளவு உயிர்களை உள்வாங்கியிருக்கும், அதன் கம்பீரம் என்பதை இப்படியான மனநிலையோடு கடப்பது அன்றாட வழக்கம்.

ஒருநாள் கண்ணன் நாண்டுக்கிட்ட போதும், ராணி தீயை வைச்சுக்கட்ட போதும், ராஜேந்திரன் ஆக்சிடெண்ட் ஆனபோதும் இங்குதான் வந்தேன். ஏன் பாம்பு கடிச்சு நானும் பத்து இருபது நாள் வார்டு 113ல் இருந்து வந்தேன்.

ஆஸ்பத்திரி எத்தனை முறை வந்து போயிருக்கிறேன். எத்தனை முறையின்னு என்னால் கணக்குச் சொல்லமுடியாது.

என்ன! டாக்டர் கடவுளாத் தெரிந்த காலம் மாறிப்போச்சு.

திரும்பின பக்கம் எல்லாம் ஆஸ்பத்திரி.

மருத்துவரப் பார்த்தா இப்ப மரியாதை இல்ல. எல்லாம் காசு கொடுக்கிறோம். கூலிக்கு மாரடிக்கிற கூட்டத்துள்ள சேர்த்துட்டாக, மருத்துவரை.

எப்ப, ஆஸ்பத்திரி பெருகுச்சோ அன்னைக்கே வைத்தியம் மரியாதைக்குரியதா இல்ல.

இது ஒரு பக்கம் நடக்குது.

ஆனா, ஏழைகள் எங்க போகமுடியும்?

அவர்களுக்கு பெரிய ஆஸ்பத்திரிதான் கோயில்.

அங்க உண்மையா வேல பாக்கிற டாக்டர், நர்சு, சிப்பந்திப் பணியாளர்கள் கடவுளர்களின் தூதுவர்கள். அவுங்க சேவையை யார் மறுக்க முடியும்?

பல வேதனைகள், சில மகிழ்ச்சிகள், சின்ன சந்தோசம், நிறைய இழப்புகள். ஆஸ்பத்திரியின் உள்ளே வந்து போகும்போது.

ஆரம்பத்தில் கொஞ்சம் முகம் சுழிப்பு. அதுவே பலதடவை வந்து போனால் ஆஸ்பத்திரி மருந்து நொடிப்பொழுதில் பழகிப்போகும்.

ஐசியூவில் கடந்த அஞ்சு நாளாப் போட்டது போட்ட வாக்கில கிடக்கா சுகந்தி.

டாக்டர்க, நர்ஸ்ங்க, படிக்கிற டாக்டர்க வந்து வந்து பார்க்கிறார்கள். கேஸ் சீட் பார்த்துட்டுப் போவாங்க. ஆனா, சுகந்தி பெட்டுல அப்படியே.

வாயில, மூக்குல டியூப் போகுது. தல மாட்டுல ரெண்டு பெட்டியிருக்கு. அப்பப்ப ‘பீப்…. பீப்…’ சத்தம் கேட்கும். சத்தம் கூடுதலா வந்தா நர்ஸ் வந்து பாப்பாங்க. பல்ஸ் டவுன் ஆகுதான்னு பாப்பாங்க. இதயத் துடிப்பையும் அதன் ஏத்த இறக்கத்தையும் பார்க்கிறப் பெட்டிய ஒருமுறை கவனமா பார்க்கிறாக.

கம்பி ஸ்டான்ல் ரெண்டு பாட்டில் தொங்குது. ஒன்னு பெரிசு, இன்னொன்று சிறிசு. ரெண்டுலயும் கண்ணீர் விடுறச் சொட்டுப் போல குளுக்கோஸ் ஏறுது.

சுகந்தி அம்மா ஜெயக்கொடி வந்து போறவங்கள முகத்த முகத்தப் பாக்குது.

நல்லா, பெரிய ஹால் வட்டவடிவுல ரவுண்டா கட்டில்ல பெட்டப் போட்டு நடுமையம்மா டாக்டர்க, நர்சுக, சிறுசு, பெருசு, மருந்து, மாத்திரை, ஊசி மையமா இருந்து எல்லாரையும் பார்க்கிறாக.

அதில முப்பத்திரண்டு பெட் போக, சிலதுக காமாடு தலமாட, பாயிலப் படுத்துக் கிடக்கு. கேஸ் தன்மையும் முன்னப்பின்ன வச்சு பெட்ல இடம் கிடைக்கும் போல. எல்லார் தல மாட்டுலயும் பரீட்சை அட்டையிலக் கேஸ் சீட்டு இருக்கு.

டாக்டர் எடுத்துப் பார்க்கிறாக.

கேஸ் என்ன? நோயின் தன்மை, கொடுக்கப்பட்ட மாத்திரை, மருந்து, ஊசி, கொடுக்கப்பட வேண்டிய குறிப்புகள் அடங்கிய அட்டையை நோயாளியின் தினசரி தகவல் அறிக்கை எழுதி வைச்சுறாங்க.

பெரிய டாக்டர் வந்தா பெரிய நர்சு, சின்ன நர்சு, பத்து இருபது பிள்ளக்குட்டிக நின்னுக் கேக்குதுக.

என்ன விளங்குதோ தெரியல. ஒவ்வொரு பெட் கிட்டயும் அஞ்சு நிமிசம், பத்து நிமிசம் நின்னு பார்க்கிறாக. சிலதுகள்ள அரை மணிநேரம் இன்னு கொஞ்சம் கூடுதலாகப் பேசுறாக.

அப்படித்தான் சுகந்தியின் பெட்டுக்கிட்டயும், ரொம்ப நேரம் நின்னு, கை, கால, கண், நாடிய பார்க்கிறாக அவுகளுக்குள்ளப் பேசிக்கிறாக.

“அட! என்ன கருமமோ, சொன்னவுலாத் தெரியும். ஒன்னும் சொல்ல மாட்றாகளேன்னு” ஜெயக்கொடி முத்து முத்தாக உதிர்த்தாள்.

“கடவுள் விட்ட வழி, வாங்கிவந்த வரம். சுகந்தி என்ன வரம்டி வாங்கியாந்த. இப்படிப் போட்டது போட்ட வாக்கில கிடக்கே கடவுளே!

யாரைக் குறை சொல்ல?

என்ன செய்ய?

யார் கையிலயும் எதுமில்ல.

தலையெழுத்து என்னவோ அதுப்படித்தான் நடக்கும்.

அடியே, அம்மா சுகந்தி பாதாளத்துல விழுந்துட்டுப் பட்டு நூலப் புடிச்சு ஏறி வருவேன்னா எப்பிடிறீ முடியும். மகளே! சீக்கிரம் கரைசேரப் பாத்தியா?

நம்ம யார், அப்பன் ஆத்தா என்ன செய்றாகன்னு கொஞ்சமாச்சும் யோசிச்சியா? என்ன படிச்சு என்ன செய்ய?

போன வருஷமே பெண்ணு கேட்டாகளே. இந்த மனுசன் எம் மகப் படிச்சு கலெக்டராகப் போறான்னு சொல்லிட்டாரே! அவுக மொகத்துல எப்படி முழிக்க. என்ன சொல்ல எதுவுமே தெரியல. எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லுவா

‘மேவா உதடு இல்லாதவன் சீங்குழல் ஊத ஆசப்பட்டா’ நல்லாவா இருக்கு, அடச்சீ மாதிரிச் சோ…” சொல்லும் போதே ஜெயக்கொடியின் கண்களில் கண்ணீர் வழிந்து ஓடுகிறது.

“நாம் பெத்த மகளே, உன்ன எப்படியல்லாம் வளத்துக் கட்டிக் கொடுக்கனும்னு கனவு கண்டிருந்தேன் தெரியுமா?

ஆட்டுக்குட்டி மாதிரி காலுக்குள்ளயும், கைக்குள்ளயும் திரிவியே, எம்மா உனக்கு எப்படி இப்படிப் புத்திப் போச்சு.

ஜெயக்கொடியப் பார்த்தார், “என்ன தாண்டி ஆச்சு?”

“எதுவுமே தெரியாதுங்க! படுத்தவ எந்திரிக்கல, அதுதான் உங்களுக்குப் போன் போட்டேன்” இதை எப்படியும் ஓராயிரம் தடவைச் சொல்லிருப்பாள். யாரும் நம்புவதற்கில்ல.

“ஏன்டி, பதினெட்டு வருசம் ஈ கடிக்காம, எறும்பு கடிக்காம வளத்தது இதுக்கு தானா?

உன்ன எமனுக்கு இரையாக்க பொறோமே.

யாரு செஞ்ச பாவமோ? எங்க குடும்பத்தில வந்து விழுந்துருச்சே!

ஊர்ப் பிள்ளைக்கு எல்லாம் கோளாறுப் புத்திச் சொல்லுவ உம்புத்தி இப்படி போகும்ன்னு கனவுலக்கூட நினைக்கலே”

“என்னமோ ஒப்பு வைக்கறிவா ஒப்பு. போடிப் போ கூறு கெட்டவளே! நீ தின்னத்தான் லாயிக்கு. வயசுப்புள்ள வீட்டுல இருக்குன்னு கவனம் வேண்டாம். புள்ள மேலக் கருத்தா இருக்கணும்.

ஆம்பளைக்கு ஆயிரம் ஜோலித் தொந்தரவு. நாலு பக்கம் தெக்க வடக்க போயி வருவாக.

வயசுப் பிள்ளைக என்ன செய்யுதுன்னு நீதாண்டி பாக்கணும்.

நாங்களா வந்து உத்துக்கிட்டுப் பாக்க.”

இருவரின் சத்தம் கடவுளுக்கு எட்டியதோ இல்லையோ, அறையில் மருத்துவரின் காதுகளுக்கு எட்டியது.

அவர் நர்ஸ்ட்ட “அவுக ரெண்டு பேத்தையும் வெளியப் போயிக் கேட்டுக்கு அந்தப் பக்கம் நிக்கச் சொல்லு. தேவையின்னா, நாம கூப்பிட்டா உள்ளே வரட்டும்”

வெளியே வந்த நர்சு “இந்தாம்மா! சத்தம் போட்டுப் பேசிக்கிட்டுச் சண்டை போட்டுகிட்டுக்கு இருக்கீங்க. வெளிய போங்க. சீப் டாக்டர் வர்ற நேரமாச்சு.”

இப்படித்தான் கால மால ரெண்டு தரம் பாக்கிறாக. ஊசியப் போடுறாக. எக்ஸ்ரே எடுக்க, ஸ்கேன் எடுக்க, இப்பக் கடைசியா எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்திருக்கு. இரத்தம் மாறி மாறி சோதுச்சுப்பார்க்க பார்க்கிறவங்களுக்கு ஒன்னும் புலப்படல?

இரத்தம் எடுத்த செகண்டுல உறைஞ்சுப் போகுது. டாக்டர் ஜெயக்கொடிகிட்டக் கேட்க, “யாருக்குத் தெரியும் டாக்டர். போயிப்பார்த்தேன். ஏய் எந்திரி காலேசுக்குப் போக வேணாமா?ன்னு சத்தம் கொடுத்தேன். பிள்ள எந்திரிக்கலேயேன்னு எழுப்புனேன்.

தலை நிக்கல, வெள்ள முழி வந்திருச்சு. எனக்குக் கையும் ஓடல, காலும் ஓடல. அவுக அப்பாவுக்குப் போன் போட்டு வரச்சொல்லி, இங்க கொண்டாந்து சேத்துட்டம். எதுவுமே தெரியலயே கடவுளே!”

“எம்மா அழுகாதே, கேட்டதுக்கு மட்டும் பதில். தேவையில்லாததப் பேசக் கூடாது”

“சரிங்க டாக்டர்”

“வீட்ல, பாத்ரூம்ல, கட்டுல, எங்கயும் எதுவும் மாத்திரைப் பேப்பர், மருந்து டப்பா எதுவும் பாத்தீங்களா? யார் வீடு கூட்டுனது?’

“யாருமே கூட்டலயே! போட்டது போட்ட வாக்கில கிடக்கே”

டாக்டர் போயிட்டாக.

இவ பெட்டுக்கு நாலு அஞ்சு பெட் தள்ளி, இவ வயசுதான் இருக்கும். பூச்சி மருந்தக் குடிச்சிட்டானு கொண்டாந்து போட்டாங்க.

இப்ப அவ பரவாயில்ல. முழிச்சுப் பாக்கிறா. கண் அசைவு, கை அசைவு எல்லாம் தெரியுது.

அந்தப் பெண்ணின் அம்மா வந்து,

“என்னம்மா எதுவும் வீட்ல பிரச்சினையா?

வேற எதுவுமா? அப்பிடியிப்பிடியா?” என்றாள்.

“அய்யோ, கடவுளே! எதுவுமே இல்ல”

“பொய் சொல்லாத. எம் பிள்ளை எவனோ ஒருத்தன காதலிச்சா. எங்க வீட்டுக்காரர் காதுக்குச் சேதி வரவும், அந்த மனுசுன் கோவம் பொறுக்காம இரண்டு அடி அடிச்சுப் போட்டுட்டாங்க.

நான்தான் இந்த மனுசனுக்கும் இவ கூடப்பிறந்தவங்களுக்கும் உலகமே அப்படித்தான் போயிட்டு இருக்கு. காலாகாலத்தில ஒருத்தன் தலையிலக் கட்டிட்டா சரியாகும்ன்னா நம்ம சொல்லுறதக் கேட்டாதானே.

புள்ள நடப்புத் தாயிக்குத் தெரியாதா?

மாடு எப்பயும் வர நேரம் கடந்து சுத்திக்கிட்டு வந்தா, மாடு கட்டுத்துறை விட்டு களவானாப் போகுதுன்னு தெரிய வேணாமா? நமக்கு

அடியே மகளே நடப்புப் போக்குச் சரியில்ல. என்னைக்கி அவங்கிட்ட செமத்தியா வாங்கப் போறியோன்னு சொன்னேன். எல்லாம் நடந்துருச்சு.

பூனை கண்ணை மூடிட்டா, ‘அய்யோ உலகமே இருட்டாச்சேன்னு நினைக்குமாம்.’

இந்தக் காலத்துப் பொட்டைப்புள்ளகளுக்கு நம்ம என்னத்த சொன்னாலும் புரிய மாட்டேங்குது.

பிடிவாதக்குணம் சாஸ்தி. தலையெழுத்துப் போல நடக்கட்டும். செத்தாக் கூடவேயா சாகப் போறோம்.

ஏன் நீ சும்மா அழுதுட்டே இருக்கிறே. உம் புருஷன் அந்த தம்பிய பாக்கப் பார்க்க எனக்குப் பாவமா இருக்கு.”

பதிலுக்கு ஜெயக்கொடி, “எங்க வீட்டுக்காரர் அப்படி கிடையாது. அவர் மகமகன்னு உசுறாயிருப்பார். எம்மக படிக்கணும், சொந்தக்கால்ல நிக்கணும். அதுதான் அவர் ஆசை. காதல் கீதல் இத எல்லாம் பெரிசா எடுத்துக்க மாட்டாரு.

அவுக தம்பி, என் கொழுந்தன். இப்படித்தான் காதல்ன்னு வந்து நின்னாப்புள்ள. அப்பிடியான்னு கேட்டு, பெண்ணு வீட்ல பேசி திருமணம் முடிச்சு வைச்சார். அவக இப்ப திருப்பூர்ல இருக்காக. காதல்ல அவருக்கு வெறுப்பில்ல”

“ஆமா, ஒரு ஆம்பளையும், பொம்பளையும் நேத்து வந்துட்டுப் போனாகலே? இங்ஙன நிண்டு அழுதுகிட்டே இருந்தாகளே அவுகளா?”

“ஆமா, அவுகதான்”

“பின்ன என்னத்த வலிச்சுப் போயியாக் குடிச்சா? சீமாத்த எடுத்து உச்சம் தலையில இருந்து உள்ளம்கால் வரை நாலு போடுப் போடாம?”

“அதுதான் அக்கா நாங்க செய்யாமப் போயிட்டம். நல்லா படிப்பான்னு ரொம்ப நம்புனோம். நம்புனதுக்குக் கிடைச்ச பரிசுதான் இது. என்னான்னு தெரியாம அந்த மனுஷன் அஞ்சு நாளாப் பித்துப் பிடிச்சுப் போயிருக்காக”

பேசிக்கொண்டிருக்கும்போதே ரெண்டு ஆம்பளைக, சுகந்தியப் பாக்க வந்துட்டாக.

“வாங்க அண்ணே, அண்ணே உங்க தம்பிக்குப் போனப் போடுங்க”

பின்னாடியே சுகந்தி அப்பா வந்துட்டாரு. கையப்பிடிச்சுகிட்டு அழுதார்.

சொந்தமா கார் வச்சுருக்கிற, ஓனர்க ரெண்டு பேரும். பத்துபேர் வேல பாக்கிறாக.

“அண்ணே, நீங்க வந்ததே போதுமுண்ணே” வந்தவர்கள் பார்த்தார்கள், கேட்டார்கள்.

அதே பதில்.

ஒருவர் “என்ன எந்த மூமண்டுமில்ல. போட்டது போட்ட வாக்கில கிடக்கு. எந்த அசைவுமில்ல”

“யாரோ வச்ச நெருப்பு. என் வீடு வெந்து போச்சு அண்ணே”ன்னு வந்தவர்களிடம் சொல்லி அழுதார்.

பெண்பிள்ளையப் பெத்த அப்பாக்களின் மனநிலை இப்படித்தான்.

“வாங்க, நம்ம கையில எதுவுமேயில்ல, விதி விட்ட வழியின்னு அமைதியா இருங்க. ஆனா, நம் நிலைதான் அத நெனைச்சே சாகவேண்டியதாப் போச்சு” வந்தவரில் ஒருவர் சொன்னார்.

ஆஸ்பத்திரிய விட்டு வெளியே வந்துட்டு, “தம்பி அண்ணேன் சொல்லுறேன் தப்பா நினைச்சுடப்படாது. பிள்ள நமக்கு இல்ல. இனி வீடு வந்து சேராது.

அதனால கண்டததையும் நெனச்சு மனசப் போட்டுக் கொழப்பிக்க வேண்டாம். பையனப் படிக்க வையிங்க; கவனமா பொழப்பு தழப்பப் பாருங்க. நமக்குத் தேவையில்லாம இதுல ஆராய்ச்சி எதுவும் வேண்டாம்.

தம்பி இதுல தேடிக்கண்டு பிடிச்சு என்ன செய்ய? அம்மட்டையன் குப்பையக் கிளறுனா என்ன வரும் மசுருதான் வரும். ஆகவே வேண்டியக் காரியத்தப் பாரு. பையனப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப் பாரு. ரெண்டு பேரும் மொதல்ல சாப்பிடுங்க. ஒருத்தர் மாத்தி ஒருத்தர் இருங்க”

“என்ன அண்ணே, அப்படியே போட்டு வந்து நம்மதான் நிம்மதியாப் பொழப்பு தழப்பப் பாக்க முடியுமா?”

“போடா, இது தேரும்ன்னு எனக்குப் படல. சுகந்தி உடம்புல மாட்டியிருக்கிற மிஷின எடுத்தா முடிஞ்சிரும். அப்ப ஏன் இந்த டாக்டர்க இதப் போட்டு மாட்டி வைச்சுக்கிட்டு”

“அப்ப வாங்க அண்ணே, நீங்க டாக்டர்கிட்டப் பேசுங்க”

“ஏதாச்சு தேவையினா உடனே போன் பண்ணு வந்திருவோம்”

“சங்கத்தில எல்லாரும் வந்திட்டுப் போனாக அண்ணே!”

“செலவுக்கு வைச்சு”க்கன்னு சில ஐநூறு ரூபாய் நோட்டை திணித்தார்.

“இல்ல அண்ணாச்சி! உங்கக்கிட்டயே பணம் இருக்கட்டும்? அவசரத் தேவையின்னா, தம்பி கார்த்திய அனுப்புறேன். பணம் கொடுங்க அண்ணாச்சி”
“சரி ஆக வேண்டியதப் பாரு. ஏதாச்சும் அவசரமா தேவைனா போன் பண்ணு”

திடீர்ன்னு ஒருத்தர் “என்ன பிரச்சினை? பிள்ள என்னதான் பண்ணுச்சு?”

“ஒண்ணுமே தெரியல அண்ணே!

பிள்ள ராத்திரி ரெண்டு மூணு வாட்டி எந்திரிச்சு போன் பேசியிருக்கு.

ஜெயக்கொடி தான் என்ன ராத்திரிப் போன்ல படிக்கிறப் பிள்ளக்கின்னு கேட்டிருக்கா.

அவ்வளவுதான் வேற எதுவுமே தெரியல?”

“எப்பா! காதல் விவகாரமா?”

“அண்ணே சத்தியமா எனக்கு எதுவுமே தெரியாதுண்ணே. நானும் மகனும் ரெண்டு நாளா போன்ல தேடிப் பார்க்கிறோம். நோட்டு, புத்தகம், செல் எதுவுமேயில்ல. என்ன பண்ணச் சொல்லுறீங்க?”

“அந்த பேசுன நம்பருக்கு கூப்பிட்டுப் பார்க்க வேண்டியதுதானே?”

“எல்லாம் அழிஞ்சுப் போயிருக்கு.

நானும் எதுவும் போன் வருமான்னு பாத்துட்டு இருக்கேன்.

ஆனா, இதுவரைக்கு எதுவுமே வரல”

“என்னடா, பெரிய மர்மமாயிருக்கு” சொல்லிட்டு கிளம்பினார்கள்.

சுகந்தியின் வகுப்புத் தோழிகள் பத்து இருபது பேர் வந்தார்கள்.

‘கிடைமாட்டுல இருக்கிற பால் கன்னு, உன்னப்பாரு என்னப்பாருன்னு காத வெடைச்சுட்டு, மருண்டுப் பார்க்கும்’ அப்படித்தான் இந்த காலேசு பெண் பிள்ளகளும் இருந்தார்கள்.

நின்று பாத்தார்கள். சிலர் அழுதார்கள். பலர் மனசுல கிலி கொண்டு இருந்தார்கள்.

ஆனா, யாரும் உண்மையச் சொல்லவில்லை.

“பாத்தது போதும் போங்க. இது விசிட்டர்ஸ் நேரமா?” சிஸ்டர் மூஞ்சியத் தூக்கினார்.

“அட விடுத்தா! புள்ளக்குட்டிகப் பார்த்துட்டுப் போகட்டும்”ன்னு சுகந்தி அம்மா சொல்ல,

“உனக்கு என்னம்மா? டாக்டர்க வந்து வஞ்சா நீங்கதான் நாங்க சொல்லுறதக் கேட்க மாட்டுறீங்கன்னுச் சொல்றேன். எங்க டாக்டர்ட்டப் பேசுங்க. செக்யூரிட்டி, செக்யூரிட்டி”

செக்யூரிட்டி வந்ததும், “யம்மா பாத்துட்டு வேகமாக வெளியே வரணும். எங்களையும் திட்டு வாங்க விடுறீங்க.

‘தன் சாவு இருக்கையில வெண்சாவு சாகாதீக’ போங்க, போயி ஒழுக்கமா இருந்து படிங்க” என்றார்.

சுகந்தியின் வகுப்புத் தோழிகளில் ஒருத்தி, “பெட்டியும் டீப்பும் உருவிட்டா அரைமணி நேரத்தில கதை முடிஞ்சு போகும். சும்மா மிஷின வச்சு ஓட்டுறாங்க” என்றாள்.

“என்னடி, பொசுக்கின்னு இப்படிச் சொல்லுற?”

“எங்க ஆஸ்பத்திரியில எத்தனை கேஸ் பாத்திருக்கேன். நையன்டி பிரசண்ட் முடிஞ்சு, இனி இவ பொழப்பான்னு நம்பிக்கையில்ல”

பேசிக்கிட்டே நடந்து அண்ணா பஸ் ஸ்டாண்டு வந்தார்கள்.

மெல்ல ஒருத்தி “ஏண்டி அவனுக்குத் தெரியுமா?” என்றாள்.

“தெரியாமலா இருக்கும்?”

“தெரியலயே! இதுக்குத் தாண்டி வேண்டாம் வேண்டாம்னா, கேட்டாத்தானே. பாத்தமா பேசுனமா சிரிச்சமா, கடலை கருகிற வரைக்கும் வறுத்தமா? போட்டு மெல்லக் கிளம்பனும்.

கண்ட கருமாந்திரத்தையும் மனசுல ஏத்தினா?

நமக்கு இது தேவையா?

சரிப்படாது. சீச்சீ..சீச்சி.. இந்தப் பழம் புளிக்கும்னு போகத் தெரியனும்டி”

“பாவம்டி, ரொம்ப நல்லவ”

“எதாவது யார்ட்டையாவது கேட்டாலா?

யார்ட்டையும் கேக்கல.

சுகந்தி ‘அம்சம் அடக்கி’ வெளிக்காட்டாம இருந்துட்டு, ஊம ஊரக் கெடுக்கும், பெருச்சாலி வீட்டக் கெடுக்குங்கிற கதையாப் போச்சு. அவளாச்சு எமனாச்சுன்னு” எல்லார் வாயும் மென்றன.

சுகந்தி கடிபடாமல் நகர்ந்தாள்.

பெரிய டாக்டர் வந்தார்.

நர்ஸ் “சார் நோ மூவ்மெண்ட், நோ ரெஸ்பான்ஸ்” என்றாள்.

நர்ஸ் ஏதோ கேட்டாள். டாக்டர் “ஓய், வாட் ஆர் யூ டூயிங்… இம் பாசிபில்…” என்றார்.

ஜெயக்கொடி இருவர் முகத்தையும் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

மறுநாள் பிப்ரவரி 14, காதலர் தினம்.

ஜெயக்கொடியை பார்த்த டாக்டர், “இன்னும் ரெண்டு நாள் பாப்பம்” என்றபடி நகர்ந்தார்.

“மக இனி நமக்குயில்ல.

பொழச்சு வந்தாலும் சுகப்படாது.

பொழச்சு என்ன செய்ய?

இம்புட்டு மருந்து மாத்திரை ஊசி எல்லாம் போட்டதுல உடம்ப பாதிச்சுருக்கும்” என்று சுகந்தி அப்பா கூறியபடி கொஞ்ச நேரம் இருந்தார். அப்பறம் மகளின் கையைப் பிடித்துக் கொண்டு அழுதார்.

ஜெயக்கொடி, “மாமா எனக்கு எதுவுமே தெரியாது. புள்ள காலேசுக்குப் படிக்கப் போறா வாறான்னு இருந்தேன்” என்றபடி அழுதாள்.

ஆற்றாமை தீர இருவரும் அழுதார்கள்.

“சரி, சரி நாம வாங்கியாந்த வரம்.

நடக்கிறது நடக்கட்டும்.

நம்மக் கையில எதுவுமில்ல?” என்று தேறினார்கள்

கல் நெஞ்சுக்காரி, காதலனைக் காட்டிக் கொடுக்காம உதிர்ந்து போயிட்டா.

இப்படித்தான் பதின்ம பருவ பெண் பிள்ளைக காதலையும் காமத்தையும் கடக்க வேண்டியிருக்கு.

எவ்வளவோ காரணங்கள்,

எல்லோருக்கும் தெரியும்,

உங்களுக்குக் கூடத் தெரியும்.

என்ன ஊருக்குள்ள நாலு பேர் ‘புள்ளய வளக்கத் தெரியாம வளத்துட்டா?’ன்னு பேசுவாங்க.

‘எனக்குத் தெரியும் அவ நடையே சரியில்ல. பொட்டைப்புள்ள அடக்கம் கொடக்கமா ஒழுக்கமா வளக்கனும்.’ இப்படியான பேச்சுகளை நம்ம ஊர்கள்ல கேட்டிருப்போம். ஏன் நாமக்கூடப் பேசியிருப்போம்.

அதை தவிருங்கள்.

சுருளி காந்திதுரை
கைபேசி: 94420 26738
மின்னஞ்சல்: suruligandhidurai@gmail.com


Comments

“கல் கட்டிடமும் கல் மனசும்!” அதற்கு 3 மறுமொழிகள்

  1. மதுரையின் அடையாளமான ராஜாஜி மருத்துவமனையின் அவல நிலையையும் நோயாளிகளின் மனநிலையையும் ஆசிரியர் மிகத் தெளிவாக எடுத்து உரைத்திருக்கின்றார்.

    இன்றைய இளைய தலைமுறையினர் காதல் தோல்வியினை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலையில் மரணத்தையே தம் முடிவாக தேர்ந்தெடுக்கிறார்கள்.

    கதையின் ஓட்டத்தை ஆசிரியர் மிக அழகாகக் கையாண்டு இருக்கின்றார்.

    பெற்றோர்கள் மட்டும் இதற்கு பொறுப்பாக முடியாது. இளைய தலைமுறையினர் பெற்றோர்களுடன் கலந்து ஆலோசித்து அவர்களின் முடிவை ஏற்கும் மனநிலைக்கு வரவேண்டும்.

  2. இன்றைய கால கட்டத்தில் மருத்துவமனைகளில் நடக்கும் உண்மைகளை ஆணி அடித்தது போல் சிறுகதையின் வாயிலாக தெரியப்படுத்திய ஆசான் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

    நானும் அதே வழியில் தினந்தோறும் ஓடிக்கொண்டே தான் கிடந்திருக்கிறேன்….

    கல்…

    கல்லை கட்டிடமாக மாற்றி…

    கட்டிடத்தை கதையாக மாற்றம் செய்து எல்லோருடைய மனதையும் கரையச் செய்த ஆசிரியர்க்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

  3. மு. சுமதி

    இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளை கவனிக்கும் முறையில் மாற்றம் தேவை என்பதை மிக சிறப்பாக எடுத்து கூறி உள்ளது கதையின் வலிமை.

    காலம் மாறினாலும் பெண்கள் தங்கள் மனநிலையில் மாறாமல் இருப்பது வருத்தம்.

    ராஜாஜி மருத்துவமனை நிகழ்வு…

    காலத்தால் அழியாத கதை புனைவு…

    மிகச் சிறப்பு…

    ஆசிரியரின் மன உணர்வு மிகத் தரமாக வெளிப்படுத்தபட்டுள்ளது!