குடைமிளகாய் கிரேவி அருமையான தொட்டுக்கறி ஆகும். ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் குடைமிளகாய் கிரேவியை செய்யும் முறை பற்றி இப்பதிவில் விளக்கியுள்ளேன்.
குடைமிளகாயைப் பயன்படுத்தி செய்யும் இக்கிரேவியை அனைவரும் விரும்பி உண்பர். இக்கிரேவி தயார் செய்ய எளிய பொருட்களையே பயன்படுத்தி உள்ளேன்.
இக்கிரேவி சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்.
இனி சுவையான குடைமிளகாய் கிரேவி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
குடை மிளகாய் – 300 கிராம் (2 எண்ணம்)
பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)
மல்லி இலை – 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
கஸ்தூரி மேத்தி – 1 ஸ்பூன்
தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நாட்டுச் சர்க்கரை – 1&1/2 டீஸ்பூன்
மசாலா தயார் செய்ய
பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)
தக்காளி – 3 எண்ணம் (நடுத்தர அளவு)
இஞ்சி – சுண்டு விரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 3 எண்ணம் (பெரியது)
மல்லிப் பொடி – 2 ஸ்பூன்
மிளகாய் பொடி – 1 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் பொடி – 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
தாளிக்க
நல்ல எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 எண்ணம் (பெரியது)
கறிவேப்பிலை – 1 கீற்று
குடைமிளகாய் கிரேவி செய்முறை
கிரேவி தயார் செய்யத் தேவையான வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து படத்தில் உள்ளபடி சரிவக வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
குடைமிளகாயை கழுவி விதையை நீக்கி அதனையும் படத்தில் உள்ளபடி சரிவக வடிவில் வெட்டிக் கொள்ளவும்.

மசாலா தயார் செய்யத் தேவையான பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
தக்காளியை கழுவி சதுரத்துண்டுகளாக்கவும்.
இஞ்சி மற்றும் வெள்ளைப்பூண்டினை தோல் நீக்கி ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து கடலை மாவினைச் சேர்க்கவும்.
அடுப்பினை சிம்மில் வைத்து கடலை மாவின் நிறம் மாறாமல் நன்கு வாசனை வரும்வரை வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து 3 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அதில் சரிவகமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாய் தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து குடைமிளகாய் முக்கால் பாகம் வேகும் வரை (குடைமிளகாயின் வாசனை நன்கு வரும்வரை) வதக்கி எண்ணெயை வடித்து எடுத்துக் கொள்ளவும்.

அதே எண்ணெயில் மசாலா தயார் செய்ய நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் கால் பாகம் வேகும்வரை வதக்கவும்.

பின்னர் அதனுடன் நசுக்கிய வெள்ளைப்பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

30 நொடிகள் கழித்து மல்லிப்பொடி, மிளகாய் பொடி, காஷ்மீரி மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை (தக்காளி நன்கு வெந்து மசிந்ததும்) வதக்கிக் கொள்ளவும். தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவையில்லை.


வதக்கிய கலவையை ஆற வைத்துக் கொள்ளவும்.
நன்கு ஆறிய பின்பு அதனை நன்கு விழுதாக்கிக் கொள்ளவும்.
வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெய் சேர்த்து அதில் சீரகம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.

பின்னர் அதனுடன் அரைத்த மசாலா விழுது, தேவையான உப்பு சேர்த்து ஒருசேர கலந்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும். அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.

அதனுடன் 3 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து ஒருசேரக் கிளறி 30 நொடிகள் கழித்து வறுத்து ஆற வைத்துள்ள கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.


பின்னர் அதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து உப்பினைச் சரி பார்த்துக் கொள்ளவும்.

மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து கஸ்தூரி மேத்தி இலைகளைச் சேர்த்து கைபொறுக்கும் சூட்டிற்கு லேசாக வறுக்கவும். இதனை வறுக்கும் போது அடுப்பினை சிம்மில் வைத்துக் கொள்ளவும்.
லேசாக கொதி வந்ததும் அதில் கரம் மசாலா சேர்த்து 30 நொடிகள் கழித்து வறுத்த கஸ்தூரி மேத்தி இலைகளை கைகளுக்கிடையே வைத்து நன்கு நசுக்கி பொடித்துச் சேர்த்து ஒருசேரக் கிளறவும்.


30 நொடிகள் கழித்து வதக்கிய குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து ஒருசேரக் கிளறி விடவும்.

30 விநாடிகள் கழித்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து கிளறி அடுப்பினை சிம்மில் வைத்து மூடிபோட்டு மூடி வேக விடவும்.

ஐந்து நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால் எண்ணெய் பிரிந்து குடைமிளகாயில் மசாலா சுவை இறங்கி இருக்கும்.

அடுப்பினை அணைத்து விட்டு கொத்தமல்லி இலையைத் தூவி விடவும்.
சுவையான குடைமிளகாய் கிரேவி தயார்.
குறிப்பு
குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை வதக்கும் போது அடுப்புத் தீயை முழுமையாக வைத்து வறுக்கும் போது குடைமிளகாய் மற்றும் வெங்காயம் கிரென்சியாக இருக்கும்.
குடைமிளகாய் மென்மையாக இருக்க குறைந்த தீயில் வைத்து குடைமிளகாயை வேக விடவும்.
விருப்பமுள்ளவர்கள் நாட்டுச்சர்க்கரைக்கு பதில் வெள்ளைச் சர்க்கரை பயன்படுத்தலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!