கானல்நீர் உறவுகள் – கதை

மதியம் மணி இரண்டு.

கும்பகோணத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் இரண்டுபேர் அமரும் இருக்கையில் கண்களை மூடி அமர்ந்திருந்தான் குருமூர்த்தி.

பேருந்து கிளம்ப இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்த நிலையில் பேருந்து முக்கால்வாசி நிரம்பிப் போயிருந்தது.

ஓட்டுனரும் நடத்துனரும் பேருந்துக்குச் சற்று தள்ளி காக்கி பேண்ட்டும் நீல நிறச் சட்டையும் அணிந்திருந்த சக போக்குவரத்து ஊழியர்களோடு பேசிக் கொண்டிருந்தனர்.

தீடீரென பேருந்துக்குள் “அம்மம்மா தம்பியென்று நம்பி அவன் உன்னை வளர்த்தான். தாயென்றும் தந்தையென்றும் தன்னை நினைத்தான். அது உனக்காக வாழ்ந்த உள்ளமல்லவோ.. அம்மம்மா…” என்ற பழைய படமான ராஜபார்ட் ரங்கதுரையில் டி.எம்.எஸ் பாடும் பாடல் கணீரென்று பிச்சுப்பிசிறு இல்லாமல் ஒலித்தது.

அப்படியே அச்சுஅசலாய் டி.எம்.எஸ்ஸின் குரல் போலவே பாடிக் கொண்டு, பேருந்தில் ஏறி கையிலிருந்த நசுங்கிப்போன அலுமினியம் தட்டில் கிடந்த சில்லறைக் காசுகளை மிகக்கொஞ்சமாய் மேலே தூக்கிப்போட்டு தட்டில் விழவைத்து சப்தமெழுப்பிக் கொண்டு, பார்வையற்றவனாய் இருந்ததால் குத்து மதிப்பாய் ஒவ்வொருவரிடமும் தட்டை நீட்டிப் பிச்சை கேட்டபடி, யார்மீதும் இடிக்காமல் சீட்டுக் கம்பிகளில் மோதிக் கொள்ளாமல் வெகுலாவகமாய் முன் வாசப்படியிலிருந்து பாடியபடியே பின்வாசல் நோக்கி நடந்தான் அந்த பிச்சைக்காரன்.

நாற்பது வயதுக்கு மேல் இருக்கும். மெலிந்த தேகம், கறுப்பும் வெளுப்புமாய் முரட்டுதாடி மீசை, ஒழுங்காய் சீவப்படாத தலைமுடி, இமைமூடிய விழிகள், பளீரென்ற சோழிசோழியாய்ப் பற்கள், தோளில் தொங்கும் தூளி ஷேப்பிலான நீண்ட பை.

‘சலசல’வென பேச்சு சப்தம் கேட்டுக் கொண்டிருந்த பேருந்து இப்போது நிசப்தமானது.

அவனின் பாட்டைக் கேட்டு அமர்ந்திருந்த அனைவரும் மெய் மறந்தது போனது போல் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

பாடியபடியே தங்கள் முன் அவன் நீட்டிய அலுமினியம் தட்டில் ஒருவர் பாக்கியில்லாமல் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய், ஐந்து ரூபாய் எனப்போட குருமூர்த்தியும் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை பர்ஸிலிருந்து எடுத்துப் போட்டான்.

மொத்தத்தில் அவனின் ‘கணீர்’ குரல் அனைவரையுமே வசீகரித்திருந்தது போலும். யார் எப்படியோ குருமூர்த்திக்கு அந்தப் பிச்சைக்காரனின் குரல் தன்னை வசீகரித்தது மட்டுமல்ல அவன் பாடிய பாடல் தன் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவும் தோன்றியதால் அவன் பேருந்தைவிட்டுக் கீழே இறங்கும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

பிச்சைக்காரன் அடுத்த பேருந்துக்குள் ஏறியபோது தொடர்ந்து இந்தப் பாடலையே பாடுவான் என எதிர் பார்த்திருக்க அவன் “புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது” என்ற எம்.ஜி.ஆரின் பாட்டுக்கு மாறியிருந்தான்.

பேருந்து கிளம்பியாகி விட்டது.. அவசர அவசரமாய் ஏறிய ஒருவர் குருமூர்த்தியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டார். வேகமெடுத்தது பேருந்து.

எப்படியும் வந்தவாசி போய்ச்சேர இரவு ஏழு ஏழரை ஆகும் என்று நினைத்தவனாய்க் கண்களை மூடி சீட்டில் சாய்ந்து கொண்டான்.

“அம்மம்மா தம்பி என்று நம்பி” பிச்சைக்காரன் பாடிய பாட்டு மனதில் ஓடியது. தானும் அந்தப் பாடலை சத்தம் போட்டுக் கத்திப் பாடவேண்டும் போல் இருந்தது. அந்தப்பாடலின் கருத்தும் தன் வாழ்க்கையும் எப்படி ஒத்துப்போகிறது பாரேன் என நினைத்துக்கொண்டான்.

அப்பா சண்முகம் அரசுத்துறையில் கடைநிலை ஊழியர். இப்போது போல் அப்போது ஆரம்ப சம்பளமே பதினெட்டாயிரத்து சொச்சமெல்லாம் இல்லை. குறைந்த வருமானம்.

இதில் அம்மா, பதினான்கு வயது ஒன்பதாவது படிக்கும் நான், ஏழு வயது தம்பி குமார், நாலு வயது தங்கை அனு. அப்பாவோடு சேர்த்து ஐந்து பேர்.

வீட்டு வாடகை, நாள், கிழமை, நல்லது கெட்டது, மருத்துவ செலவு என்று வருகின்ற வருமானம் போதாமல் பற்றாக்குறை பட்ஜெட்தான் ஒவ்வொரு மாதமும்.

அம்மாவுக்கு அடிக்கடி உடம்பு முடியாமல் போகும். அதற்கு மருத்துவ செலவு சம்பளத்தில் கணிசமாய் செலவாகிவிட மீதியோடு அந்த மாசம் முழுதும் திண்டாட்டம்தான். திடீரென அம்மா செத்துப் போனாள்.

மனைவி இறந்து போனதைக் காரணமாய் வைத்து, அவ்வப்போது குடிக்கும் அப்பா துக்கம் தாளாமல் குடிப்பதாய்ச்சொல்லி முழுநேர குடிகாரரானார்.

அப்பாவின் சம்பளத்தின் பெரும்பகுதி டாஸ்மாக்கிற்குச் சென்றது. குடித்துவிட்டு அப்பா தள்ளாட வருமானம் போதாமல் குடும்பம் தள்ளாடியது.

ஏழு வயது தம்பியையும், நாலு வயது தங்கச்சியையும் பார்த்துக் கொள்ளும் கடமை குருமூர்த்திக்கு வந்து சேர்ந்தது.

வீட்டு வேலையையும் செய்து கொண்டு தம்பி தங்கையையும் கவனித்துக் கொண்டு பள்ளிக்குச் செல்வதும் பாடம் படிப்பதும் இயலாமல் போனது குருமூர்த்திக்கு.

அத்தோடு வருமானத்தையும் அதிகமாக்கும் தேவையும் இருந்ததால், படிப்பை ஒன்பதாம் வகுப்பைக்கூட முடிக்காமல் நிறுத்திவிட்டு டூவீலர் பழுது பார்க்கும் கடைக்கு வேலைக்குச் சென்றான்.

அப்பா குடும்பச் சுமைகளை இவன் தோளில் மாற்றி விட்டு ஆபீஸ் செல்வதும் மீதிநேரத்தில் தண்ணியடிப்பதுமாக நிம்மதியானார்.

பதினான்கு வயதில் ஸ்பேனரும் ஸ்க்ரூ டிரைவரும் நட்டும் போல்ட்டும் கிரீஸும் தொட்டு விளையாட ஆரம்பித்த கரங்கள், தம்பி குமார் கம்ப்யூட்டர் இஞ்சினீயரிங் படிப்பை முடித்து பி.இ., பட்டம் வாங்கும் வரை சளைக்கவேயில்லை.

லோன் வாங்கி தனியாய் டூவீலர் ரிப்பேர் கடை வைத்து கடுமையாக உழைத்தான். தம்பியை பி.இ., பட்டம் வாங்க வைத்து நிமிர்ந்தபோது குருமூர்த்தி, முப்பது வயதைத் தொட்டிருந்தான்.

தம்பி குமார் ஐ.டி. கம்பெனியொன்றில் கைநிறைய சம்பளத்தில் வேலைக்குப் போனான். வேலைக்குப் போன வேகத்தில் தன்னோடு கல்லூரியில் படித்த தனக்குப் பிடித்தப் பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு சென்னைக்குத் தனிக்குடித்தனம் போனான்.

தம்பி மனைவி ஏற்கெனவே பணக்காரக் குடும்பம். அத்தோடு ஐடி துறையில் வேலை. சம்பளமோ சம்பளம்.

அவள் கிரீஸும் எண்ணையும் அழுக்குமான சட்டையும் பேண்ட்டும், கைகளுமாய் நிற்கும் கணவனின் அண்ணனை மதிப்பாளா என்ன?

அவள் இவனின் வீட்டுப் பக்கம் வருவதே இல்லை. மனைவி எவ்வழியோ அதுவே தன் வழியாய் நினைத்து விட்டான் தம்பி குமாரும்.

தங்கை அனு பி.எஸ்.ஸி., கடைசி வருடம்.

கை, கால் விழுந்து மூன்று மாதம் படுக்கையில் கிடந்த அப்பா சண்முகம் பணி ஓய்வு பெற ஆறுமாதம் இருக்கையில் காலமாகி விட, கடைசி வருடப் படிப்பை முடித்தவுடன் தங்கை அனுவுக்கு தந்தை சண்முகம் அரசுத்துறையில் சர்வீஸில் இருந்தபோது இறந்ததால் கருணை அடிப்படையில் அரசு உத்தியோகம் கிடைத்தது.

அவளின் சம்பளம் அவளின் திருமணத்திற்காக வங்கியில் மொத்தமாய் சேமிக்கப்பட்டது. குடும்பத்தை ஓட்டவும் தம்பியின் படிப்புக்காகவும் உழைத்த குருமூர்த்தி, தங்கையின் திருமணத்திற்காக பணம் சேர்க்க உழைக்க ஆரம்பித்தான்.

தங்கையின் சம்பளத்தால் மட்டும் அவளுக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்றால் அவளுக்கு கல்யாணம் முடிய முப்பது வயதாகிவிடும் என்பது குருமூர்த்தியின் பயம்.

நாளைக்கே தங்கச்சிக்குத் திருமணமாகி அடுத்தடுத்து அவள் பிறந்த வீட்டுக்கு வரும் விசேஷங்கள் வந்தால், அவற்றை நிறைவேற்ற ஒரு பெண் துணை இல்லாவிட்டால் சிரமமாகி விடுமேயென்று ஒரு ஏழைப்பெண்ணாய் பார்த்து திருமணம் செய்து கொண்டான். மனைவி குணவதியாய் அமைந்தது அவன் அதிஷ்டமே.

வசதியான பிள்ளை வீட்டார் தாமாகவே வந்து அனுவைப் பெண் கேட்க அனுவுக்கும் விருப்பமிருக்க தன் சக்திக்கு மீறி செயலில் இறங்கினான் குரு. கடன் வாங்கிக் கல்யாணம்.

கடன் கேட்டால் பணம் கிடைக்கும் ராசி மட்டும் அவனுக்கு நன்றாகவே இருந்தது.

கடனை அடைக்க இந்த ஜன்மம் முழுதும் உழைத்தாலும் அடைத்துவிட முடியுமா என்பது அவனுக்கே சந்தேகமாகத்தான் இருந்தது.

தம்பி குமார், தங்கையின் திருமணத்திற்குத் தன் பங்காய் வெறும் இருபதாயிரம் தந்துவிட்டு கடமையிலிருந்து கழண்டு கொண்டான்.

தங்கை அனுவின் கல்யாணம்.

கல்யாண மண்டபத்தில் நிற்க நேரமின்றி, ஒவ்வொன்றாய்ப் பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருந்தார்கள் குருவும் அவன் மனைவி சுமதியும்.

சம்மந்தி வீட்டாரின் தேவைகளை எந்தக்குறையுமில்லாமல் செய்வதில் மிகுந்த கவனத்தோடு இருந்தார்கள்.

காலை முகூர்த்த நேரத்திற்கு அரைமணி மணிக்கு முன்னர் கல்யாண மண்டபத்திற்கு ஆடிக்காரில் அம்சமாய் வந்திறங்கினார்கள் குமாரும் அவன் மனைவி சித்ராவும்.

இப்போது மேடையில் அமர்ந்திருந்த மாப்பிள்ளையையும் மணப்பெண்ணையும் பார்த்துக் கொண்டிருந்த அங்கிருந்த அத்தனை பேரின் கண்களும் குமாரையும் சித்ராவையும் மொய்க்கத் துவங்கின.

சித்ரா கட்டியிருந்த விலையுயர்ந்த பட்டுப்புடவையும் கழுத்திலும் கைகளிலும் விரல்களிலும் ஜொலித்த தங்க வைர நகைகளும் அனைவரையும் கிறங்க அடித்தன.

சம்மந்தி வீட்டுக்காரர்கள் தாமாகவே அவர்கள் இருவரிடமும் வலியச் சென்று அறிமுகம் செய்து கொண்டனர்.

குமாரிடம் ஓடிவந்தான் குரு. “குமாரு ஏண்டா இப்பதா வருவியா? இது நம்ம தங்கச்சி கல்யாணம்டா” என்றான் உரிமையாய்.

அவன் பேச்சை சட்டையே செய்யவில்லை சித்ரா.

கவலையும் அதீதவேலையும் தூக்கமின்மையும் குருவை மிகவும் களைப்படையச் செய்திருந்தது. கசங்கிய வேட்டியும் சட்டையும் எண்ணை வழியும் முகமும் சோர்வடைந்த கண்களும் முழங்கையில் தொங்கிய மஞ்சப்பையுமாய் அவனின் தோற்றம் மிகவும் எளிமையாய் இருந்தது.

இதே நிலையில்தான் இருந்தாள் குருவின் மனைவி சித்ராவும். சாதாரண பேன்ஸி புடவை கழுத்தில் மஞ்சள் கயிறும் கவரிங் செயினும் கைகளிலும் கவரிங் வளையல்களுமாய் சாதாரண தோற்றத்தில்.

“சித்ரா வா, குமார் தம்பி வாங்க” என்றாள் சுமதி இருவரையும் பார்த்து. முகத்தைத் திருப்பிக் கொண்டாள் சித்ரா.

சொந்தத் தங்கையின் திருமணம் என்று குமாரோ, நாத்தனார் திருமணமென்று சித்ராவோ நினைத்ததாகத் தெரியவில்லை.

தெரிந்தவர்கள் வீட்டுத் திருமணத்திற்கு வந்ததுபோல் நினைத்து தாலி கட்டும் வரை நாற்காலியில் அமர்ந்திருந்துவிட்டு முதல் பந்தியில் அமர்ந்து மிகநாசூக்காய் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினார்கள்.

அனு அப்போதுதான் கைபிடித்த, தாலிகட்டிய கணவனை அழைத்துக் கொண்டு “சின்னண்ணா குமாரண்ணா, சின்னண்ணீ” என்றபடி குமாரிடம் ஓடிவந்தாள்.

பணக்கார தோற்றத்தோடு அம்சமாய் மிதப்பாய் நின்று கொண்டிருந்த தனது சின்னண்ணாவையும் நகைக் கடையே வந்து நிற்பதைப் போல் ஜொலித்துக் கொண்டிருந்த சித்ரா அண்ணியையும் பார்க்கப் பெருமையாய் இருந்தது அனுவுக்கு.

வாயெல்லாம் பல்லாய் தன் கணவனுக்கு குமார் அண்ணாவையும் சித்ரா அண்ணியையும் அறிமுகப்படுத்தி வைத்து காலில் விழுந்தாள்.

பெரியஅண்ணன் குரு, பெரிய அண்ணி சுமதி இருவரின் காலில் விழுந்தாலும் அது வெறும் சம்பிரதாயமாகவே இருந்தது.

இந்த அண்ணணும் அண்ணியும் தானே இப்படியோர் வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர்கள் என்ற எண்ணம் அனுவின் மனதில் இருந்ததாகத் தெரியவில்லை.

அனு புகுந்தவீடு சென்றாகி விட்டது.

தனது ஓரகத்தி சித்ராவை அனு, ‘சின்னண்ணி சின்னண்ணி’ என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியதையும், தன்னை மதிக்கவேயில்லை என்பதையும் நினைத்து நினைத்து வருத்தப்பட்டு கணவனிடம் புலம்பித் தீர்த்தாள் சுமதி.

தன் தங்கை அனு குமாரையே ‘சின்னண்ணா சின்னண்ணா’வென்று அவனுக்கே மதிப்பு வைத்துப் பேசியதைப் பார்த்து தன் கணவன் மனதிற்குள் எவ்வளவு வருந்தினானென்பதை சுமதி அறியாமலில்லை.

இரண்டு நாட்கள் வருத்தமும் மௌனமாயும் போயிற்று. மூன்றாம் நாள் “சுமதி” என்று அழைத்தான் குருமூர்த்தி

“சொல்லுங்க”

“அனுவையும் மாப்பிள்ளையையும் விருந்துக்கு அழைக்கனுமில்ல”

“க்கூம்..”

“ஒன்னோட வருத்தம் புரியுது சுமதி, ஆனாலும் நம்ம கடமைய நாம சரியா செஞ்சுடனுமில்ல..”

“ஏன்? ஒங்க தம்பியும் அவுரு பொண்டாட்டியும் அனுவையும் அவ புருஷனையும் அழைச்சு விருந்து வச்சி மரியாத செய்யட்டுமே”

“அனு நடந்துகிட்ட விதம் தப்புதான், இல்லேங்கல.. அதுக்காக நாம விட்டுட முடியாதில்ல”

“அது சரி என்ன இருந்தாலும் உங்க தங்கச்சியாச்சே விட்டுக் குடுப்பீங்களா? என்னவோ செய்யுங்க. இன்னும் உங்களுக்கு பட வேண்டிய அனுபவம் நிறைய இருக்கு. ஆனா ஒன்னு அவுங்கள அழைக்கல்லாம் நா வரமாட்டேன். போதும் பட்ட அவமானம். நீங்க வேணா போங்க”

“சரி ஒனக்கு உடம்பு சரியில்லன்னு எதாவது காரணம் சொல்லிடறேன். ஆனா அவுங்க இங்க வரும்போது எந்த வருத்தத்தையும் வெளிக்காட்டாத சுமதி. சரியா?”

“ம்…”

உடனேயே தங்கை அனுவுக்கு மறுநாள் விருந்துக்கு அழைக்க வருவதாக ஃபோன் செய்தான்.

சொன்னபடி மறுநாள் பழங்கள், பூக்கள், வெற்றிலை, பாக்கு, ஸ்வீட்டு, காரம் வாங்கிக் கொண்டு வந்தவாசியிலிருந்து கும்பகோணத்திலிருக்கும் தங்கச்சி அனுவின் வீட்டுக்குப் போய் சாத்தியிருந்த வாசல் கதவின் முன் குரு நின்ற போது, உள்ளிருந்து அனு யாருடனோ ஃபோனில் பேசிக் கொண்டிருப்பதும் அந்த பேச்சில் தன் பெயர் அடிபடுவது கேட்டு சட்டெனக் கதவைத் தட்டாமல் நின்றான்.

“குமாரண்ணா” என்று விளித்து தங்கை பேசுவதிலிருந்து தம்பி குமாரோடு அனு பேசுவது புரிந்தது.

“குமாரண்ணே, குரு அண்ணன் என்னையும் இவரையும் வந்தவாசிக்கு விருந்துக்கு வரும்படி அழைக்க இன்னிக்கி இங்க வர்ரதா நேத்து ஃபோன் பண்ணிச்சண்ணே. ஆனா அங்க போக யோசனையா இருக்குண்ணே. வீடா அது? ஒரு சோஃபா உண்டா? ஏசி உண்டா? புறா கூடுமாதிரி வீடும், இலவச டிவியும் ச்சே..

அண்ணனும் அண்ணியும்தான் கெத்தா இருக்காங்களா? சொல்லக் கூடாது, அண்ணியோட பொடவையும் கவரிங் செயினும் வளையலும் என் வீட்டுக்காரற அங்க அந்த வீட்டுக்கு அழச்சிக்கிட்டுப் போகவே வெக்கமா இருக்குண்ணே.

இவங்கள்ளா எத்தினி வசதியானவங்க. இவர் போய் அங்கெல்லாம் அந்த வீட்டுலல்லாம் தங்க முடியாதுண்ணே. அதுனால சின்னண்ணே, நாங்க சென்னைக்கு ஒங்க வீட்டுக்கு விருந்துக்கு வரோம்ணே”

தங்கை அனுவின் பேச்சைக்கேட்டு அப்படியே அதிர்ந்து போனான் குரு. பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை இதயத்தில் செருகினாற்போல் துடித்துப் போனான்.

மனம் தவித்தது.. கண்களிலிருந்து கண்ணீர் கட்டுப்பாடின்றி கன்னங்களில் இறங்கியது. உடம்பு நடுங்கியது. வேதனையும் வருத்தமும் நெஞ்சைக் கூறுபோட்டன. மேற்கொண்டு நடக்கும் சம்பாஷணையைக் கேட்கப் பிடிக்காமல் அப்படியே திரும்பி படியைவிட்டு இறங்கி வீதிக்கு வந்தான்.

காஞ்சிபுரம் செல்லும் இரண்டு மணி பஸ்ஸிலேறி அமர்ந்தான். மனம் ஆற்றாமையால் தவித்தது. அப்போது ஒலித்ததுதான் “அம்மம்மா தம்பியென்று நம்பி அவன் உன்னை வளர்த்தான். தாயென்றும் தந்தையென்றும் தன்னை நினைத்தான். அது உனக்காக வாழ்ந்த உள்ளமல்லவோ.. அம்மம்மா…” என்ற பாடல்.

‘அம்மா இறந்தபோது அனுவுக்கு வயது நாலு. தாயில்லாத குறை தெரியாமல் அனுவை பதினான்கே வயதான தான் எப்படி பாராட்டி சீராட்டி வளர்த்து டிகிரி படிக்க வைத்து, கருணை அடிப்படையில் அரசு வழங்கும் வேலையை வாங்கித் தந்து, மூன்று லட்சம்போல் கடன் வாங்கி திருமணத்தை முடித்து கொஞ்சமும் நன்றியின்றி அண்ணன் என்ற எண்ணமுமின்றி எப்படிப் பேசி விட்டாள்.

அண்ணனின் ஏழ்மையை எப்படி இழிவாய்க் கூறி கேவலப் படுத்தி விட்டாள். தன்னை மட்டுமல்ல தான் பிறந்து, வளர்ந்து, விளையாடி திருமணம் ஆகும் வரை வாழ்ந்த வீட்டையுமல்லவா குறைவாய் மதிப்பிட்டுக் கேவலமாய் பேசி விட்டாள்.

மனம் வலித்தது குருவுக்கு. தம்பி குமார் அவன் மட்டும் என்னவாம்? அவனையும் வளர்த்து ஆளாக்கி கடன் வாங்கி பி.இ., படிக்க வைத்து அவனும்தானே நம்மை ஆளாக்கிய அண்ணணென்று நினைக்காமல் கொஞ்சமும் தன்னை மதிக்காமல் இருக்கிறான்.

அவன் படிப்புக்காக வாங்கிய கடன் இன்னும் ரெண்டு லட்சம் மீதமிருக்கிறதே இவ்வளவு பணக்காரனாக இருக்கிறானே! தன் படிப்புக்காக வாங்கிய கடனை தானே அடைக்க முன் வந்தானா?

நன்றியில்லாத தம்பி தங்கைக்காக தன் தலை மீதிருக்கும் ஐந்து லட்சம் கடன் இப்போது இமயமலை அளவுக்குச் சுமையாகத் தெரிந்தது.

கண்கள் கலங்கியிருக்க, வருத்தமும் வேதனையுமாய் வீடு வந்து மௌனமாய் அமர்ந்திருந்த கணவனை வேதனையோடு பார்த்தபடி நின்றிருந்தாள் சுமதி.

“கலங்காதிங்க, இப்பவாச்சும் தெரிஞ்சிச்சே, தம்பி தங்கைங்க எப்பிடீன்னு ஆனா ஒன்னுங்க ஒங்க தம்பி குமாரு, ஒங்க தங்கச்சியயும் மாப்ளயையும் விருந்துக்கெல்லாம் அழைக்க மாட்டாரு.

அதுவும் தம்பி பொண்டாட்டி ஒத்துக்கவே மாட்டா. எங்க இதுக்கெல்லாம் கூப்பிட்டா அடுத்து வளைகாப்பு வரும். பிரசவத்துக்கு அழைக்கணும்.

அதுக்கடுத்து பொறக்கற புள்ளைக்கு காது குத்து, பேரு வைக்கணும்னு அடுத்தடுத்து எல்லாத்துக்கும் சீரெடுக்கனும். இதுலெல்லாம் மாட்டிக்கக் கூடாதுன்னு அவுங்க யோசிப்பாங்க.

நீங்கன்னா பாருங்க நாளை காலேல ஒங்க தங்கச்சி ‘ஏண்ணே.. நேத்தே அழைக்க வரேன்னீங்க. வல்ல, ஃபோனும் பண்ணல. என்னிக்கு வரீங்கண்ணேன்னு’ கேக்கும் பாருங்க. நீங்களும் ‘தங்கச்சீ வரேந்தங்கச்சீன்னு அப்டியே பாசமழ பொழிவீங்க. இது நடக்குதா இல்லையா பாருங்க.

எல்லா என் தலவிதி. கேவலப்படுத்துறவங்களக் கூப்ட்டு ஒறவாடனும்னு. தெரியாமலா பெரியவங்க சொல்லுவாங்க. கூடப்பொறந்தவங்க இருக்குற குடும்பத்து மூத்த புள்ளய கல்யாணம் பண்ணிக்கிறதவிட ஒருபொண்ணு வயித்துல பாறாங்கல்ல கட்டிக்கிட்டு பாழுங் கெணத்துல விழுந்து சாவலாம்ன்னு” மூக்கைச் சிந்தினாள் சுமதி.

சுமதி சொன்னதே நடந்தது. காலை எட்டரை மணிக்கு அண்ணனுக்கு ஃபோன் செய்து அப்படியே உருகி உருகிப் பேசினாள் அனு.

“அண்ணே எப்டீண்ணே இருக்கீங்க. அண்ணி எப்டீண்ணே இருக்காங்க? எப்பண்ணே இங்க வரீங்க? நேத்தே வரதா சொன்னீங்க. ஏன்ணே வல்ல. இன்னிக்காச்சும் வருவீங்களாண்ணே மதியமே வந்துடுவீங்கதானே?”

ஸ்பீக்கரில் போட்டிருந்ததால் அனு பேசுவது சுமதிக்குத் தெளிவாகக் கேட்டது. கணவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என குருவின் முகத்தையே பார்த்தாள்.

“ம்..தங்கச்சீ, நல்லா இருக்கியாம்மா! மாப்ள நல்லாருக்காறா? இங்க நானும் அண்ணியும் சௌக்கியம்மா. நேத்து முக்கியமான வேல இருந்துச்சு. அதுனால வரமுடியல. இன்னிக்குக் கொஞ்சம் டயர்டா இருக்கும்மா. நாளைக்குக் கட்டாயம் ஒன்னையும் மாப்ளயையும் அழைக்க கும்பகோணம் வருவேம்மா. கவலயே படாத! சரியா?”

ஃபோனை வைத்துவிட்டு, “சுமதி, தப்பா நெனச்சுக்காத. உறவுகள்னு இருந்தா உரசல்களும் மனவருத்தங்களும் இருக்கதான் செய்யும்.

அதுக்காக நாம செய்ய வேண்டிய கடமையச் செய்யாம நகர்ந்துட முடியாது. அனுவ நானும் அழைக்காம தம்பியும் அழைக்காம போனா அவுளுக்கு மாமியார் வீட்டுல மதிப்போ மரியாதையோ இருக்குமா? அவ வாழ்க்கையே கேள்விக்குறி ஆயிடாது? அதுனால” என்று சொல்லிக் கொண்டே சுமதியைத் திரும்பிப் பார்த்தான் குரு.

கையில் பெட்டியும் தோளில் ஹேண்ட்பேக்குமாய் வாசலை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் சுமதி.

“சுமதி… சுமதி… இங்க பாரு… நான் சொல்றதக் கேளேன்.. ப்ளீஸ் சுமதி..” மனைவியை சமாதானம் செய்ய அவள் பின்னால் ஓடினான் குரு.

பாவம் குரு.

ஒரு மெழுகுவர்த்தியால், தான் கரைவதை விட வேறு என்ன செய்துவிட முடியும்?

காஞ்சி. தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்
கைபேசி: 9629313255