கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் கடவுள் என தனது ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர்.  அவர் இந்தியாவின் மிகச் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்.

24  வருடங்கள் இந்திய கிரிக்கெட் அணியில் தனது சிறப்பான‌ பங்கையளித்தவர்.

நாம் இக்கட்டுரையில் சச்சினின் வாழ்க்கை வரலாறு, அவரது கிரிக்கெட் பயணம் மற்றும் அவரது சாதனைகள் ஆகியவற்றைப் பற்றி பார்ப்போம்.

பிறப்பு

சச்சின் டெண்டுல்கர்  1973ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.

இவருடைய தந்தை பெயர் ரமேஷ் டெண்டுல்கர். இவரது தாயார் பெயர் ரஞ்னி.

இவரது தந்தை மராத்திய புதின எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். இவருடைய தாயார் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

இளமைப் பருவம்

சச்சின் மும்பை சாரதாஷ்ரம் பள்ளியில் சேர்ந்து தனது பள்ளிப்படிப்பை படித்தார். பள்ளியில் படிக்கும் போதே கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வத்துடன் விளங்கினார்.

மும்பையில் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் இவரும், இவர் நண்பர் வினோத் காம்ப்ளியும் சேர்ந்து விளையாடி 664 ரன்கள் எடுத்தனர்.

சச்சினின் பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கர் ஆவார். சச்சின் 1988இல் மாநிலங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் மும்பையின் சார்பாக விளையாடி 100  ரன்களை குவித்தார்.

சச்சின் 1995இல் திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவியின் பெயர் அஞ்சலி. இவருக்கு அர்ஜுன், சாரா ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

சச்சினின் கிரிக்கெட் பயணம்

சச்சின் 1989 ஆம் ஆண்டு, தன்  16ஆம் வயதில் கராச்சியில் நடந்த ‌இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக முதன் முறையாக ‌விளையாடினார். அதில்  24 பந்துகளில் 15 ரன்களை எடுத்தார்.

சச்சின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி  18,466 ரன்களை குவித்தார்.

இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு  15,921 ரன்கள் எடுத்தார்.

சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில்  100 சதம் அடித்த வீரர் சச்சின்.

முதன் முதலில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 ரன்கள் குவித்ததும் சச்சின்தான்.

சச்சின்  6 முறை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்.

சச்சினின் உலகக்கோப்பை கனவை 2011இல் தோனியின் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நனவாக்கியது. இவ்வாறு சச்சின் கிரிக்கெட்டில் பலசாதனைகளைப் படைத்துள்ளார்.

சச்சின் 2013ஆம் ஆண்டு நவம்பர் 15 இல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

சச்சின் பெற்ற விருதுகள்

கிரிக்கெட் கடவுள் சச்சின் அவர் படைத்த சாதனைகளுக்காக 1994இல் அர்ஜுனா விருதைப் பெற்றார்.

1997இல் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது சச்சினுக்கு வழங்கப்பட்டது.

1999இல் பத்ம ஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. மேலும் சச்சின் 2008இல் பத்ம விபூசண் விருதையும், 2013இல் பாரத ரத்னா விருதையும் பெற்றார்.

சச்சின் 2014ஆம் ஆண்டு தன் சுயசரிதையை “Playing It My Way” என்ற நூலாக வெளியிட்டார்.

கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் பல ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்து வருகிறார்.

இவர் பல கண்தான முகாம்கள் நடத்த உதவி வருகிறார். இவரின் கடின உழைப்பையும், மனஉறுதியையும் நாமும் பின்பற்றுவோம்.

பிரேமலதா காளிதாசன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.