குடல் அப்பள குழம்பு செய்வது எப்படி?

குடல் அப்பள குழம்பு அருமையான குழம்பு ஆகும்.

குடல் அப்பளம் தனியே கடைகளில் கிடைக்கும். இதில் சற்று அதிகம் உப்பினைக் கொண்டிருப்பதால் இதனைக் கொண்டு குழம்பு வைக்கும்போது உப்பின் அளவினைக் குறைத்துக் கொள்ளவும்.

சட்டென்று இதனை தயார் செய்து விடலாம். காய்கறிகள் இல்லாத சமயங்களில் இந்த குழம்பு உங்களுக்கு கை கொடுக்கும்.

குடல் அப்பளத்தைப் பொரித்து உண்ண முடியாது. ஆதலால் இது குழம்பு அப்பளம் என்றும் அழைக்கப்படுகிறது.

இனி எளிய வகையில் சுவையான குடல் அப்பள குழம்பு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

குடல் அப்பளம் – 20 எண்ணம்

சின்ன வெங்காயம் – 150 கிராம்

தக்காளி – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)

கொத்தமல்லி இலை – 2 கொத்து

உப்பு – தேவையான அளவு

மசாலா அரைக்க

தேங்காய் ‍ – 1/4 மூடி (பெரியது)

மசாலா பொடி ‍ – 1&1/2 ஸ்பூன்

கரம் மசாலா பொடி – 1/4 ஸ்பூன்

தண்ணீர் – சிறிதளவு

கடலை எண்ணெய் – அப்பளம் பொரிக்கத் தேவையான அளவு

தாளிக்க

நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்

கடுகு ‍ 1/2 டீஸ்பூன்

வெந்தயம் ‍ 1/4 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கீற்று

குடல் அப்பள குழம்பு செய்முறை

சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை அலசி சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

கொத்தமல்லியை அலசி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

தேங்காயை துருவிக் கொள்ளவும்.

மிக்ஸியில் துருவிய தேங்காய், மசாலா பொடி, கரம் மசாலா பொடி மற்றும் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

தேவையானவற்றை மிக்சியில் சேர்த்ததும்
விழுதாக்கியதும்

வாணலியில் கடலை எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், அதில் குடல் அப்பளங்களைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

பொரித்த அப்பளங்கள்

வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நல்ல எண்ணெய் ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிதம் செய்யும்போது

அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடிப் பதத்திற்கு வந்ததும் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி சேர்த்ததும்

தக்காளி மசிய வெந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவினைச் சேர்த்து ஒருசேரக் கிளறி, அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

மசாலா சேர்த்ததும்
தேவையான தண்ணீர் சேர்த்ததும்

ஒரு கொதி வந்ததும் அதில் பொரித்த அப்பளங்களைச் சேர்க்கவும்.

அடுப்பினை சிம்மிற்கு சற்று அதிகமாக வைத்துக் கொதிக்க விடவும்.

ஐந்து நிமிடங்கள் கழித்து மசால் வாசனை போகவும் அடுப்பினை அணைத்து விடவும்.

அடுப்பினை அணைத்ததும்

நறுக்கிய கொத்தமல்லி இலையை மேலே தூவி கிளறி விடவும்.

மல்லி இலை தூவியதும்

சுவையான குடல் அப்பள குழம்பு தயார்.

குறிப்பு

பொரித்த அப்பளம் தண்ணீரை உறிஞ்சி விடும். ஆதலால் மசாலுடன் சேர்க்கும் தண்ணீரின் அளவினை சற்று அதிகரித்துச் சேர்க்கவும். இல்லையெனில் குழம்பு மிகவும் கெட்டியாகி விடும்.

விருப்பமுள்ளவர்கள் மசாலா பொடிக்குப் பதில் மல்லிப் பொடி, சீரகப் பொடி, வற்றல் பொடி சேர்த்து குழம்பு தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்