கூடாதோர் இடத்தினில்
கூடித்தான் குழைந்தேனோ
ஆடாத ஆட்டங்கள்
ஆடித்தான் களித்தேனோ
போடாத வேஷங்கள்
போட்டுத்தான் நடித்தேனோ
கேடான கொடுஞ்செயலை
செய்துதான் முடித்தேனோ…
பொய்மட்டும் பேசித்தான்
புகழினை அடைந்தேனோ
மெய்கொன்று மேதினியில்
மெத்தையான் நடந்தேனோ
கைகொட்டி சிரித்தே தான்
கலங்கத்தை விளைத்தேனோ
செய்யாத தீஞ்செயலை
செய்துதான் திளைத்தேனோ…
மாற்றானின் மனையாளை
மனதாலே நினைத்தேனோ
போற்றாது தாயைத்தான்
புறக்கடை விடுத்தேனோ
ஆற்றாது அரும்பணி
அயர்ந்துதான் கிடந்தேனோ
தேற்றாது குடும்பத்தை
தெருவிடுத்துக் கடந்தேனோ…
மதுமாது மோகத்தில்
மயங்கியே கிடந்தேனோ
பொது ஒன்றை எனதென்று
பொய்யுரைத்து வளைத்தேனோ
விதி என்று வீண்பேசி
மதிகொன்று நடந்தேனோ
அதிகார பலம் காட்டி
அநீதியாய் ஆண்டேனோ…
பாசமாய் நிதம்பேசி
படுகுழி கரைத்தேனோ
நேசமாய் முகம் காட்டி
நெஞ்சத்தை எரித்தேனோ
ஈசனே தென்னாட்டு
நேசனே செவிமடுத்து
பேசவே வேண்டும் நீயும்
பெரும்பிணி பாவம் போக்க…
குற்றத்தை மறைக்காது
கூறுதல் வேண்டும் என்
குறைகளை பொறுத்தல் வேண்டும்
கூத்தனே கருணை வேண்டும்
பற்றற்ற நின்பாதம்
பணிகின்றேன் பாவம் போக்க
அற்புத தெய்வமே
ஆடலுக்கு அரசே! வா! வா!!
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250