குட்டி சாக்பீஸ் – படிப்பது எப்படி – பாகம் 11

ஹசன் அன்று தனது சீடர்களுடன் ஒரு கிராமத்துக்கு வந்தார்.

அந்தி மயங்கும் அந்த மாலை நேரத்தில் ஒரு சிறுவன் அவனது வீட்டுத் திண்ணையில் ஒரு விளக்கினை வைத்து ஏதோ விளையாடிக் கொண்டிருந்தான்.

அந்த சிறுவனுக்கு அருகே வந்து ஹசன் பார்த்தார்.

சிறுவன் ஒரு தீக்குச்சியினை உரசி விளக்கினை ஏற்றினான். அதன் சுவாலை காற்றில் அப்படியும் இப்படியும் அசைந்தாடிக் கொண்டு இருந்தது.

அது மாலைக்கருக்கல் நேரம் என்பதனால் விளக்கின் வெளிச்சம் அதனை சுற்றித் தெரிந்தது.

அந்த வெளிச்சத்தில் தனது கை விரல்களை விதம் விதமாக‌ சிறுவன் காட்ட அது ஒவ்வொரு வடிவமாக நிழலில் தெரிந்தது.

அதனைப் பார்த்து ரசித்து சிரித்த வண்ணம் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அருகில் வந்த ஹசன் “பூ…” என ஊத அந்த விளக்கு அணைந்து விட்டது. சிறுவன் சற்று மிரட்சியுடன் ஹசனைப் பார்த்தான்.

அவனிடம் ஹசன் “தம்பி இந்த விளக்கின் வெளிச்சம் எங்கே போனது?” என்று வினவினார்.

அந்த சிறுவன் எந்த யோசனையும் செய்யாமல் சட்டென்று “எங்கே இருந்து வந்ததோ! அங்கேயே போய்விட்டது” என்றான்.

உடனே ஹசன், “பலே!” என்று சிறுவனைப் பாராட்டி விட்டு தனது சீடர்களிடம் சொன்னார்.

“அன்று நீங்கள் என்னுடைய குரு யார் என்று கேட்டீர்கள் அல்லவா! இப்பொழுது இந்தக் கணத்தில் இந்த சிறுவன்தான் என் குரு” என்றார்.

புரியாமல் விளித்த சீடர்களைப் பார்த்து ஹசன் மேலும் சொன்னார்

“உயிர் உடலைப் பிரிந்து எங்கே செல்கிறது? என்ற வினாவிற்கு நான் இந்த கணம் வரை விடை தெரியாமல் இருந்தேன். இதோ இந்த சிறுவன், தனது பதிலால் உயிர் எங்கே இருந்து வருகிறதோ அங்கேதான் செல்கிறது என எனக்குத் தெள்ளத் தெளிவாக விளக்கி விட்டான். இப்போது இந்த சிறுவனும் எனக்கு ஒரு குருநாதர்தான்” என்றாராம்.

கற்றுக் கொள்ளும் தீவிரம் மட்டும் நம்மிடையே இருந்தால் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு உன்னத பாடங்களைப் புகட்டும் ஆசிரியர்கள்தான். தெருவெங்கும் நமக்குப் பள்ளிக்கூடங்கள்தான்.

சரி இப்ப சொல்லட்டுமா! என்னோட குருமார்கள் யார் யாரென்று? சரி அதையும் என்னோட வழக்கமான பாணியில் ஒரு கதை சொல்லி சொல்லட்டுமா!

அது ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சகிலா என்ற ஆசிரியை குழந்தைகளைப் பார்த்து ஒரு சுவாரசியமான விஷயம் கேட்டாங்க!

“அதாவது ஒரு சிறு கற்பனை; அடுத்த ஜென்மத்துல மறுபடியும் பிறக்க வாய்ப்பு கிடைத்தால் நீங்க எல்லோரும் என்னவா பிறக்க விரும்புவீங்க? வரிசையாக ஒவ்வொருத்தரா சொல்லுங்க பார்ப்போம்”.

உடனே வகுப்பில் ஒவ்வொருத்தரா எழுந்து சொல்ல ஆரம்பிச்சாங்க

“மிஸ் நான் வந்து ரோஜாப்பூ”

“வாவ்! ஆனா ஏன்?”

“ஏன்னா அப்பத்தான் நான் அழகா வாசனையோட இருப்பேன். ஓ குட்!”

அடுத்து “மிஸ் நான் மயில்.”

” ஹாஹா! ஏன்?”

“அதுக்கு மழை மேகம் பிடிக்கும்! எனக்கும் பிடிக்கும் அதனால….”

“செம!….”

அடுத்து, “மிஸ் நான் பட்டாம் பூச்சி ஏன்னா! அதுக்கு இறக்கை இருக்கும். அதனால பறக்கலாமில்லையா!”

“செம…செம”

அடுத்து, “மிஸ் நான் மான். அதுதான் நல்லா துள்ளி துள்ளி ஓடும்.”

“மிஸ் நான் மரம் அதுலதான் நிறைய பறவை வந்து தங்கும்…”

“வாவ்!”

“மிஸ் நான் பாரதி. பெரிய மீசை வச்சிக்கலாம் அல்லவா!”

“ஹா ஹா ஹா…”

அடுத்து “மிஸ் நான் முயல். ஏன்னா அது உங்களுக்குப் பிடிக்கும்….”

“சரி மிஸ், எங்களையே கேட்டுட்டு இருக்கிறீங்களே…… இப்போ நீங்க சொல்லுங்க?”

“நானா….. நான் வந்து ஒரு சாக்பீஸா பிறக்கணும்.”

உடனே வகுப்பறை முழுவதும் ஒரே சிரிப்பு.

ஒரு குழந்தை, “ஏன் மிஸ்? போயும் போயும் ஒரு சாக்பீஸா பிறக்கணும் என்று சொல்லுறீங்க?”

“ஏன்னா? வெறும் கரும்பலகை ஏதும் கத்துத் தராதே…. நீ கத்துக்க தன்னையே இழக்கிறது சாக்பீஸ்தானே! ஒரு எழுத்து கத்துக் கொடுத்தாலும் போதும். அதுக்காக தேய்கின்ற வாழ்க்கை எவ்வளவு சுகம் மற்றும் அழகு தெரியுமா?” பெரிதாக புன்னகைத்தார் ஆசிரியை.

அறை முழுக்க பிரமிப்புடன் இருக்கும் போது மெல்ல எழுந்த ஒரு சிறுமி, “மிஸ் நான் அப்போ குட்டி சாக்பீஸா பிறக்க விரும்புகிறேன்” என்றாள்.

பின் எழுந்தது “நாங்களும் குட்டி சாக்பீஸ்! நாங்களும் குட்டி சாக்பீஸ்”! என்ற குழந்தைகளின் ஏகோபித்த குரலொலி.

அப்போது எதேச்சையாக ஆசிரியையின் கையில் இருந்து விழுந்து குட்டியானது ஒரு முழுநீள சாக்பீஸ்….

இப்படித்தான் திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகில் அமைந்துள்ள ஆவடையானூர் புனித அருளப்பர் பள்ளியின் தெரசம்மாள் டீச்சர், அருளப்பன் சார், சாந்தா சிஸ்டர், அற்புதமேரி டீச்சர், லுார்து அந்தோணி சார், தமிழ் ஆசிரியைகள் பால்கனி டீச்சர் மற்றும் சலேத் சிஸ்டர்,

ஆழ்வார்குறிச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியின் வேதியியல் பேராசிரியர்கள் திருக்குமர சுப்பையா, ரங்கமணி, மகாதேவன் மற்றும் தமிழ் ஆசான் மு.செ.குமாரசாமி,

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி வேதியியல் பேராசிரியர்கள் ஞான சேகரன், சண்முகசுந்தரம், முருகேசன், ராஜசேகரன், பாலசுப்பிரமணியன் மற்றும் ஸ்டாலின் சுப்பிரமணியன் போன்ற முழுச் சாக்பீஸ்களைப் பார்த்து குட்டிச் சாக்பீஸாக மாறியவன்தான் நான்.

ஒரு வியாபாரக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எனக்கு ஆசிரிய வாழ்வின் மீது மோகம் ஏற்படக் காரணமாக அமைந்தது மேற்சொன்ன எனது ஆசிரியர்களுடன் எனக்கு ஏற்பட்ட சுகமான அனுபவங்கள்தான்.

இன்று கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் நான் மாணவர்களிடம் படிப்பதில் உள்ள சில நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளவே இந்தத் தொடரை எழுதினேன். இந்தக் கட்டுரையையும் சேர்த்து மொத்தம் 11 கட்டுரைகள் இந்தத் தொடரில் உள்ளன.

நான் சொல்ல வந்த கருத்துக்களை எல்லாம் சிறு சிறு கதைகள் மூலம் விளக்கியுள்ளேன். மாணவர்கள் அவற்றைப் படித்து, நல்ல கருத்துக்களை உள்வாங்கி வாழ்வில் வளம்பெற வாழ்த்துகிறேன். அவை வாழ்வின் உச்சத்திற்கு உங்களை வழி நடத்தும்.

உச்சத்தில் என்றும் இருக்க, எப்போதும் மாணவனாக இருக்க வேண்டும் என உங்களை அன்புடன் வேண்டுகிறேன்.

இது வரை இனிது இணைய இதழில் நான் எழுதிய‌ படிப்பது எப்படி தொடர் கட்டுரைகளை வாசித்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இனிது இணைய இதழ் ஆசிரியர் முனீஸ்வரன் அவர்களுக்கும், அவரை எனக்கு அறிமுகம் செய்த எங்கள் கல்லூரி முதல்வர் முனைவர் சுந்தரபாண்டியன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

படிப்பது எப்படி தொடர் இத்துடன் நிறைவுற்றது. மீண்டும் மற்றுமொரு படைப்புடன் இனிது இணைய இதழ் மூலம் உங்களை சந்திக்கின்றேன்.

மு​னைவர் ​பொ.சாமி
வேதியியல் இ​ணைப் ​பேராசிரியர்
வி.இ.நா. ​செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர் – 626 001
கைபேசி: 9443613294

முந்தையது உன்னதமான(ண)வன் – படிப்பது எப்படி? – பாகம் 10

6 Replies to “குட்டி சாக்பீஸ் – படிப்பது எப்படி – பாகம் 11”

  1. ஒவ்வொரு பதிவும் எனது நினைவுகளில் வந்து செல்லும்.

    ஆனால் இந்த பதிவு என்னை ஒரு மிகவும் சிறிய சாக்பீஸாக மாற்றியது ஐயா திரு சாமி அவர்கள் மூலமாக!

    நன்றி ஐயா.

    இன்னும் நிறைய எழுதுங்கள்….

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.