ஒரு காட்டில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அம்மரத்தில் மைனாக்கள், குருவிகள், காகங்கள், அணில்கள், கிளிகள் உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் வசித்து வந்தன.
ஒருநாள் காட்டில் திடீரென தீப்பிடித்தது. காட்டுத் தீயானது அம்மரத்திற்கும் பரவியது.
மரத்தில் வசித்த உயிரினங்கள் அனைத்தும் தங்களைக் காத்துக் கொள்வதற்காக வேறு இடங்களுக்குச் சென்றன.
அம்மரத்தில் வசித்த குருவி ஒன்று மட்டும் அம்மரத்தினை விட்டு பிரியமனமில்லாமல் அங்கேயே இருந்தது.
எப்படியாவது மரத்தைக் காப்பாற்ற நினைத்தது.
திடீரென அதற்கு யோசனை ஒன்று தோன்றியது.
அருகில் இருந்த குளத்தில் இருந்து தனது அலகினால் நீரினை எடுத்து வந்து மரத்தில் தெளித்து தீயினை அணைக்க முயற்சி செய்தது.
தீ அணையவில்லை.
குருவி மீண்டும் மீண்டும் நீரினை எடுத்து வந்து மரத்தில் தெளித்துக் கொண்டே இருந்தது.
குருவியின் விடாமுயற்சியைப் பார்த்த மேகம் மனம் இளகி மழையைப் பொழிந்தது.
காட்டில் பற்றிய காட்டுத்தீ அணைந்தது. குருவி மகிழ்ந்தது.
குழந்தைகளே!, நல்ல நோக்கத்தோடு செய்யப்படும் விடாமுயற்சிக்கு மற்றவர்களின் ஆதரவும் கிடைக்கும்; அதன் மூலம் வெற்றியும் கிடைக்கும்.