காசேதான் கடவுளடா – சிறுகதை

சித்திரை வெயிலின் கடுமை 10 மணிக்கு எல்லாம் தெரிய ஆரம்பித்து விட்டது. தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான் முரளி.

அடுப்பில் என்னை காய்ந்து கொண்டிருந்தது. பூரிக்கு மாவை வளர்த்துக் கொண்டு இருந்தான். அவன் மாஸ்டராக பணியாற்றுகிறான்.

அடுப்பு ஒரு பக்கத்தில் பூரி வேக வைப்பது போல் அவனை வேக வைத்துக் கொண்டிருக்க, மற்றொருபுறம் வெயிலின் தாக்கம் அவனை வேர்த்து விடச் செய்தது.

சாப்பிடக்கூட நேரமில்லை அவனுக்கு. தன் இடுப்பில் கட்டிக் கொண்டிருந்த துண்டை எடுத்து கை முகங்களை துடைத்துக் கொண்டு, தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

‘டிடுடிட்டி…டிடுடிட்டி … டிடுடிட்டி ….’ என செல்போன் சிணுங்கியது.

முரளி செல்லை எடுத்து ஆன் செய்தான்.

“ஹலோ …”

“ஹலோ நான் தாங்க கௌசலை பேசுறேன்.”

“ம்..ம். சொல்லு. என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”

“இப்போதான் வீட்டு வேலை எல்லாம் முடிச்சேன். குழந்தைகளுக்கெல்லாம் சாப்பாடு செய்து கொடுத்துவிட்டு நானும் சாப்பிட்டு விட்டுத்தான் உங்களுக்கு போன் செய்றேன்.

இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை. குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் லீவு. வீட்டுல தான் இருக்காங்க. இன்னைக்கு என்ன கறி பண்றதுன்னு தெரியல. அதான் உங்களுக்கு போன் பண்ணுனேன்…”

“ஏன் என்ன செய்யப் போற? என்ன வாங்கிட்டு வரணும்?”

“இன்னைக்கு குழந்தைங்க வீட்டுல இருக்குதுக. கோழி குழம்பு வைக்கலாமான்னு …”

“என்கிட்ட காசு எல்லாம் ஒன்னும் இல்ல. இப்போ கோழி வாங்கிட்டு வான்னு சொல்லுவ. அப்புறம் ஆயில் இல்ல. மிளகுத்தூள் இல்ல. சீரகத்தூள் இல்ல. இஞ்சி, பூண்டு இல்ல. மல்லி, புதினா இல்லன்னு ஒன்னு ஒண்ணா அப்புறம் ஆரம்பிச்சிடுவ …”

“ஆமாங்க சரியா சொல்லிட்டீங்க. இத எல்லாத்தையும் அப்படியே கொஞ்சம் மறந்துடாம வாங்கிட்டு வந்துடுங்க” என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே போனை ஆப் செய்தாள் கௌசலை.

முரளி போனை தூக்கி எரிச்சலுடன் வைத்தான்.

‘ஒரு மனுஷன் எவ்வளவுதான் பிரச்சனைகளை சமாளிக்கிறது. நான் என்ன ஆபீஸ் உத்தியோகமா பாக்குறேன்.

படிக்க வேண்டிய காலத்துல என்ன ஒழுங்கா படிக்க வைக்காதது எங்க அப்பா அம்மா செஞ்ச தப்பு. நான் என்ன பண்ணட்டும்?

அந்தக் காலம் மாதிரியா இந்த காலம் இருக்குது. அப்போ ஒரு நாள் சம்பளமான 15 ரூபாயில குடும்பத்தை நடத்துனோம். இப்போ ஒரு நாளைக்கு 700 ரூபாய் சம்பாதிச்சும் ஒண்ணுத்துக்கும் ஆகல …

சம்பாதிக்கிறதுல ஒரு நூறு ரூபா எடுத்து வைக்க முடியல. கால காலத்துல கல்யாணத்தை பண்ணி செட்டில் ஆகி இருக்கணும்.

எல்லாம் காலம் தவறி பெய்த மழையாகி போச்சு. நமக்கு 42 வயசாச்சு. இந்த வயசுல… பத்து வயசுல ஒரு பையனும், எட்டு வயசுல ஒரு பொண்ணும்.

விவரம் தெரியாத குழந்தைங்க, வெளி உலகம் தெரியாத மனைவியை வச்சிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே … அன்னன்னைக்கு சம்பாதிக்கிறது அன்னன்னைக்கே காலியாயிடுது.

இந்த ராணி அம்மா ஆர்டர் போட்டுட்டாங்க, கோழியும் சாமானும் வாங்கிட்டு வரச் சொல்லி. கையில சம்பளம் வாங்குற மாதிரி தான் தெரியுது; எங்க போகுதுன்னு தெரியலையே.

இந்த வருஷமாவது மழைக்கு முன்னாடி எதையாச்சும் போட்டு புரட்டி வீட்டுக்கு கீத்து விட்டுப்புடனும்.

சரி சரி மணி 12 ஆக போகுது. கோழி கடைக்கு போன் பண்ணி ஒரு கிலோ கோழி எடுத்துட்டு வர சொல்லுவோம்.’ என்று மனதிற்குள் புலம்பியவாறே முரளி போனை எடுத்து டயல் செய்தான்.

“ஹலோ யாருங்க?”

“நான் தாம்பா மாஸ்டர் முரளி பேசுறேன். எனக்கு கோழி ஒரு கிலோ வேணும். கடைக்கு கொடுத்து அனுப்பிடுங்க. ஆமாம் எவ்வளவுப்பா காசு?”

“ஒரு கிலோ 280 அண்ணே.”

“சரிப்பா நல்ல கறியா பார்த்து கொடுத்து அனுப்பு. குழந்தைங்க சாப்பிடுறது. கடையில வந்து காசு வாங்கிக்க” என்று சொல்லி போனை ஆப் செய்தான்.

‘ஒரு கிலோ கோழிக்கு நாம வாங்குற சம்பளத்துல பாதி போயிடுச்சே. இப்ப விக்கிற விலைவாசியில குடும்பத்தை நடத்தவே முடியாது போலிருக்கே…

காலையில நாலு மணிக்கு வந்த நம்ப இன்னும் ஒண்ணுமே சாப்பிடல’ என்று நினைத்துக் கொண்டே போய் ஒரு டம்ளர் தண்ணீர் அள்ளி குடித்தான்.

வேலைகளை முடித்துவிட்டு தன் மனைவி சொன்ன சாமான்களை எல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து சைக்கிளை ஓரமாக நிறுத்தினான் முரளி.

சத்தம் கேட்டதும் வீட்டின் உள்ள இருந்து இரண்டு குழந்தைகளும் “ஐ! அப்பா வந்தாச்சு! அப்பா வந்தாச்சு!” என்று சொல்லிக் கொண்டு ஓடி வந்து முரளியின் கைகளில் உள்ள பையை வாங்கிக் கொண்டு உள்ளே ஓடினர்.

“அப்பப்பா என்ன வெயிலு. தாங்கல” என்று முணுமுணுத்தவாறு முரளி திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டான் கண்களை மூடிக்கொண்டு.

உள்ளே இருந்து கௌசலை சொம்பில் தண்ணீருடன் வந்தாள்.

“என்னங்க இங்கேயே உக்காந்துட்டீங்க” என்று தன் புடவை தலைப்பால் முகத்தை துடைத்து விட்டு, “வேலை ரொம்ப அதிகமா? தண்ணிய குடிச்சிட்டு உள்ள வந்து உட்காருங்க. ஃபேன் போட்டு விடுறேன்” என்று சொன்னாள்.

முரளி உள்ளே சென்றதும் தான் வாங்கி வந்த சாமான்களை எல்லாம் கணக்குப் பார்த்து விட்டு, மீதம் இருந்த சம்பள பணத்தில் தலைக்கு 20 என்று கணக்கு போட்டு எண்பது ரூபாயை கையில் எடுத்து தன் குழந்தைகளிடம் கொடுத்து கொடி நாள் நிதி உண்டியலில் போடச் சொல்லிவிட்டு மீதம் இருந்ததை மனைவி கௌசலை இடம் கொடுத்துவிட்டு கிளம்பினான்.

“என்னங்க இப்பத்தானே வந்தீங்க. எங்க கிளம்பிட்டீங்க?” என்று கேட்டாள் கௌசலை.

“நீ சமைச்சு சீக்கிரமா குழந்தைகளுக்கு கொடுத்துட்டு நீயும் சாப்பிடு. சாயங்கால கடைக்கு ஒரு முதலாளி கூப்பிட்டு இருக்காரு. நான் போய் பாத்துட்டு வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு புறப்படத் தயாரானான் முரளி.

“என்னங்க கொஞ்ச நேரம் இருங்க. நான் சீக்கிரம் சமைத்து விடுவேன். சாப்பிட்டு விட்டு போகலாம் என்றாள் கௌசலை.

“சாப்பாட்டை எல்லாம் பார்த்தா முடியாது. காத்து உள்ள போதே தூத்திக் கொள்ளனும். குழந்தைகளை படிக்க வைத்து நல்ல ஆளாக்கணும்.

அப்புறம் இந்த வருஷம் எப்படியாவது மழைக்கு முன்னாடியே நம்ம வீட்டுக்கு கீத்து விட்டுடனும்.

இதெல்லாம் நான் இப்போ சம்பாதிக்கிறத வச்சு ஒன்னும் பண்ண முடியாது. இன்னொரு வேலைய பார்த்தா தான் முடியும். நான் போயிட்டு சீக்கிரமா வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டான் முரளி.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.