தாமரை நிலவு! அவளுடைய பெயர். நிலா ஒரு பெண்ணாகியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
சிரித்தாலே நிலவு போன்ற அவளது முகம் தாமரையாகச் சிவக்கும். பொருத்தமான பெயரைத்தான் கொண்டிருந்தாள்.
ஆயிரக் கணக்கில் வந்து குவிந்த வரன்களில் அவளுக்காகத் தந்தை சிற்றம்பலம் தேர்ந்தெடுத்தது அரவிந்தன் என்கிற வரனைத்தான்.
தாய் புவனேஸ்வரிக்கு அதில் கிஞ்சித்தும் இஷ்டமில்லை. தவமாய் தவமிருந்து பெற்று போற்றிப் போற்றி ஆசை ஆசையாய் வளர்த்த செல்ல மகளை ராணுவத்தில் பணிபுரியும் அரவிந்தனுக்கு கொடுக்க மனமில்லை.
எல்லைப் பாதுகாப்புப் படையில் முக்கிய அதிகாரியாகப் பொறுப்பேற்று காஷ்மீர் எல்லைப் பகுதியில் உயிரைப் பணயம் வைத்து அன்றாடம் தீவிரவாதிகளுடன் மோதும் பணி.
என்னதான் தூரத்துச் சொந்தமானாலும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்க புவனேஸ்வரி விரும்புவதில்லை. புவனேஸ்வரியின் விருப்பம், இஷ்டம் பற்றி சிற்றம்பலம் கவலைப்படவில்லை.
தாய்நாட்டு எல்லையைத் தீவிரவாதிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விடாமல் அல்லும் பகலும் நாட்டிற்கு அரணாக இருப்பவன் நிச்சயமாகத் தன் மகளுக்கும் அரணாக வாழ்நாள் முழுவதும் இருப்பான் என முடிவெடுத்து திருமண ஏற்பாடுகளைத் தொடர ஆரம்பித்தார்.
அரவிந்தனின் பெற்றோரும் அதே ஊரில் வசித்து வந்ததால் இதைவிட நல்ல வரன் அமையாது என சிற்றம்பலம் நினைத்தார்.
தாமரை நிலவைப் பொறுத்தமட்டில் அரவிந்தன் ரொம்பவும் பிடித்துப் போயிருந்தது.
அவளும் ஒரு சராசரிப் பெண்தானே? திருமணத்திற்கு நாள் குறித்தது முதல் கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தாள்.
அரவிந்தனின் புகைப்படத்தை ஒரு நாளைக்கு நூறு முறை பார்த்துப் பார்த்து பரவசமடைந்தாள். பரவசம் எல்லாம் இரவு எட்டுமணி சன் செய்திகள் பார்க்கும் வரைதான்.
காஷ்மீர் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளுக்கும், நம் நாட்டு ராணுவ வீரர்களுக்கும் நடந்து வரும் துப்பாக்கிச் சண்டை பற்றிய செய்தி அவள் வயிற்றைக் கலக்கும்.
மேஜர் அரவிந்தனின் தலைமையில் நம் அதிரடிப்படையினரின் சாகசங்கள் பற்றிக் கேட்கையில் உள்ளம் குளிரும். இரவு முழுக்கத் தூங்க விடாமல் கற்பனைகள் தாறுமாறாக அவளை அலைக்கழிக்கும்.
இருப்பினும், பகற்பொழுதில் தோழிகளுடன் தன் உள்ளம் கவர்ந்தவனின் வீர, தீரச்செயல்களைப் பெருமையுடன் தம்பட்டம் அடித்துக் கொள்ளும்போது கலங்கிய மனம் தெளிவடையும்.
இப்படியே போய்க் கொண்டிருந்த நாட்கள் குறுகிக் குறுகி திருமண நாளை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்தன. திருமணத்திற்கு இன்னும் மூன்றே மூன்று நாட்களே இருந்தன.
அன்றொரு நாள் பகற்பொழுதில் மக்களை ஆட்டிப்படைத்து ஒருவழி பண்ணிவிட்டத் திருப்தியுடன் ஆதவன் தன்னை ஆசவாசப்படுத்திக் கொள்ள மேற்கு நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருக்க, அந்த மாலைவேளை கருக்கல் நேரத்தில் வாசல் காம்பவுண்டு கேட் லைட்டைப் போட வெளியே வந்த புவனேஸ்வரி, டாக்ஸி ஒன்று வீட்டு முன் வந்து நின்றதும், ஆவலுடன் கேட்டைத் திறந்து பார்த்தாள்.
அரவிந்தன் பெட்டி, படுக்கையுடன் இறங்கிக் கொண்டிருந்தான்.
புவனேஸ்வரி ஆச்சரியம் மேலிட “வாங்க தம்பி! உள்ளே வாங்க, நாளை காலை தானே வரப்போறதா சொன்னாங்க” என்றாள்.
உள்ளே வந்து அமர்ந்தவன் “முதன் முதலாய் நிலா தரிசனம்! அப்புறந்தான் அப்பா, அம்மா எல்லாம். அதான் வீட்டுக்குப் போகிற வழியில் இங்கேயே இறங்கிட்டேன். தப்பு ஒன்னும் இல்லையே அத்தை?” என்றான்.
“என்ன தம்பி இப்படிக் கேட்டுட்டீங்க? இதுவும் உங்க வீடுதானே? இருங்க, காபி கலந்து எடுத்துட்டு வர்றேன். மாமா கல்யாண வேலையாய் இப்பத்தான் வெளியே கிளம்பிப் போனாரு. வந்துருவாரு. குளிச்சு, சாப்பிட்டுட்டுப் போகலாம்” என்றவாறே உள்ளே சென்றாள்.
“நிலா எங்கே அத்தை? கண்ணிலேயே படலை”
“அதை ஏன் கேட்கறீங்க. நாளைக்கு நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்சதும் அவளுக்கு கையும் ஓடலே, காலும் ஓடலே, நீங்க வர்றதுக்குள் எல்லா வேலையையும் முடிச்சிட்டு ரெடியா இருக்கணும்னு சொல்லிக்கிட்டிருக்கா. மொட்டை மாடியில் துவைச்ச துணிகளைக் காயப்போட்டுக்கிட்டிருக்கா. போய் பாருங்க” என்றாள் புவனேஸ்வரி.
மனம் பரபரக்க, சப்தமின்றி மாடிப்படிகளைத் தாவி மொட்டை மாடியினை அடைந்தான் அரவிந்தன்.
இவன் வந்ததை அறியாமல் ஏதோ பாடலை முணுமுணுத்தவாறே கொடியில் பக்கெட்டிலிருந்து ஒவ்வொன்றாகத் துணிகளை எடுத்து உதறிக் காயப்போட்டுக் கொண்டிருந்தாள் தாமரை நிலா.
இரண்டாவது வரிசைக் கம்பில் துணிகளை உலர்த்த கம்பியில் கை வைத்தவள் “ஆ…ஆ…அம்மா..!” என அலறியபடியே பின்னால் சாய, இதை சற்றும் எதிர்பார்க்காத, அவள் பின்னே நின்று கொண்டிருந்த அரவிந்தன் அவள் கீழே விழும் முன் அவளைக் கட்டிப்பிடித்து தாங்கியதும் அவனும் “ஆ…ஆ…ஆ…” என வார்த்தைகள் வெளிவராமல் அலறியபடியே கீழே சாய்ந்தான்.
அரவிந்தன் கீழே சாய்ந்து கிடக்க அவன் மேலே தாமரை நிலவு படர்ந்திருந்தாள்.
வீதியிலிருந்த மின்கம்ப ஒயர் ஒன்று அடித்துக் கொண்டிருக்கும் பேய் காற்றில் அறுந்து போய் மொட்டை மாடியிலிருந்த கொடிக் கம்பி மீது விழுந்து கிடந்ததை மாலை நேர இருளில் கவனிக்காமல் ஈரத்துணிகளைக் கம்பியில் போட்டதும் தாமரை நிலவு உடலில் மின்சாரம் பாய்ந்திருந்தது.
வானத்தில் நிலா கருமேகத்தினுள் நுழைய, மொட்டை மாடியில் இருள் சூழ்ந்தது.
கருமேகமாய் மொட்டை மாடி வந்த அரவிந்தன் மேல் விழுந்து அவனோடு தாமரை நிலவு ஐக்கியமாயிருந்தாள்.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!