கானெக்கானெ மலையாளப் படம் விமர்சனம்

கானெக்கானெ மலையாளப் படம் திரைப்பட வரலாற்றின் சிறந்த படங்களில் ஒன்று எனக் கருதத் தக்கது.

சில குற்றவுணர்வுகள், மலரும் மலர்களனைத்தின் மணத்தை மாற்றி விடும் தன்மையுடையவை.

எல்லா வெளியிலும் அதன் வண்ணம் தெரிவதைப் போல், எண்ணி எண்ணிப் பயந்து முழுதும் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் ஆமையாகிப் போகிறது வாழ்க்கை.

சில கணப்பொழுது நிகழ்வுகள் வாழ்வைப் புரட்டிப் போட்டு விடுகின்றன. சொல்லமுடியாத குற்றவுணர்வுகள் எங்கும் வியாபித்து, உலகின் வண்ணத்தையே மாற்றுகின்றன.

வாழ்க்கை சரியான பாதை தவிர்த்து, அதளபாதாளத்தை நோக்கிய பயணமாகி, பாரங்களின் முழு வடிமையாகி விடுகின்றது.

ஆசைகள் தூரங்களை விழுங்குகின்றன. இன்றே அனுபவித்து விட மனம் குதுகலமாகி நீளுகின்றது.

எல்லாவற்றையும் அடைய முடியா ஏக்கம், சிற்சில காரியங்களுக்கு அடித்தளமாகி, பிரமாண்ட வீட்டைக் கட்டி விடுகிறது.

இவைதான் கானெக்கானெ படத்தின் உள்ளேயிருக்கும் உணர்வுகள். மொத்த உணர்வுகளின் தெறிப்புகள் தான் எங்கும் தாளமிட்டுக் கொண்டிருக்கின்றன.

பயமும், குற்றவுணர்வும், பழிவாங்கலும் மும்முனைகளில் இருந்து ஆட்டம் போடுகின்றன. பார்க்கப் பார்க்க நமக்குள்ளிருக்கும் குற்றவுணர்வுகள் தலைதூக்குகின்றன.

படம் பார்க்கும்போது, ஒவ்வொரு கதாபாத்திரம் பேசும் போதும் அப்பாத்திரத்தின் வலி நம்மைப் பெரிதும் தாக்குகின்றது.

எத்தனை கொடிய வலி அது; கால் முறுக்கி உடல் முழுவதும் வியாபித்து மூச்சைத் திணறடிக்கும் வலி அது.

ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் காட்சிகள் தானிவை. சிறு வட்டத்திலும் சிறு வட்டம். இங்கு நடக்கும் வாழ்க்கைப் போராட்டங்களைப் போன்றது தான் உலகம் என்றால், உலகம் முழுவதும் எண்ணவே முடியாத இவை எதைச் சுற்றி இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

அடேயப்பா… உணர்வுகள் எத்தன்மையானது?

படத்தின் கதை

ஐ.டி நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கின்றார் கதாநாயகன் ஆலன் (டோவினோ தாமஸ்). இவன் மனைவி விபத்து ஒன்றில் இறந்து விடுகிறாள்.

ஒருமகன் இவர்களுக்கு. மகனுக்காக மறுமணம் செய்து கொள்கின்றான் மாமனாரின் சம்மதத்துடன்.

பேரனைப் பார்க்கச் செல்லும் தாத்தா, தன் மகள் இருந்த இடத்தில், இன்னொருத்தியைப் பார்க்கும் பொழுதெல்லாம், மகளின் நினைவுகள் வந்து வாட்டுகின்றன.

மருமகன் எதார்த்தமாக இருக்கின்றான். இரண்டாவது மனைவியாக வந்த ஐஸ்வர்ய லட்சுமியையும், மருமகனையும் விட்டு விலகியே இருக்கிறார் மாமனார் பால் மத்தை (சுராஜ் வெஞ்சாரமூடு).

ஒரு சில ஆண்டுகள் கழிகின்றன. மாமனார் பால் மத்தைக்குச் சந்தேகங்கள் வலுக்கின்றன. சில தகவல்கள் திடுக்கிட வைக்கின்றன.

தன் மகளின் விபத்து இயல்பானதா? அல்லது ஏற்படுத்தப்பட்டதா? என ஆராய ஆரம்பிக்கிறார்.

தாசில்தாராக இருக்கும் அவர், பத்து நாட்கள் விடுமுறை போட்டுவிட்டு, விபத்து நடந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள விடுதியில் தங்கி ஆராய்கிறார்.

இவரின் நடவடிக்கைகள், மருமகன் டோவினோக்குக் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன.

எனவே, மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார். இதனால், கர்ப்பமுற்று இருக்கிற தன் இரண்டாவது மனைவியிடமும் பேசாமல் பைத்தியம் பிடித்ததைப் போல் வாழ்கிறார்.

கொஞ்சம், கொஞ்சமாக விபத்தில் இறந்த மகளின் சாவு எப்படிப்பட்டது எனத் தெரிகிறது சுராஜ்க்கு.

ஒருசமயத்தில், மருமகன் உண்மையைக் கூறுகிறான். ”மனைவியின் சாவுக்கு நானும் ஒருவிதத்தில் காரணம்தான்” என்கிறான்.

அதற்குப் பிறகுப் பழி தீர்க்கும் படலம் ஆரம்பிக்கின்றது.

“பேரனைப் பத்து நாளில் என்னிடம் கொடுத்து விடு. உன்னை வாழ விடமாட்டேன்.” என்கிறார் சுராஜ்.

பேரனோடு இருப்பதற்காக மருமகன் வீட்டில் தங்குகிறார். இது மேலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

இரண்டாவது மனைவி சினேகா (ஐஸ்வர்யா லெட்சுமி), தன் கணவனுக்கும் அவரது மாமனாருக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை உணர்ந்து, குழந்தை பெற்றவுடன் தன் தந்தை வீட்டுக்கே செல்லுவதாக முடிவெடுக்கிறாள்.

படத்தின் நுணுக்கம்

இப்படியாக, மூன்று பேரின் உணர்வோட்டங்களே படம் முழுவதும் வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன.

ஒவ்வொருவரும் தன் நிலை சரியானதே என்பதாக, அவரரவர்கள் அதை நியாயப்படுத்துவதற்கு முயல்கின்றனர்.

உண்மையில், மூன்று கதாபாத்திரங்களும் உலகிலுள்ள அனைவருக்குமான குறியீடுகளேயாவர்.

பெரும்பான்மை மக்களுக்கு, தாம் செய்யும் எல்லாச் செயல்களுக்கும் ஒரு நியாயம் கற்பிக்கும் குணமுண்டு. அதிலிருந்து வெகுவாக யாரும் பின் வாங்கிடுவதில்லை.

இங்குதான், பிரச்சனை விஸ்வருபம் எடுக்க‌ ஆரம்பிக்கும். முரண்பாடுகளும். மேலெழுந்த தன்முனைப்பும் வேறுவேறு தளங்களிலிருந்து பன்முனைப் போட்டிகளை மிகுந்த ஆளுமையுடன் நடத்து விக்கும்.

அதை இப்படத்தில் முறியடித்து மூன்று பேரும், தான் செய்தது தவறாக இருக்கலாம் எனத் தன்னளவில் குற்றவுணர்வு மேலிட, விலகிக் கொள்கின்றனர். தனக்குத் தானகவே தண்டனை கொடுத்துக் கொள்கின்றனர்.

குற்றவுணர்வைப் பொறுத்தவரை ‘இதுவரை மனிதனை ஆட்டிப் படைத்த நோய்களில் படு மோசமானது குற்றவுணர்வே’ என்கிறார் ஜெர்மானிய தத்துவ ஞானி ஃபிரிட்ரிக் நிக்.

கிறிஸ்துவப் புனித நூலான பைபிளிலும் குற்றவுணர்வை நீக்குதல் குறித்துப் பல வசனங்கள் உள்ளன.

‘குற்றத்தை ஒப்புக் கொள்வது பாதிக்கப்பட்டவரும் பயனடைய உதவலாம். ஏனெனில் அது, அவ்வளவு துன்பத்தை ஏற்படுத்தி விட்டோமே என வருத்தப்படுமளவிற்குக் குற்றம் செய்தவர் தன் மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதைப் பாதிக்கப்பட்டவருக்கு உணர்த்துகிறது’ என சாமுவேல் 11:2-15 வசனம் கூறுகிறது.

படத்தின் முடிவு

குற்றம் புரிந்தோம் எனும் டோவினோவும், இரண்டாவது மனைவியும் சுராஜ்ஜிடம் மண்டியடுகின்றனர். மன்னித்தாரா சுராஜ் என்பது தான் படத்தின் முடிவு.

அவசரகதியில், காதலியால் நிர்பந்தப் படுத்தப்பட்ட டோவினோ, தன் மனைவி அடிபட்டுக் கிடப்பதைப் பார்த்தும், பார்க்காததைப் போல் விரைந்து சென்று விடுகிறான்.

ஆனால், பாதித் தூரம் சென்று திரும்பி வந்து பார்க்கின்றான். அனைவரும் அடிபட்டவளை வண்டியில் எடுத்துச் செல்கின்றனர்.

நேரம் கடந்ததால் அவள் இறந்து விடுகிறாள். தான் முன்பே தூக்கிச் சென்றிருந்தால் அவளைக் காப்பாற்றி இருக்கலாம் என வருத்தப்டுகிறான்.

முதல் மனைவி இருக்கும் பொழுதே, நான் ஏன் டோவினோவைக் காதலித்தேன் என்பதையும், கொஞ்சம் கூட அவள் இறப்பதற்கு முயற்சி செய்யவில்லை, கற்பனையும் செய்யவில்லை என்பதாக இரண்டாவது மனைவி வருத்தப்படுகிறாள்.

இதற்குப் பழிவாங்கும் உணர்வோடு அலையும் மாமனார், ’கொல்வது நியாயம் தான்’ என அலைகிறார்.

ஆனால், கடைசியில், இருவரையும் மன்னித்துத் தனியாக மயக்கமுற்று கீழே விழுந்தவளைக் காப்பாற்றி நல்ல முறையில் குழந்தை பிறக்க உதவுவார்.

படத்தின் முடிவில், நீங்கள் நிம்மதியாக வாழுங்கள் என்று கூறிவிட்டு, அவர் தனிமைப்பட்டு எங்கோ சென்று விடுகிறார்.

அவரை இழக்கப் போகும் சோகம். மன்னித்த பெருந்தன்மை இவற்றை நினைத்து டோவினோ கதறி அழுகின்றான்.

படத்தின் சிறப்பு

கானெக்கானெ மலையாளப் படம் மூன்று கதாபாத்திரங்களில் பயணிக்கிறது. இசை ஒரு பக்கம் கதை சொல்கிறது. சிறுசிறு நினைவலைகளை அவ்வப்பொழுது படத்தின் இடை இடையே செருகி, சிறந்த எடிட்டிங் செய்யப்பட்டிருக்கிறது.

நடிப்பின் உச்சங்களைத் தொட்டிருக்கின்றனர் டோவினோவும், சுராஜும் ஐஸ்வர்யா லட்சுமியும், சிறிதுநேரமே வந்தாலும் மனதில் நிற்கும் ஸ்ருதி ராமச்சந்திரனும். உணர்வு நிலை வெளிப்பாட்டு உச்ச நடிப்பை இவர்களிடம் காண முடிகின்றது.

மனு அசோகனின் மாறுபட்ட இயக்கம் இப்படம். மனவுணர்வுகளை வெளிப்படுத்தும் இப்படத்தைச் சவாலாகவே செய்திருக்கிறார். நுணுக்கமான கதையம்சம் கொண்ட கதையிது; அழகாய் வெளிப்படுத்தியுள்ளார்.

மொத்தத்தில் கானெக்கானெ மலையாளப் படம், திரைப்பட வரலாற்றின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாகும் எனும் தகுதியைப் பெற்றுள்ளது என்பது மிகச் சரியாகும்.

படக்குழு

இசை: ரஞ்சின் ராஜ்

ஒளிப்பதிவு: ஆல்பி ஆண்டனி

படத்தொகுப்பு: அபிலாஷ் பாலச்சந்திரன்

கலை இயக்கம்: திலீப் நாத் ஆடை

வடிவமைப்பு: ஸ்ரேயா அரவிந்த்

நடிகர்கள்

சுராஜ் வெஞ்சாரமூடு – பால் மத்தாய்

டோவினோ தாமஸ் – ஆலன்

ஐஸ்வர்யா லட்சுமி – சினேகா ஜார்ஜ்

ஸ்ருதி ராமச்சந்திரன் – ஷெரின் பி. ஆலன்

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@admin

2 Replies to “கானெக்கானெ மலையாளப் படம் விமர்சனம்”

  1. திரைப்படங்கள் இன்றைக்கு வேறு தளத்திற்குச் சென்று விட்டன எனபதை இந்த விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. மலையாள இயக்குனர்கள் உலக சினிமாவைத் தொட ஆரம்பித்து விட்டனர். தமிழ்த் திரையுலகம் தொடுமா என்றால் சந்தேகமே.
    விமர்சகர்கள் அதிகமாக விமர்சிக்கத் தொடங்க வேண்டும். கருத்தையே தமிழ் உலகம் எழுத மறுக்கிறது.
    வளர்க திரைக்கலை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.