காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை ஆசிரியர் மாணவர்களிடம் கூறுவதை புல்புல் பூங்கொடி மரத்தில் அமர்ந்திருந்தபோது கேட்டது.

‘ஆகா, நாம் இன்றைக்கு பழமொழியைக் கேட்டுள்ளோம். பழமொழி பற்றி ஆசிரியர் வேறு ஏதேனும் தகவல்கள் கூறுகிறாரா? என்று பார்ப்போம்’ என்று மனதிற்குள் ஆர்வம்மிக கூர்ந்து கவனிக்கலானது.

ஆசிரியர் மாணவர்களிடம் “இப்பழமொழிக்கான விளக்கம் உங்களில் யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார்.

அதற்கு மாணவன் ஒருவன் எழுந்து “வாய்ப்புகள் கிடைக்கும்போது அதனை நாம் நமது நலனுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இதனுடைய பொருள்” என்று கூறினான்.

அதற்கு ஆசிரியர் “நீ சொல்வது சரிதான். சம்பாதிக்கும் காலம் என்பதும் காரியங்களை சாதிக்கும் காலம் என்பதும் சில குறிப்பிட்ட காலம் மட்டுமே என எண்ணும் சிலர் இப்பழமொழியைக் கூறுவர்.

இப்பழமொழி கூறும் உண்மையான பொருள் குறித்து நான் உங்களுக்கு விளக்கிக் கூறுகிறேன்.” என்று பழமொழிக்கான விளக்கத்தை ஆசிரியர் கூறுத் தொடங்கினார்.

போரடித்தல்

வயலில் விளைந்த நெற்பயிரினை அறுவடை செய்யும்போது, நெற்பயிரின் அடிப்பகுதியில் ஒருசாண் அளவிற்கு விட்டு அறுவடை செய்வர்.

பின் களத்து மேடுகளில் அறுத்த நெற்பயிரிலிருந்து நெல்மணிகள் தனியாக உதிர்ந்து விடுமாறு அடித்து பிரிப்பர். இதற்கு போரடித்தல் என்று பெயர்.

போரடித்து பிரிக்கப்படும் நெல்மணிகளுடன் தூசு, குறைந்த விளைச்சல் கொண்ட நெல்மணிகளான சாவி போன்றவையும் சேர்ந்து இருக்கும்.

போரடித்து வரும் நெல்லை காற்று வீசும்போது அள்ளி தூற்றுவர். இவ்வாறு தூற்றும்போது நல்ல நெல்கள் நேராக கீழேயும், தூசு, பதர் என்று சொல்லப்படும் விளைச்சல் குறைந்த நெல்கள் காற்றின் பிடியில் சிக்கி சற்றுத் தள்ளியும் விழும்.

நல்ல நெல்லினை இம்முறையில் எளிதில் பிரித்து எடுக்கலாம். இதுவே இப்பழமொழிக்கான நேடியான பொருளாகும். ஆனால் இந்தப் பழமொழிக்கு மறைமுகப் பொருள் ஒன்றும் உள்ளது.

 

 

உயிர் உள்ள போதே

‘காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா’ என்ற பாடல் வரிகளைக் கேட்டிருப்பீர்கள். காற்று என்ற ஒன்று இல்லாதிருந்தால் உயிர்கள் உயிர்வாழ இயலாது.

எனவே காற்று என்பது உயிர்களுக்கு மிகவும் அவசியம். இந்தக் காற்று உடலில் உட்சென்று வெளிவந்து தன் பணியை செய்யும் வரையே உடலில் உயிர் நிலைத்து நிற்கும். மாறாக உடலில் காற்று செல்லாத நிலை ஏற்பட்டால் அவ்வுடலைவிட்டு உயிர் நீங்கி விடும்.

உடலில் காற்று உள்ள வரையே மட்டுமே ஒரு மனிதனுக்கு வாழ்வு உள்ளது. அதற்குள்ளாக தான் தூற்றிக் கொள்ள வேண்டும்.

 

மனிதன் தேவையில்லாத கெட்டவற்றை ஒதுக்கிவிட்டு,  தேவையான நல்லவற்றை மட்டுமே கடைப்பிடித்து வாழ வேண்டும்.

இதை விளக்கவே நமது முன்னோர்கள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று கூறியுள்ளனர் என்று கூறினார்.

 

பழமொழி மற்றும் விளக்கத்தைக் கேட்டதும் புல்புல் பூங்கொடி நேரே காட்டின் வட்டப்பாறையை நோக்கிப் பறந்தது. அங்கே எல்லோரும் வழக்கமாகக் கூடியிருந்தனர்.

காக்கை கருங்காலன் “என் அருமைக் குழந்தைகளே உங்களில் யார் இன்றைக்கான பழமொழி பற்றிக் கூறப்போகிறீர்கள்?” என்று கேட்டது.

புல்புல் பூங்கொடி எழுந்து “தாத்தா நான் இன்றைக்கு ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்ற பழமொழி பற்றிக் கூறுகிறேன்” என்று தான்கேட்டது முழுவதையும் நன்கு விளக்கிக் கூறியது.

காக்கை கருங்காலனும் “குழந்தைகளே புல்புல் பூங்கொடி கூறிய விளக்கம் புரிந்ததுதானே. நாளை மற்றொரு பழமொழி பற்றிப் பார்ப்போம்” என்று கூறி எல்லோரையும் வழியனுப்பியது.

 இராசபாளையம் முருகேசன்     கைபேசி: 9865802942

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.