காளான் கிரேவி அற்புதமான தொட்டுக் கறியாகும். காளான் பெரும்பாலான சைவர்களின் பிரிய உணவு ஆகும். சுவையான காளான் கிரேவி செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காளான் – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 20 எண்ணம்
தக்காளி – 2 எண்ணம் (நடுத்தரமான பழுத்தது)
மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்
இஞ்சி – சுண்டு விரல் அளவு
பூண்டு – 2 எண்ணம்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் – ¼ மூடி (சிறியது)
மல்லி இலை – 3 கொத்து
மசாலா தயார் செய்ய
மல்லி விதை – 2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கசகசா – ½ டீஸ்பூன்
பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
பட்டை – சுண்டு விரல் அளவு
கிராம்பு – 4 எண்ணம்
முந்திரி – 6 எண்ணம்
அரிசி – 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2 எண்ணம் (பெரியது)
அன்னாசிப்பூ – 1 எண்ணம்
தாளிக்க
நல்ல எண்ணெய் – 3 டீஸ்பூன்
பட்டை – ¾ சுண்டு விரல் அளவு
கிராம்பு – 2 எண்ணம்
பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கீற்று
காளான் கிரேவி செய்முறை
காளானை நேராக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.
தேங்காயை விழுதாக்கிக் கொள்ளவும்.
மல்லி இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மல்லி விதை, மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, முந்திரிப் பருப்பு, அரிசி, மிளகாய் வற்றல் ஆகியவற்றை வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும்.
பாதி வறுத்த நிலையில் அதனுடன் கசகசாவைப் போட்டு வறுத்து மசாலாப் பொருட்களை ஆற வைக்கவும்.
மசாலாப் பொருட்கள் ஆறியதும் அவற்றை விழுதாக்கிக் கொள்ளவும்.
வாயகன்ற வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் ஊற்றி காய விடவும்.
அதனுடன் பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிதம் செய்யவும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தேவையான உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்கவும்.
இரு நிமிடங்கள் கழித்து அதனுடன் காளானைச் சேர்த்து வதக்கவும்.
காளான் வதங்கியதும் அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடி, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கிரேவி கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பினை சிம்மில் வைத்து அவ்வப்போது கிளறி விடவும். கிரேவியில் எண்ணெய் பிரிந்தும் அடுப்பினை அணைத்து விடவும்.
இதனுடன் தேங்காய் விழுதினைச் சேர்த்து நன்கு கிளறவும்.
நறுக்கிய மல்லி இலையைச் சேர்க்கவும்.
சுவையான காளான் கிரேவி தயார்.
இதனை பனீர் பிரியாணி, சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் சின்ன வெங்காயத்திற்குப் பதில் பெரிய வெங்காயம் சேர்த்து கிரேவி தயார் செய்யலாம்.