காவிரிக் கரையில் பிறந்த காவியக் கவிஞர் வாலி பற்றி நாம் இந்த வாரம் காண்போம். கவிஞர் வாலி ஓவிய வாலியாய் தான் முதலில் வலம் வந்தார். பின்பு காவிய வாலியாய் அவதாரம் எடுத்தார்.
தமிழ் சினிமாவில் 1958-ல் முதன் முதலில் தெலுங்கு இசையமைப்பாளரான கோபாலம் என்பவரின் இசையில், மைசூர் இராஜ பரம்பரையைச் சார்ந்த ஏகாம்பர ராசன் என்பவரின் தயாரிப்பில் உருவான, ‘அழகர்மலைக் கள்வன்‘ என்ற தமிழ் திரைப்படத்தில் திரைப்படப் பாடலாசிரியராக வாலி அறிமுகமானார்.
அவர் எழுதிய முதல் பாடல் ‘நிலவும் தாமரையும் நீயம்மா இந்த உலகம் ஒருநாள் உனதம்மா‘ என்பதாகும். அதைப் பாடியவர் திருமதி பி.சுசீலா அம்மா அவர்கள்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களால் அதிகம் ஆதரிக்கப்பட்டவர் வாலி என்றால் மிகையாகாது.
“அண்ணன் எம்.எஸ்.வியைப் பார்ப்பதற்கு முன்பு எனக்கு சோத்துக்கு வக்கில்லை; அண்ணன் எம்.எஸ்.வி ஆதரவு கிடைத்ததும் சோறு திங்க நேரமில்லை.” என்று வாலி கூறியுள்ளார்.
காலத்தால் செய்த நன்றியை யாரும் மறக்கக்கூடாது என்பதற்கு வாலியின் மேற்கூறிய கூற்று நல்ல வழிகாட்டி ஆகும்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த சமயத்தில், பிரபலமான திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் அண்ணாவுக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் விருந்து கொடுத்தார்.
அப்பொழுது விருந்திற்கு வருகை தந்த அண்ணா காரிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த போது மரத்தடியில் நின்றிருந்த வாலி அண்ணாவை இருகரம் கூப்பி வணங்கினார்.
அண்ணாவும் வணக்கம் தெரிவித்துவிட்டு அருகில் வாலியை அழைத்தார்.
“நீங்கள் எம்.ஜி.ஆருக்கு நிறையப் பாடல்கள் எழுதுகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா? ” என்று கேட்டார்.
“ஆம் அண்ணா” என்று வாலி பதில் சொன்னார்.
“எம்.ஜி.ஆரின் நல்ல உள்ளத்தில் இடம் பிடித்துக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.” என்று கூறி சில இலக்கியப் புத்தங்களை கொடுத்து ‘Try to be in his good books’” என்று சொன்னார் அண்ணா.
அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த நல்லவன் வாழ்வான் என்ற திரைப்படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பை வாலிக்கு அண்ணா வழங்கினார்.
தோல்வியைக் கண்டு துவளக் கூடாது என்பதற்கு கவிஞர் வாலியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் நமக்கு எல்லாம் நல்ல பாடமாக அமையும்.
ஆரம்ப காலங்களில் கவிஞர் வாலிக்கு திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு அதிகம் கிடைக்கவில்லை. அப்போது கவிஞர் வாலியும் நடிகர் நாகேசும் கிளப் கவுசில் தங்கியிருந்தனர்.
திரைப்பட பாடல் எழுதும் வாய்ப்பு எப்போதாவது வந்ததால் நிரந்தர வருமானம் இன்றி அவதிப்பட்டார் வாலி.
ஆதலால் திரைப்படப் பாடல் எழுதும் பணியை விட்டுவிட்டு மதுரையில் உள்ள டி.வி.எஸ் நிறுவனத்துக்கு கணக்கு எழுதும் பணிக்குச் செல்லலாம். அப்பணியில் மாதச்சம்பளம், சாப்பாடு உண்டு. நிரந்தர வருமானம் வரும் என்று முடிவு செய்து மதுரைக்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார்.
அந்நேரம் வாலியைச் சந்திக்க பாடகர் திரு.பி.பி.சீனிவாஸ் வந்தார். பணம் இன்றி கஷ்டப்படும் காலங்களில் வாலிக்கு பணம் கொடுத்து உதவுவார் பாடகர் பி.பி.சீனிவாஸ்.
பாடகரை வரவேற்ற கவிஞர் பேசிக் கொண்டிருக்கையில் “சமீபத்தில் என்ன பாடலை பாடினீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு பி.பி.சீனிவாஸ் அவர்கள் சுமைதாங்கி என்ற படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் என்று சொல்லி அதைப் பாடிக் காண்பித்தார்.
மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
(மயக்கமா? கலக்கமா?)
ஏழை மனதை மாளிகை ஆக்கு
இரவும் பகலும் காவியம் பாடு
நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதியை நாடு
(மயக்கமா? கலக்கமா?)
என்று முழுப்பாடலையும் சீனிவாஸ் அவர்கள் பாடிக் காண்பித்ததும் மதுரை செல்லும் பயணத்தை நிறுத்தி விட்டார் வாலி.
மேற்கண்ட பாடல் அவருக்கு நம்பிக்கையை விதைத்தது. வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்தைக் கவிஞர் வாலிக்கு உருவாக்கியது. இதனை வாலியே ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கூறியுள்ளார்.
“மயக்கமா? கலக்கமா? பாடல் எல்லா காலத்திற்கும் எல்லோருக்கும் பொருந்தும். இப்பாடலில் திருக்குறள், பைபிள், பகவத்கீதை ஆகியவற்றின் சாரத்தைப் பார்க்கலாம்” என்று வாலி கூறியுள்ளார்.
எதையும் நேர்படப் பேசக்கூடிய ஆற்றல் கவிஞர் வாலிக்கு உண்டு. அவர் தன்னை ஒரு வார்த்தை வங்கியாகவே எப்பொழுதும் வைத்திருப்பார்.
காலத்திற்கு ஏற்றாற் போல தன்னை வாலி அவர்கள் மாற்றிக் கொண்டதால்தான் 15000 பாடல்களுக்கு மேல் அவரால் எழுத முடிந்தது.
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.இராஜேந்திரன், எம்.ஆர்.இராதா, ஜெய்சங்கர், சிவகுமார், ரஜினிகாந்த், கமல்காசன், பாக்கியராஜ், பாண்டியராஜன், பாண்டியன், பார்த்தீபன், அஜித், விஜய், சிம்பு, தனுஷ், சூர்யா, கார்த்தி, பரத் என பல தலைமுறை நடிகர்களுக்கும் பாட்டு எழுதிய பெருமை கவிஞர் வாலியைச் சாரும்.
அவர் இலக்கியத்திலும் தடம் பதித்துள்ளார். இராமாயணத்தை கவிதை வடிவில் அவதாரபுருஷன் என்றும், மகாபாரதத்தை பாண்டவர் பூமி என்றும், கந்தபுராணத்தை தமிழ் கடவுள் என்றும், அம்பாள் அந்தாரி ஆகிய பக்தி படைப்புகளைப் படைத்துள்ளார்.
மேலும் நானும் இந்த நூற்றாண்டும், கிருஷ்ண பக்தன், எனக்குள் எம்.ஜி.ஆர், கலைஞர் காவியம் ஆகிய இலக்கியப் படைப்புகளையும் படைத்துள்ளார்.
இலக்கிய உலகமும், திரை உலகமும் வாலியின் புகழை என்றென்றும் கொண்டாடட்டும்.
முனைவர் சொ.சிதம்பரநாதன்
பொருளாதாரத் துறைத்தலைவர்
இராசபாளையம் ராஜுக்கள் கல்லூரி
இராசபாளையம்
9486027221
மறுமொழி இடவும்