மனிதன் தன் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்தப் பயன்பட்டது மொழி ஆகும். எழுத்து மொழி, பேச்சு மொழி, செயல் மொழி என்று மொழியாளர்களும் மற்றும் ஒலியின் அளவை வைத்து அதை 1 மாத்திரை, 1/2 மாத்திரை என்று ஒலியிலாளர்களும் கூறுவதாக மொழி வரலாறு கூறுகிறது.
உலகில் உள்ள மொழிகளையெல்லாம்
உயர்வால் நானும் மதிக்கின்றேன்
தலைமைத் தன்மையை அவரவர் மொழிக்கு
சாற்றுபவர் தம்மைத் துதிக்கின்றேன்
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை நான் வாசித்த கவிஞர் உலகநாதனின் வரிகள் ஆகும்.
ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு உண்டு. ஆங்கிலம் என்றால் அது வியாபார மொழி. கன்னடம் என்றால் அது பழமையான மொழி. தெலுங்கு என்றால் அது சுந்தர மொழி. மலையாளம் என்றால் அது கவர்ச்சி மொழி. மேற்கூறிய அனைத்தும் கலந்ததுதான் தமிழ் மொழி.
கவிஞர்கள் மொழிக்கு செழுமை செய்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. தமிழுக்கு பாரதி தங்கக் கவிஞர். வங்காளத்திற்கு தாகூர் சிங்கக் கவிஞர். ஆங்கிலத்துக்கு ஷேக்ஸ்பியர் நாடகக் கவிஞர். சுரதா தமிழின உவமைக் கவிஞர். அழ.வள்ளியப்பா தமிழின் குழந்தைக் கவிஞர் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
தமிழும் கவிஞர்களும்
தமிழன்னை பல தவப்புதல்வர்களைப் பெற்றவள். அவளின் தலைமகன் கம்பன் என்றால் மிகையாகாது. கம்பனும் வள்ளுவனும் இளங்கோவும் பாரதியும் போற்றப்பட வேண்டியவர்கள்.
கம்பன் காப்பியக் கம்பன். பிறரை காப்பியடிக்காத கம்பன். எனவேதான் கம்பன் தமிழ் காப்பியத் தமிழ்.
ஒன்றே முக்கால் அடியால் உலகையே அளந்தவன் வள்ளுவன் என்றால் மிகையாகாது. ஓரு கவிதையாய் மேலே நான்கு வார்த்தைகள். கீழே மூன்று வார்த்தைகள். அதுதான் குறள். எடுத்துக்காட்டாக
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு நன்றாக யோசித்து செய்த பின்பு அதைப்பற்றி யோசிக்காதே என்று கூறுகிறார். இதற்கு யோசித்து முடிவெடுத்த பின்பு, பின் வாங்காதே என்றும் உரை எழுதலாம்.
இளங்கோவடிகளின் தமிழ் வாழ்வியல் தமிழ். பாரதியின் தமிழ் பாசத்தமிழ், பண்புத்தமிழ், பசுமைத்தமிழ், செந்தமிழ், இசைத்தமிழ், புதுமைத் தமிழ் என்று கூறலாம்.
காலத்தின் மாற்றம் நம் தமிழில் பல கவிஞர்களை உருவாக்கியது என்றால் அது உண்மை. மக்களின் சுவை, ரசனை, விருப்பம், வாழ்வியல் முறையின் மாற்றத்திற்கு ஏற்ப எல்லாம் மாறியது. அதற்கேற்ப திரைப்படமும் மாறியது.
திரைப்படப் பாடலாசிரியர்கள் மொழியை ஒலியில் விற்றுப் பிழைத்தார்கள்; பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இசையும் மொழியும்கூட விற்பனைப் பொருளாக மாறியது. அது ரசனை என்ற தீனிக்கு உணவாக மாறுகிறது. அந்த உணவை வாங்க இரசிகர்கள் பணம் செலவு செய்கிறார்கள். அந்த செலவு அவர்களுக்குப் புத்தாக்கத்தைக் கொடுக்கிறது.
தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களில் தடம் பதித்தவர்கள் பலர். தமிழ் மொழி என்னும் தேருக்கு வடம் பிடித்தவர்கள் சிலர். நான் வாசித்த மற்றும் நேசித்த கவிஞர்களை மட்டும் இங்கே கூறுகிறேன். சிநேகிதத்தோடு சில வார்த்தைகளாக அது நமக்குப் பயன் தரும்.
தமிழ் திரைப்படப் பாடலாசிரியர்களில் முன்னோடியனாவர்கள் உடுமலை நாராயணகவி, மருதகாசி, மாயவநாதன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி, புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, கவிஞர் நா.முத்துக்குமார், கவிஞர் பா.விஜய், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் அறிவுமதி, கவிஞர் தாமரை போன்றவர்கள் மக்கள் மனதில் ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
வாழ்வோடு வளமாக
மனதோடு மணமாக
கனவோடு நினைவாகக்
கவிஞர்கள் வாழ்கிறார்கள்!
ஒவ்வொரு கவிஞர்களைப் பற்றியும் அவர்களின் படைப்புகளைப் பற்றியும் அது சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும், எதிர்வரும் காலங்களில் கட்டுரையாகத் தரலாம் என்று திட்டமிட்டுள்ளேன்.
இதற்கு நீங்கள் தரவேண்டும் ஊக்கம்
அப்போதுதான் தீரும் என் ஏக்கம்
உங்கள் விமர்சனம் எனக்கு வரம்
அப்போதுதான் எனக்கு எழுத வரும்!
முனைவர் சொ.சிதம்பரநாதன்
பொருளாதாரத் துறைத்தலைவர்
இராசபாளையம் ராஜுக்கள் கல்லூரி
இராசபாளையம்
9486027221
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!