சிறுகிழங்கு வத்தல் செய்வது எப்படி?

சிறுகிழங்கு வத்தல் அசத்தலான சுவையுடன் கூடிய அருமையான வத்தல் ஆகும்.

சிறுகிழங்கு மார்கழி மற்றும் தை மாதங்களில் மட்டுமே கிடைக்கக் கூடிய சீசன் வகை கிழங்கு வகையைச் சார்ந்தது.

இதனை பதப்படுத்தி காய வைத்து வத்தல் செய்வதன் மூலம் வேண்டும் சமயங்களில் சிறுகிழங்கினை உண்ணலாம்.

மார்கழி, தை என்பது பனியுடன் கூடிய லேசான வெயில் காலமாதலால் சிறுகிழங்கு வத்தலை நன்கு உலர வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

திருநெல்வேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறுகிழங்கு வத்தல் மிகவும் பிரபலமான ஒன்று.

இனி சுவையான சிறுகிழங்கு வத்தல் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சிறுகிழங்கு – 200 கிராம்

மஞ்சள் பொடி – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கடலை எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

சிறுகிழங்கு வத்தல் செய்முறை

சிறுகிழங்கினை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து, கிழங்கில் உள்ள மண்ணினை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.

அலசிய சிறுகிழங்கு
அலசிய சிறுகிழங்கு

பின்னர் சிறுகிழங்கின் தோலினை நன்கு சீவி எடுத்துக் கொள்ளவும்.

எல்லா கிழங்குகளையும் தோல் நீக்கி தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.

தோல் சீவியதும்
தோல் சீவியதும்

கிழங்கினை 1/4 இன்ஞ் தடிமன் அளவிற்கு வட்ட வடிவமாக துண்டுகளாக்கி தண்ணீரில் போட்டுக் அலசி எடுத்துக் கொள்ளவும்.

வட்டமாக வெட்டியதும்
வட்டமாக வெட்டியதும்
நன்கு அலசியதும்
நன்கு அலசியதும்

பின்னர் ஒரு பாத்திரத்தில் வட்ட வடிவமாக வெட்டிய கிழங்குகளைச் சேர்த்து மூழ்குமளவுக்கு தண்ணீர் சேர்த்து மஞ்சள் பொடி மற்றும் தேவையான உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

கொதிக்க வைக்கும் போது
கொதிக்க வைக்கும் போது

கிழங்குகள் முக்கால் பாகம் வெந்ததும் (அதாவது கிழங்கினை நசுக்கும் போது நசுக்குப்படும் அனவுக்கு) அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

பின்னர் கிழங்கில் உள்ள தண்ணீரை நன்கு வடித்து விடவும்.

ஒரு தட்டில் கிழங்குத் துண்டுகளை ஒன்றாக வைக்கவும்.

இதனை நல்ல வெயிலில் ஓரிரு நாட்கள் காய வைத்து எடுக்கவும்.

உலர வைக்கும்போது
உலர வைக்கும்போது

சிறுகிழங்கு துண்டுகள் நன்கு உலர்ந்ததை உறுதி செய்து, காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

காய வைத்ததும்
காய வைத்ததும்

வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பினை சிம்மில் வைக்கவும். பின்னர் சிறுகிழங்கு துண்டுகளை சேர்த்து வறுத்து எடுக்கவும்.

சுவையான சிறுகிழங்கு வத்தல் தயார்.

குறிப்பு

சிறுகிழங்கு துண்டுகள் விரைவில் கருகி விடும் ஆதலால் எண்ணெய் சூடேறியதும் அடுப்பினை சிம்மில் வைத்து வத்தலை வறுக்கவும்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.