குழந்தையோடு
பேசத் தெரிந்திருக்கிறது
பொம்மை!
கொதிக்கும் உலையில்
குதித்து நீந்துகிறது
அரிசி!
இறந்த பின்னும்
இன்னொரு முறை நீந்திக் கொள்கிறது
குழம்பில் மீன்!
நீந்தியும்
கடக்க முடியவில்லை
தொட்டியில் மீன்!
எதைத் தின்றாலும்
எட்டிப் பார்க்கிறது
மீசை!
யார் பயமுறுத்தியதோ
தெரியவில்லை; அலறியது
ஆந்தை!
காரணமே இல்லாமல்
தோகை விரித்து ஆடியது
கரும்பு!
யாவரும் ஒரே நிறம்
என்றது
நிழல்!
குட்டிக்கரணம் போட்டு அழுது அடம்பிடித்து
குரங்கு பொம்மை வாங்கியது
குழந்தை!
கண்கள் தின்று கொண்டிருந்த செய்தித்தாளை
அசை போட்டுக் கொண்டிருந்தது
மனம்!
எல்லா மொழியையும்
அறிந்திருக்கிறது
பேனா!
சொல்லிக் கொடுக்க எப்போதும்
தயாராகவே இருக்கிறது
புத்தகம்!
இரவில் பாடம் நடத்துகிறது
கரும்பலகையில் இருந்த எழுத்துக்கள்
இருக்கைகளுக்கு!
உதை பட்ட வலியால் அறையில்
ஓய்வு எடுத்துக் கொள்கிறது
கால்பந்து!
மௌன விரதம் இருக்கிறது
விடுமுறையில்
வகுப்பறை!
மை தீர்ந்ததும்
மௌனி ஆகிறது
பேனா!
ஆவிகள் எல்லாம் ஒன்றுகூட
மறு பிறப்பு எடுக்கிறது
மழை!
வகிடெடுக்கும் வாய்ப்பை
இழந்து விட்டது
வழுக்கை!
காலம் கடத்துவதால்
கோபத்தில் கொட்டி விடுகிறது
பூக்கள்!
தூக்கத்தில் வெளியீடாகும்
குறும்படங்கள்
கனவு!
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250
மிக அற்புதமாக குறுநகை பூக்கள் வெளிவந்திருக்கிறது.
ஹைக்கூவின் இன்னொரு வடிவமாக இதை கூறலாம் அல்லது இதுவே ஹைக்கூவாக தான் இருக்கிறது.
ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு குறும்படம், ஒரு அழகியல் பார்வை, கண்ணோட்டம் அமைந்திருக்கிறது. சிறப்பாக இந்த நடை அமைந்திருக்கிறது.
வாழ்த்துக்கள் கவிஞருக்கு!