கவலை ‘கொல்லாமல்’ இருக்க என்ன செய்ய?

கவலை நம்மைக் கொல்லாமல் இருக்க இந்த இரு வரிகளை நினைவு கொள்ளுங்கள்.

“கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு;
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு”

அன்று ஞாயிற்றுக் கிழமை. நண்பர் ஒருவரைச் சந்தித்தேன்; இடமோ கசாப்புக் கடை; நண்பரிடம் நலம் விசாரித்தேன்.

“வீட்டில் மூளை வாங்கி வரச் சொன்னார்கள்; இந்தக் குட்டியின் மூளை தருவதாகச் சொல்லியிருக்கிறார், கடைக்காரர்; அதனால்தான்  நிற்கிறேன்” என்றார்.

நான் அவர் சுட்டிக் காட்டிய ஆட்டுக் குட்டியைப் பார்த்தேன். அது தன் முன் கட்டப்பட்டிருந்த இலைக் கொத்தை மென்று தின்று கொண்டு, மகிழ்ச்சியோடு நின்றிருந்தது.

சில நிமிடங்களில் அதன் உயிர் பறிபோகும் என்ற கவலையே அதற்கு இல்லை.

 

 

காரணம் என்ன? நம்முடைய மொழி அதற்குப் புரியாது. அதன் மொழி நமக்குப் புரியாது.

புரியாமை அறியாமையாகும்; அறியாமையே ஆனந்தமாகும்!

 

கவலைகளுக்கெல்லாம் காரணம்

கவலைகளுக்கெல்லாம் காரணம் நமது அறிவும், மனமும் தாம். அஃது என்ன மனம்? அந்த மனம் நமது உடற்பகுதியில் எங்கிருக்கிறது? அதன் செயல்பாடுதான் என்ன? என்ற வினாக்களுக்குக் கிடைக்கும் விடையே உளவியல் உண்மைகள்.

மனம் என்பதை நம் மூளையின் ஒட்டுமொத்த எண்ணங்கள் – சிந்தனைகள் என்று கூறலாம். நாம் எண்ணங்களாலும் சிந்தனைகளாலுமே செயல்படுகிறோம்.

எண்ணங்கள் நேர்கொண்டவையாக, உயர்வானதாக இருந்தால், செயல்பாடுகளும் உயர்வாக இருக்கும்.இதைத்தான் “உள்ளத்தனைய(து) உயர்வு” என்றார் திருவள்ளுவர்.

குளத்தில் கிடக்கும் தண்ணீர் மட்டத்திற்கேற்ப மலரின் தண்டு உயரும் என்பதை ‘வெள்ளத்தனைய மலர்நீட்டம்’ என்றார் அவர்.

 

கவலை வைரஸ்

நாம் உயர வேண்டுமானால், நமது மனம் உயர வேண்டும்; ‘உள்ளத் தனைய(து) உயர்வு.’

ஆனால், இன்று நம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் உயர்ந்த பண்புகளுக்கு இடையே கவலை என்னும் வைரஸ்களும் தொற்றிக் கொண்டு இருக்கின்றன. இதனையே மனக்கவலை என்கிறோம்.

பெண்ணிற்கு நல்ல வரன் அமையவில்லை

பையனுக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை

நல்ல மதிப்பெண் இல்லாததால், நல்ல கல்லூரியில் நல்ல பாடப்பிரிவு கிடைக்கவில்லை

என் மேலதிகாரி என்னை மதிப்பதில்லை

என் கீழ்ப்பணி புரிபவர்கள் என்னைப் பொருட்படுத்துவதில்லை

என் வீட்டார் என்னைப் பொருட்படுத்துவதில்லை

குடும்பமே பிரச்சனையில் மூழ்கியிருக்கிறது

உறவுகள் சீர்குலைந்து இருக்கின்றன

பண நெருக்கடி தொழில் தோல்வி வரவேண்டியது வரவில்லை

கொடுக்க வேண்டியதைக் கொடுக்க முடிவதில்லை

அதனால் நோய், அதனால் நொடி, விளைவு – நோய்நொடி.

இப்படி அவரவருக்கு ஆயிரம் கவலைகள். இந்தக் கவலைகள் யாவும் ஒருவகையான பய உணர்வை ஏற்படுத்துகின்றன.

 

ஆறு வகை பயங்கள்

வயதாகி விடுமோ என்ற பயம்

இறந்து விடுவோமோ என்ற பயம்

வறுமை வந்திடுமோ என்ற பயம்

நோய் வருமோ என்று பயம்

நேசிப்பவரின் அன்பை இழக்க நேரிடுமோ என்ற பயம்

பிறர் நம்மைக் கேலி செய்வார்களோ என்ற பயம்

என பயங்களை அறிவியலாய்வார்கள் ஆறு வகைப்படுத்தியுள்ளனர். இந்தப் பயங்கள் நம்மை ஆட்டிப் படைத்து விடுகின்றன.

 

மேடு பள்ளம்

வாழ்க்கையில் துன்பங்கள் வரும்போது கவலை கொள்ள நேரிடும்; தவறில்லை.

இருள் சூழ்ந்தால் தான் ஒளியின் மகிமை தெரியும். வெயில் இருந்தால்தானே நிழலின் அருமை தெரியும்.

கவலை ஓரளவு இருந்தால்தான் வாழ்விலே மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். ஆனால், கவலையை விடாப்பிடியாகக் கொண்டு வாழக் கூடாது; கவலையே வாழ்க்கையாகி விடக் கூடாது.

பயணத்தின் போது மேடு பள்ளம் வந்து கொண்டேதான் இருக்கும்; அது போல வாழ்க்கைப் பயணத்திலும் இடையூறுகள் வந்து கொண்டுதான் இருக்கும். இவற்றைக் கண்டு நாம் கவலை கொள்ளக் கூடாது; பயப்படக் கூடாது. உறுதியோடு அவற்றை எதிர்கொள்ள வேண்டும்.

வாழ்க்கை என்றால் உயர்வு, தாழ்வு இருக்கும். இரவு, பகல் போன்று இன்ப, துன்பங்கள் இருக்கும் என்பதனை மனத்தில் எப்பொழுதும் நிலைநிறுத்த வேண்டும்.

 

கொல்லுவது பாம்பா பயமா

கவலைக்கு உருவம், பருவம் என எவையும் கிடையா. அதற்கு ஒரு வடிவம் கொடுப்பதே நாம் தாம்.

கவலை நம்முடன் கூடப் பிறந்ததில்லை; சந்தர்ப்பம், சூழ்நிலையின் மூலம் நமக்கு நாமே உருவாக்கிக் கொண்டது.

பாழடைந்த மண்டபத்தில் ஆந்தைகளும், ஒளவால்களும் அடைக்கலம் புகும். அது போலச் சோம்பிக் கிடக்கும் உள்ளத்தில் கவலை தொற்றிக் கொள்ளும்.

கிராமங்களில் பாம்பு கடித்த பலரை மருத்துவமனையில் அனுமதித்துச் சிகிச்சை பெறும் பொழுதே சுற்றியிருப்பவர்கள் பயம் என்னும் நஞ்சினை ஏற்றி விடுகின்றனர்.

தைரியமும் ஆறுதலும் சொல்லாமல் நடந்ததைப் பெரிதுபடுத்திச் சொல்லும் போது, தொடர்புடையவர் பாம்பின் நஞ்சால் அல்ல, பயத்தால் இறந்து போவார்.

பாம்புக் கடிபட்டவர் பலர் பயத்தாலேயே மரணிக்கின்றனர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

பென்சில் துப்பாக்கி

 

அமெரிக்காவில் ஜான்கென்னடி ஜானதிபதியாக இருந்தபொழுது, மரண தண்டனைக் கைதிகளிடம் ஓர் ஆய்வு நடத்தினார்.

மரண தண்டனை பெற்ற கைதிகளிடம் அவர்களுக்குப் புதுமையான முறையில் தண்டனை தரப்பட இருக்கிறதென்ற அச்ச உணர்வை ஏற்படுத்தினார்.

‘ஒரே வரிசையில் முகமூடி அணிவித்து நிற்கச் செய்து, பின்புறம் துப்பாக்கியால் சுடப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவித்தனர்.

உரிய நாள் வந்தது. மரண தண்டனை பெற்ற கைதிகளை வரிசையாக முகமூடியுடன் அணிவகுத்து நிறுத்தினர்.

ஓவ்வொருவரின் பின்புறமும் காவலர்கள் அவர்களுக்குத் தெரியாமல், கூர்மையான பென்சிலை முதுகிற்குப்பின் வைத்துக் கொண்டு மௌனமாhக நின்றிருந்தனர்.

சைகை கொடுத்ததும் சுடப்படுவார்கள் என்ற அச்சத்தை உருவாக்கினர்.

உரிய நேரம் வந்தது; சைகை கொடுக்கப்பட்டது. பின்புறம் இருந்தவர் தனது கையில் வைத்திருந்த பென்சிலால் முதுகில் குத்தினார்.

அவ்வளவு தான்! அனைவரும் மயங்கி விழுந்தனர். சிலர் மடிந்தே விட்டனர். மரணத்திற்குப் பெரிதும் காரணம் பயமே.

கவலையால் பயம் ஏற்படுகிறது; பயத்தால் மரணம் ஏற்படுகின்றது.

 

தற்கொலை

மிகுந்த கவலை பயமாக மாறி, சில நேரங்களில் மனநிலை பாதிப்பையும் ஏற்படுத்தி விடும். இந்தியாவில் ஆண்டுக்கு ஒன்றேகால் இலட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இதற்குக் காரணம் மனநிலைப் பாதிப்பு. இந்தியா போன்ற வளரும் நாடுகளில், இளம் தலைமுறையினர் தற்கொலை செய்து கொள்வது மிகுதியாக உள்ளது.

இளைய தலைமுறையினரிடம் மிகுதியாக உள்ள மன அழுத்தம்தான் இதற்கு முதன்மைக் காரணமாக அறியப்பட்டுள்ளது.

அட்லாண்டிக் கடலில் “காட்” என்ற ஒரு வகை மீன் உள்ளதாம். இஃது ஒரு தடவைக்கு அறுபது இலட்சம் முட்டைகள் வரை இடக் கூடியது. ஆனால், முட்டை பொரித்து மீன் குஞ்சாக வெளிவருவது நான்கைந்து தாம்.

அத்தனை குஞ்சுகளும் உயிர் வாழ்ந்தால் அட்லாண்டிக் கடல் முழவதுமே மீன்மயமாகிக் கடல் நீர் நிலத்தில் புகுந்து விடும். அதுபோல, சிறிய சிறிய கவலைகள் நம்மை ஆட்கொண்டால் அழிந்து போவோம்.

மயில் தோகைகளைக் கூட அளவில்லாமல் மிகுதியாக வண்டியில் ஏற்றினால் அதன் அச்சு உடைந்து வண்டி கீழே விழுந்து விடும்..

 

நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்

கவலைக்கு மாறாக, நமது விருப்பம் அனைத்தும் நிறைவேறினால், என்னவாகும்? மைதாஸ் கதையாகும். பிறந்தவர்களெல்லாம் இருந்து விட்டால், பூமி என்னவாகும்?

 

கடவுளின் சிறப்பே நமது நிறைவேறாத எண்ணங்களில் தான் இருக்கிறது.

 

நம்முடைய மனத்தை நமது கட்டுப் பாட்டிற்குக் கீழ் கொண்டு வர வேண்டும். மனம் நிலையில்லாதது; ஒன்றிலிருந்து ஒன்றுதாவும் குரங்குத் தனம் உள்ளது.

மனத்தின் நிலையை விளக்க அப்பர் ஓர் அருமையான சான்று காட்டுவார். ஆமையைச் சமைத்துச் சாப்பிட விரும்பியவர் அதனை மண்பானையிலிட்டு மூழ்கும்படித் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துத் தீயை ஏற்றுவார்.

தண்ணீர் மெல்ல மெல்ல சூடேறி, இளஞ்சூடு வரும்வரை ஆமை மகிழ்ந்து பானையில் நீந்தி மகிழும். ஆனால், நேரம் செல்லச் செல்லக் கொதிநிலை வந்ததும் ஆமை வெந்து போகும்; மன ஆமையும் அப்படித்தான்.

 

“…………உலையை ஏற்றித் தழல்எரி மடுத்த நீரில்
திளைத்துநின்று ஆடுகின்ற ஆமைபோல் தெளிவிலாதேன்
இளைத்துநின்று ஆடுகின்றேன் என்செய்வேன் தோன்றினேனே”

– அப்பர் – தேவாரம்.

 

ஆயிரக்கணக்கான அரிய கண்டுபிடிப்புகளுக்குக் காரணமான தாமஸ் ஆல்வா எடிசன் சந்திக்காத தோல்வியா?. துனது ஆய்வுக் கூடம் தீப்பற்றி எரிந்ததைக் கண்டதும் தன் மனைவியை அழைத்து, அம்மாவைக் கூப்பிடு; இது மாதிரி ஒரு தீ விபத்தை அம்மா இனிமேல் எங்கேயும் பார்க்க முடியாது என்றாராம்.

சாக்ரடீஸ்க்கு விடிந்தால் மரண தண்டனை; மறு அறையில் அடைக்கப்பபட்டிருந்த கைதி இனிமையான பாடல் ஒன்றைப் பாடினான். அதனைக் கேட்டு மீண்டும், ஒரு முறை அவனைப் பாடும்படி, சாக்ரடீஸ் உரத்த குரலில் கேட்டார்.

அதற்கு அவன், விடிந்தால் மரணம் அடையப் போகும் உமக்கு எதற்கு இந்த ரசனை? என்றான். அதற்குச் சாக்ரடீஸ், ‘இறப்பதற்கு முன், இந்தச் சாக்ரடீஸ் மேலும் ஒர் இனிய பாடலையும் புதிய அறிவையும் பெற்று இறந்தான் என்று இருக்கட்டுமே!’ என்று மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

 

சோதனைகள் பல வந்த போதும், பெரியோர்கள் மனம் கலங்கியதில்லை; கவலை கொண்டதில்லை.

 

முன் மாதிரி ஆசிரியர்

எனக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர், இளம் வயதில் எதிர்பாராத விபத்தில், தனது இருகால்களும் செயல் இழந்த நிலையில், வீல்சேரில் எழிலாக இருந்து கொண்டு, அரசனைப் போல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டு வருகிறார்.

அவருக்கு அன்பான மனைவி; அறிவான பிள்ளைகள்; ஆதரவான உறவினர்கள். அவருக்கு வேறு என்ன வேண்டும்? அவருடைய தன்னம்பிக்கையும், கடவுள் பக்தியும், நேர்மையான சிந்தனையும், பலருக்கும் முன் மாதிரியான அவரின் வாழ்க்கையும், என் போன்றோருக்கு முன்னோடியாக இருந்து வாழ்க்கையின் பொருளை விளங்க வைக்கிறார்.

நாமெல்லாம் மனிதர்கள். ஆனால் அவரோ மாமனிதர்.

 

கவலை நம்மைக் கொல்லாமல் இருக்க

கவலை நம்மைக் கொல்லாமல் இருக்க வழி தான் என்ன? இருக்கும் கவலையைப் பகிர்ந்து கொள்வது யாரிடம்? என்பது தான் முதன்மையானது.

நமக்கு உண்மையாக இருக்கும் நண்பர்களிடம் கவலையைப் பகிர்ந்து கொண்டால் பாதி குறைவடையும்.

கவலையைக் கண்டவர்களிடம் கூறினால் அறிவுரைக்குப் பதில் பழியுரையே மிஞ்சும்.

அக்கறையுடன் கேட்பவரின் ஆலோசனை ஆறதல்தரும். அன்பு வார்த்தைகள் உற்சாகத்தைத் தூண்டும்.

கவலைகளை எழுதிக் கடவுளுக்குக் கொடுக்கும் பக்தி நிலையையும், சில கோவில்களில் காணலாம்.

மொத்தத்தில் நலம் விரும்பியுடன் பகிர்ந்து கொண்டால், கவலை பாதியாகும்; இல்லையெனில் இரட்டிப்பாகும்.

நம்முடைய முடிவில் ஒரு தோல்வி ஏற்பட்டால் அதையும் ஏற்றுக் கொண்டு ‘எல்லாம் நன்மைக்கே’ என்று மனத்தைத் தேற்றிக் கொள்ள வேண்டும்.

தோல்வியிலிருந்து கற்ற பாடத்தினைக் கவனமாக நினைவில் வைத்திருக்க வேண்டும்.

எதற்கென்றால் மீண்டும் செய்யாமலிருக்க; தோல்வி அடையாமல் இருக்க; ‘தோல்வியே வெற்றியின் முதற்படி’ என்பதை உணர வேண்டும்.

யார் தோல்வி அடையாமல் இருக்கிறார்கள்?

 

எப்போதுமே இறந்த காலத்தைப் பற்றிய கவலைகளும் வருங்காலம் பற்றிய பயமும் வாழ்வின் நிகழ் காலத்தைத் தின்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

புத்தகங்கள் நம் நண்பர்கள்

நண்பர்களைப் போன்று புத்தகங்களும் இன்றியமையாதவை. துன்பத்தில் துவண்டு போகும்போது, ஒருவனை இன்பத்திற்கு அழைத்துச் செல்லவும், மனச்சுமையை மறந்து மகிழ்ச்சியோடிருக்கவும் நல்ல நூல்கள் உதவுகின்றன.

நமது மனத்திற்கேற்ப, அறிவின் பக்குவத்திற்கு உட்பட்ட நல்ல நூல்களைப் படிக்க வேண்டும். நமக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் அளிக்க வல்லது, நூல்களே! அதனால் தான், ‘நல்ல நூல்கள் நல்ல நண்பர்கள்’ என்று கூறுவார்கள்.

 

துணிந்து முடிவெடுங்கள்

துணிந்து முடிவெடுங்கள். கவலைக்குரிய பிரச்சனையை உணர்ச்சிக்கு அப்பால் நின்று, அறிவு நிலையில் பொறுமையாகச் சிந்தித்துத் தெளிவான முடிவு எடுங்கள்.

பிரச்சனையின் தன்மையைத் திட்டவட்டமாக ஆராய்ந்து உணர வேண்டும். நம்முடைய பலம், பலவீனம் பிரச்சனையின் எதிர்தரப்புப் பலம், பலவீனம் இரண்டையும் ஆராய்ந்து எண்ணித் துணிய வேண்டும். துணிந்தபின் எண்ணுவது என்பது இழுக்கு. எடுத்த முடிவு சரிதான் என்று துணிவோடு செயல்பட வேண்டும்.

 

மனத்தை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள

மகிழ்ச்சி
மகிழ்ச்சி

 

கவலையை மறந்து, மனத்தை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள அன்றாட வாழ்க்கையில் சிலவற்றைக் கடைபிடியுங்கள்.

 

உங்கள் உள்ளம் கவர்ந்த திரைப்படங்களை விரும்பிப் பாருங்கள்

 

தொலைக்காட்சியில் விரும்பும் நிகழ்ச்சிகளை இரசித்துப் பாருங்கள்

 

இதயத்திற்கு இதமான மெல்லிசையை அனுபவித்துக் கேளுங்கள்

 

பயணம் செய்யுங்கள்.

 

‘குற்றம் பார்க்கின் சுற்றமில்லை’ என்பதை மனத்தில் நன்கு பதிய வையுங்கள்

 

உறவினர் வீடுகளுக்குப் போய் வாருங்கள்

 

உங்கள் வீட்டிற்கு அவர்களை அழைத்து விருந்துண்ணுங்கள். அதே நேரத்தில், உறவோடு ஒதுங்கி வாழுங்கள்.

 

பணத்தைச் சேர்த்து வைக்காதீர்கள். உங்களுக்குப் பின் உங்கள் குழந்தைகள் இதனால், கசப்புணர்வை வளர்த்துப் பகைவர்களாகி விடுகிறார்கள். அவர்களைத் திருப்திப் படுத்தவே முடியாது.

 

அன்பைப் பெரிதும் வெளிக் காட்டாதீர்கள்; அளவோடு அன்பு செய்யுங்கள்.

 

இரவு பத்து மணிக்கு முன்னர் நிம்மதியாகத் தூங்கி, அதிகாலை ஐந்து மணிக்கு முன்னர் விழித்திடுங்கள்.

 

தினமும் குறைந்தது பத்து மணித்துளிகளாவது உடற்பயிற்சி செய்யுங்கள். அதுபோல் தினமும் பத்து மணித்துளிகளாவது காலை அல்லது மாலை உடலில் வெயில் படும்படிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

 

அடுத்தவர்கள் விவகாரங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம்.

 

உதவி வேண்டுமென்று கேட்டால் மட்டுமே, உதவ வேண்டும்.

 

உங்கள் சகோதரர்களையும், சகோதரிகளையும் அவர்கள் குழந்தைகளையும் அளவோடு அன்பு செய்யுங்கள்.

 

கருத்து வேறுபாடு வரும் பொழுது, எதிர்வாதம் செய்ய வேண்டாம். தவறான கருத்தாக இருந்தாலும், உண்மையை அப்பொழுது கூற வேண்டாம்; அமைதியாக இருங்கள். அது உங்களுக்கு மனஅமைதியைக் கொடுக்கும்.

 

எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்; அவமானங்களை எதிர்கொள்ளுங்கள்; அவமானங்களைத் தாங்கிக் கொள்ளும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

 

யாருக்கும் துன்பமளிக்காமலும், முடிந்தவரை பிறர் துன்பம் போக்கியும் வாழ்தல் இன்பமான எதிர்காலத்திற்கு வழி. இவை யாவும் அரை நூற்றாண்டிற்கு மேல் வாழ்ந்த வாழ்வியல் அனுபவங்கள்.

 

கப்பல் மனம்

கப்பல்
கப்பல்

 

கடல் முழுவதும் நீர் என்றாலும் கப்பல் மட்டுமே கம்பீரமாகச் செல்கிறது. கப்பலுக்குள் நீர் புகாதவரை, கப்பலுக்கு என்ன கவலை?

அதே நிலைதான் நமக்கும். மனம் என்னும் கப்பலுக்குள் கவலை என்னும் நீர் புகாதவரை அமைதிக்குப் பஞ்சமில்லை; ஆனந்தத்திற்கு அளவில்லை.

நாம் கழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கைப் பாதையைக் குறைக்கிறது; வயதைக் கூட்டுகிறது. இடைப்பட்ட இக்குறுகிய காலத்தில் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வாழக் கற்றுக் கொண்டால், கவலை நம்மைக் ‘கொல்லவா’ முடியும்?

“கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு;
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு”

– சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்

2 Replies to “கவலை ‘கொல்லாமல்’ இருக்க என்ன செய்ய?”

  1. பதிவிற்கு நன்றி. உங்கள் ஆலோசனைகள் அனைத்தும் அருமை.காயம் பட்ட இடத்திற்கு மருந்து வைப்பது போலிருந்தது.இது போன்று இன்னும் நிறைய பதிவிடவும்.நன்றி, மகிழ்ச்சி.

Comments are closed.